குழந்தை தொழிலாளர் - போட்டிக்கவிதை

குழந்தை தொழிலாளர்கள்
கருவாக்கப்படுவதில்லை
உருவாக்கப்படுகிறார்கள்.

ஒரு குடிக்கார அப்பனோ
குறுகிய புத்தி சித்தியோ
கருமி பணக்காரனோ
கிருமி புத்திக்காரனோ
காரணமாகுகிறார்கள்
உருவாகுகிறான் ஒரு குழந்தை தொழிலாளி.

வறுமை என்னும் மாயைக்குள்
யாரோ ஒருவனின் சோம்பேறித்தனத்திற்கு
இரையாகி இம்சைபடுகிறான்.

பசியோடு அவன் இருப்பான் உணவை
ருசி பார்க்க வந்திருக்கும் எஜமானர்களுக்கு
கைகளிரண்டும் பறிமாறும்
அவன் கண்களிரண்டும் பசியாறும்.

அழுக்குச் சட்டை அழுக்காகும்
வாழ்க்கை திருகாணியாய் தினம் சுற்றும்
வண்ணக் கனவுகள் எல்லாம் வண்டி சக்கரங்களிடையே சிக்கி சாகும்.

தட்டுத்தடுமாறி பேருந்தில் ஏறி
பொது அறிவு புத்தகங்கள் விற்கையில்
பேரம் பேசப்படும் அவனது அறியாமை.

பள்ளிக்கூட வாசலில் தினம் நிற்பான்
இலந்தைப்பழத்தோடு தன் ஏக்கங்களையும் விற்பான்
அங்கு வீசுகின்ற காற்றிலே பாடம் கற்பான்.

வீரமான தெய்வத்திற்கு முன்
நெற்றியில் பட்டையோடு
சட்டையில்லாமல் நிற்பான்
சில்லரைக்காக சிறுவன்.

தீபாவளி பட்டாசுக்கு கரியாகுவான்
ஒவ்வொரு திருவிழா சமயத்திலும்
சத்தமாய் வெடிக்கிறது
சிவகாசி பட்டாசு சிறுவர்களின் ஓலம்.

குடல் புடுங்கிடும் நாற்றத்தில்
குடிக்கார மிருகங்களுக்கு கூலி வேலை செய்கையில்
'என்ன இது' என்று குடித்துப்பார்க்கும்போது
உருவாகிறான் அங்கே ஒரு "குடி"மகன்.

மூடர்களே பூக்களைப் பறிக்காதீர்கள்
விட்டுவிடுங்கள்
அவை நாளையின் பழங்கள்.

ஒழிக்கப்பட வேண்டியது குழந்தைதொழிலாளர்கள் அல்ல
உருவாக்குபவர்களை ஒழியுங்கள்
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை வரட்டும்.

- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (7-May-16, 8:29 pm)
பார்வை : 2959

மேலே