மீண்டும் ஒரு நாள்

மீண்டும் ஒரு நாள்
- கிருஷ்ணா.

********************************
குறிப்பு: இந்த சிறுகதை நான் முன்பெழுதிய "பின் ஒரு நாள்" என்ற சிறுகதையின் தொடர்ச்சியாகவே எழுதப்பட்டுள்ளது.
********************************
அன்று பானுமதியின் பிறந்த நாளில் அவளைச் சந்தித்துவிட்டு வந்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள்.

கபிலனின் தோழன் சீனு குளியலறையிலிருந்து வெளிப்பட்டவுடன் கேட்டான்.

"டே அதான் உன் ஆளு உனக்கு எந்த பதிலுமே சொல்லலையே. பின்ன யாருக்குடா மெசேஜ் பண்ணுற?"
கேட்டுக் கொண்டே கண்ணாடி முன்னாடி போய் நின்றுகொண்டான்..

"வேற யாருக்கும் இல்லைடா.. அவளுக்குத்தான்." என சொல்லி அலைபேசி திரையை சீனுவின் கண்முன்னே காட்டினான்.

"டே.. டெய்லி "குட் மார்னிங்", ஹேவ் எ நைஸ் டே" இததான் சொல்லுறியா? டே இரு, அதென்னடா? ""ஹேவ் எ மியூசிக் டே" புலம்பி குழப்பமாய்க் கேட்டான் சீனு.

"அவள் மியூசிக் கேப்பாடா?"

'அதுக்கு??" சரி என்னமோ பண்ணித்தொல" கபிலனிடம் அலைபேசியை கொடுத்து விட்டு கண்ணாடி பக்கம் போனான் சீனு.

""ஹேவ் எ கிரேட் டே" என பானுமதிக்கு அனுப்பிவிட்டு நிறுவன அடையாள அட்டையை தேடிக்கொண்டிருந்தான்.

அலைபேசி சிணுங்கும் சத்தம் கேட்டது. சாதாரணமாய் திறந்து பார்த்தான். பானுமதியிடமிருந்து "குட் மார்னிங்" என பதில் வந்திருந்தது.

"பாத்தியாடா? இத அனுப்பவே இவளுக்கு இத்தனை மாசம் ஆயிருக்கு. இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிப்பாள்" என சீனுவிடம் கபிலன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் அலைபேசி சினுங்கியது.

"உன்ன பாக்கணும்" அவளிடமிருந்து.

"எங்கே? எப்போ?" னு உடனே ஆர்வமாய் பதில் இவனிடமிருந்து.

"ஆபிஸ்ல தான் இருப்பேன். வந்துட்டு கால் பண்ணு"

"ம்ம்ம். சரி" என பதில் அனுப்பி குதிப்பதற்குள்ளக அவளிடமிருந்து மேலும் ஒன்று.

"ஈவ்னிங்கா வா. பகல் ஒரு மணிக்கு வந்து கூப்டாத. எங்கிட்ட குடை இல்ல."

"நான் எடுத்திட்டு வரவா?" னு கேட்டுவிட்டு காத்திருந்தான். கபிலன்.

பதில் வரவே இல்லை.

சமயம் சரியாய் 4.20 ஐ தாண்டி மெதுவான ஒட்டமென்றாலும் நிற்காத ஓட்டத்தில் இருந்தது.

பானுமதி மெல்ல அவளது நிறுவனத்தை விட்டு வெளியே நடந்து வந்தாள். அவள் சற்று அருகில் வரும் வரை காத்திருந்து விட்டு பின் சாலையின் குறுக்கேயுள்ள பாதசாரிகள் கடப்பதற்கான மேம்பாலத்திலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டே மெல்ல இறங்கி வந்தான் கபிலன்.

அவள் வரவும் இவன் படியிலிருந்து இறங்கவும் சரியாய் இருந்தது.

"ஹோய்.. சாரில வந்துருக்க? நல்ல இருக்கியா?" மரகதப் பச்சைப் புடைவையில் நேர்த்தியாய் தலை சீவி புன்னகையுடன் நின்றிருந்தாள் பானு.

அதை பார்த்தவுடன் ஏற்கனவே விழுந்தவன் மீண்டும் விழுந்துவிட்டான்.

கபிலன் கேட்டதும் அவளிடமிருந்த புன்னகை போய் நக்கலாய் ஒரு பதில் வந்தது.

"ம்ம்.. நீ வருவல்ல. அதான் சாரி"

கபிலன் வாய்பிளக்க தயாராகும் நேரம்

"இல்ல.. கம்பனி ல ஒரு பங்க்சன். அதான் சில பேர் சாரி ல வந்துருக்கோம்"

கபிலன் உடனே சமாளித்துக் கொண்டு " என்ன இன்னைக்கு வர சொல்லிருக்க? பர்த்டேக்கு தான வர சொல்லுவ?" என கேட்டான்.

"பர்த்டேவா இருந்த நான் கூப்டாமலே நீ வந்துருப்ப " சொல்லிவிட்டு சாலையை பார்த்து மனதுக்குள் சிரித்தாள். கபிலனும் அவ்வாறே சாலையின் மறுபுறம் திரும்பி சிரித்துக் கொண்டே அவள் வந்த வழியினை நேராய் தொடருவது போல அந்த சாயுங்கால வேளையில் பானிபூரி கடை, பழரசக் கடை என கூட்டம் அலைமோதிய ராஜீவ் காந்தி சாலையில் இருவரும் நடக்கத் தொடங்கினர். கபிலன் அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தான். அவளும் எதுவுமே பேசவில்லை.. இருவரின் கால்கள் மட்டும் என்றோ தொடங்கிய கடிகாரம் போல நேராய் போய்கொண்டிருந்தன.

சரி... எப்படியும் அவள் வாய் திறக்க மாட்டாள் என முடிவு செய்து, கபிலன் பேச முற்படும் போது அவளின் குரலோசை கேட்டது.

"என்ன சார்ட்டா முடி வெட்டி, ஏதோ பண்ணி லைட்டா பாலிஸ் ஆயிருக்க செம சாப்பாடோ? இப்டி குண்டாயிருக்க?" கிண்டலாய் கேட்டாள் பானுமதி.

கபிலனின் சிரிப்பு வியப்பில் அதிகரித்துக் கொண்டே போனது.

" ஹோய் .. என்ன? என் டயலாக்லா நீ பேசுற?"

"சரி.. இனிமே பேசல.."

"எது நான் குண்டா இருக்கேனா? எல்லாரும் பிட் ஆ இருக்கேன் னு சொல்றாங்க" சந்தேகத்துடனும் கவலையுடனும் கேட்டான் அவன்.

"ம்ம்ம்..ம்ம்.. பிட் ஆ தான் இருக்க" வாய்க்குள்ளாக முனகினாள் அவள்.

"இப்படியே நேரா எவ்ளோ தூரம் போக?" சட்டென்று நின்று கேட்டான் கபிலன்.

அங்க ரோடு கிராஸ் பண்ணி திரும்ப அப்படி நடக்கலாம்" சொல்லிவிட்டு நடக்க முற்பட்டாள் பானுமதி.

"ஹோய்.. எதாவது காபி ஷாப் கு போலாம்"

"டைம் இல்ல.. லீடு சீக்கிரம் வர சொல்லிருக்கான்"

எதுவு பேசாமல் இருவரும் சாலையை கடக்க நின்றார்கள். கபிலன் அவளின் முன்னாள் போய் நின்று வாகனங்கள் ஏதும் வராத சமயம் வரை பார்த்து "போகலாம்" என சொல்லி அவளிடம் திரும்பினான். ஆனால் அவள் ஏற்கனவே பாதி சாலையை கடந்திருந்தாள். வேகமாய் அவள் பின்னே ஓடினான்.

சாலையை கடந்து இருவரும் எதிர்புறமாக நடந்தனர். மீண்டும் அமைதியிலே. கபிலனுக்கு எதற்காக வரச்சொல்லி இருப்பாள் என்ற யோசனை இருந்தாலும் அவளே சொல்லிவிடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது.

பொறுமையுடன் இருந்து பார்த்தான் அவள் ஏதும் பேசுவதாக இல்லை. மௌனத்தை கலைக்க நினைத்தவன் "லஞ்ச் சாப்டியா?" எனக் கேட்டான்.

"பச்ச்.." என் உச் கொட்டியவள். பேசத் தொடங்கினாள்.

"ஹேய்.. நீ எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா? அப்டினா இப்பவே கேளு" என்றாள் அவளது முகத்தில் களைந்து பதற்றமும் துடிப்பும் நிலை கொண்டது.

"என்ன கேட்க?" புரியாமல் விழித்தான்.

"என்ன வேணும்னாலும் கேளு. கேட்க நெனைச்சதெல்லாம் கேளு" இப்போது அவளது துடிப்பும் படபடப்பும் பலமடங்கு அதிகரித்து லேசாய் வியர்க்க தொடங்கியது அந்த மாலை வேளையிலும்.

"என்ன இப்படி கேட்கிறாள்" என புரியாமல் திகைப்புடனும் குழப்பத்துடனும் நின்ற அவன் சரி கேட்கலாம் என முடிவு செய்து " நீ எதாவது சொல்லணும் னு நினைக்கிறாயா?" என சொல்ல வாயெடுத்து பின் முடிவை மாற்றிக் கொண்டான்.

"பானு.. ஹோய்.. பானு.." அவள் திரும்பினாள்.

"எனக்கு உன்கிட்ட நெறைய கேட்கணும். ஏதேதோ கேட்கணும்" ஆனா அதுக்கான நேரம் இது இல்ல.."

இருவரும் நடப்பதை நிறுத்திவிட்டனர்.

"இல்ல! இது சரியான டைம் தான்.. நீ கேட்க நினைச்சதெல்லாம் கேளு. ப்ளீஸ்.." பதற்றத்தின் உச்சியில் அவள்.

"பானு புரிஞ்சுக்கோ.. எதுக்கான விடையையோ நீ நெனைச்சுட்டு கேள்வியை மட்டும் என்ன கேட்க சொன்னா, நான் எப்டி கேட்க?" கபிலன் குழப்பமின்றி தெளிவாய் பேசினான்.

மேலும் இரண்டு நிமிடம் மௌனமாய் இருந்தாள் பானுமதி. சாலையில் போகும் வாகனங்களை பார்த்துக் கொண்டு ஆழ்ந்த யோசனை! தீவிர யோசனை!

மீண்டும் ஆறுதல்படுத்தினான் கபிலன்.

"பானு என்ன ஆச்சு? எதா இருந்தாலும் சொல்லு"

தரையைப் பார்த்துக்கொண்டே பேசத்தொடங்கினாள் பானுமதி.

"கடைசி மூணு நாளா எனக்கு என்ன ஆச்சுன்னே தெர்ல.. தூங்க மணி 3.30 கு மேல ஆகுது. அதுக்கு முன்னாடி தூக்கமே வரமாட்டுது.ஏதோ பைத்தியம் புடிச்ச மாதிரி எதையோ யோசிச்சுட்டு இருந்தேன். நார்மலா எதையுமே பண்ண முடில. கல்யாணம் லா எப்டி னு தெர்ல. கல்யாணம் பத்தி யோசிக்க முயுமானே தெர்ல. ரெண்டு நாள் மெசேஜ் கு ரிப்ளை பண்ணலாம் னு நெனைச்சு அப்புறம் வேணாம் னு இருந்துட்டேன். காலைல உனக்கு ரிப்ளை பண்ணதுக்கு அப்புறம் ஓரளவுக்கு நார்மலா பீல் ஆச்சு.சத்தியமா சொல்றேன் மூணு நாள் நான் உன்னதான் நெனைச்சுட்டு இருந்தேன்" சொல்லி முடித்தும் அவள் தரையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அனைத்தையும் பொறுமையாய் கேட்டவன்.

"புரியல...." என ஒற்றைச் சொல்லில் முடித்தான்.

தலையை நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்து "என்ன புரியல?" என கோபத்தோடு கேட்டாள்.

கபிலன் முகத்தில் சிரிப்புடன் "ஒன்னுமே புரியல" எனச் சொல்லிவிட்டு அவளது கண்களை விட்டு வெளிவந்த இருதுளிக் கண்ணீரைத் துடைத்தான்.

கபிலனது சிரிப்பைப் பார்த்து பின் அவளது கோபம் போய் சிரிப்புடன் அவனைப் பார்த்து கேட்டாள்.

"இப்ப மட்டும் என் கண்ணைப் பாக்குற. உனக்கு வெட்கமா இல்லையா? தலையை குனிஞ்சுக்கல?"

"இல்ல" என்று வாயாலும் தலையை ஆட்டியும் சொன்னான் கபிலன்.

"மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். இவனது மகிழ்ச்சி யாருக்கும் தெரியாமலும் புரியாதது போலவும் அனைவரும் அவர்களது வேளையில் தீவிரமாய் இருந்தனர் அந்த சாலையோரமாய் இருந்தவர்கள். சுற்றிப் பார்த்த்தவன் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனைப் போல் திரும்பி கேட்டான்.

"திடீர்னு என்ன? அந்த மூணு நாளைக்கு முன்னாடி என்ன நடந்தது?"

அவன் அப்படி கேட்டதும் திரும்பாமல் கால்களைப் பின்னால் எடுத்து வைத்து " காரணம் சொல்லணுமா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்..ஆமா.." என்பதுபோல் தலையை ஆட்டினான்.

"அப்டினா.. கையைக் கொடு" என்றுச் சொல்லி வேகமாய் அவளது கையை நீட்டினாள்.

கபிலனுக்கு உற்சாகம் புத்துணர்வு மகிழ்ச்சி மூன்றும் வாய்வழியே புன்னகையாய் பொங்க ஆர்வமாய் கைகொடுக்க வந்தான்.

"டக்கென" கையை எடுத்துக் கொண்டாள் பானுமதி.

"ஹேய்." ஏமாற்றத்தில் கத்தினான் கபிலன்.

"கையைக் கொடு"

"ஹ்ம்ம்ஹூம்"

"காரணமெல்லாம் சொல்லவேண்டாம். கையைக் கொடு" கேட்டுகொண்டே இவன் முன்னேற அவள் "ஹ்ம்ம்ஹூம்" சொல்லிகொண்டே பின்னோக்கி நடந்தாள்.

"இப்ப கொடுப்ப பாரு" என மனதில் நினைத்துக் கொண்டு கையில் "ஜெல்லி" யை எடுத்தான் கபிலன்.

அதைக்கண்டதும் வேகமாய் எடுக்க வந்தவள் அவன் கை வருவதைப் பார்த்தவுடனே கைகளை பினனால் கொண்டு சென்றாள். "எனக்கு ஜெல்லி வேணாம். லேட்டாயிடுச்சு" என சொல்லி போகத்தொடங்கினாள்.

கபிலனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

"ஹோய்..பானு.. கை வேணாம். என்னை பிடிச்சுருக்கா இல்லையான்னு சொல்லிட்டு போ" சற்று சத்தமாய் கேட்டான் அவன்.

போக முற்பட்டவள் திரும்பி " சொல்ல முடியாது. நீ காத்துகிட்டே இருக்க வேண்டியதுதான்" எனச் சொல்லி சாலையை கடக்க தொடங்கினாள்.

மகிழ்ச்சியில் சிரிப்புடன் கபிலனது வாய் ஏதோ முணுமுணுத்தது.

"அதுக்கு நான் எப்பவுமே ரெடி"

************************மீண்டும் ஒரு நாள் - முற்றிற்று*******************************************

எழுதியவர் : கிருஷ்ணா (13-May-16, 4:05 am)
Tanglish : meendum oru naal
பார்வை : 758

மேலே