வெயில்

வெற்றுக்குடம் சுமந்து
அலையும் என் வறண்ட பூமியில்
தாகங்கொண்ட உயிர்களே
புதைக்கப்பட்டிருக்கிறது

நீரின்றி நாவறளும்
என் தீரா தாகத்தில்
சூரியஜந்து
உடல் மின்னிச்சிரிக்கிறது.

உச்சி வெயிலின்
வெம்மையில்
நீரற்ற குளமென என்னில்
நீளும் வரட்சியின்வெடிப்புகள்

நீர்சத்துத்தாவரம் தேடி
கால்நடைகளோடு நானும்
கால்நடையாகிறேன்.

தகவல் சொல்லவே
உயிரோடிருக்கும்
ஒற்றை
ராணுவவீரனின்
பரிதவிப்புடன்
எச்சிலின் ஈரத்தில்
இன்னும் உயிரோடிருக்கிறேன்

நீர்த்துவாரம் தேடித்துலாவும்
என் நாவு
சூரியனில்
முட்டித்திரும்புகிறது.

நிழல் கூட உதிராத
இலையில்லா
மரங்களின் கீழ்
சூடு தாங்காது சுருளும்
புழுவாகி
நினைவின் மசி
காயத்துவங்குகையில்
எங்கேனும் நீர் கண்டால்
நீரோடு சேர்த்து
நிழலையும்
அருந்துமென் தாகம்

- நிலாகண்ணன்

எழுதியவர் : நிலாகண்ணன் (15-May-16, 12:57 pm)
Tanglish : veyil
பார்வை : 966

மேலே