தினம் ஒரு பாட்டு தத்துவம் - 7 = 95

காலம் கெட்டுக்கிடக்கிற நாட்டினிலே
ஜாலங்கள் புரிவது சுலபமில்லே…!
கலகம் பரவுகின்ற நாட்டினிலே
கலவரங்களுக்கு பஞ்சமில்லே…!

நீதி செத்துக்கிடக்கிற நாட்டினிலே
நிம்மதியாய் வாழ முடியலே…!
ஜாதி பார்க்கின்ற நாட்டினிலே
மேதையாய் ஆவது எளிதில்லே..!

உண்மை உறங்குகிற நாட்டினிலே
மேன்மையா எதுவும் நடக்கலே…!
அன்மை காலமாய் நாட்டினியே
அன்னிய சக்திகள் மிரட்டுதே..!

அரசியல் சாக்கடைகள் நாட்டினிலே
வாக்கு வங்கிகள் நடத்துதே..!
அய்ந்து ஆண்டுக்கு ஒருமுறை
பணத்தை வாரி இறைக்குதே !


எத்தனை கட்சிகள் ஆண்டாலும்
பட்டினி சாவுக்கு பஞ்சமில்லை..;
அத்தனை வசதிகள் இருந்தாலும்
பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை..

சாலை அமைப்பதில் கொள்ளையடா
அதை சரிவர அமைப்பதில்லையடா
பாதாள சாக்கடை திட்டமடா – அதன்
பணிகள் மிகவும் மந்தமடா…!

வாகன எண்ணை சேமிக்க
வானொலி டீவியில் பிரச்சாரம் !
அரசின் திட்டங்கள் துவக்கி வைக்க
ஆயிரம் வாகனங்கள் ஊர்கோலம் !

ஆட்டு மந்தைகள் உள்ளவரை
ஆட்சியாளருக்கு இல்லைகுறை
சட்டசபைக்கு வருவதற்கே
தெருவெங்கும் தாறை தப்பட்டை !

அய்ந்து வருட ஆட்டமாம்
அவர்கள் சொல்வதே சட்டமாம் !
பயந்துப் பதுங்கிப் போனாலும்
பாயும் அதிரடி கூட்டமாம் !

நேர்மை என்ற சொல்லுக்கு
யார் பெயரை இங்கே சொல்வது ?
வாய்மை தவறி நடப்பவரையே
சிறப்பு விருந்தினராய் அழைக்குது !

வெள்ளையனை வெளியேற்றி
சுதந்திர காற்றை சுவாசித்தோம் – இன்று
கொள்ளையர்கள் கைகளில் சிக்கி
சுக்கு நூறாய் உடைகின்றோம் !

எழுதியவர் : சாய்மாறன் (4-May-16, 9:32 pm)
பார்வை : 63

மேலே