இந்த தேதி அந்த வருடம் -சந்தோஷ்

-----------------------
மே 18
அந்த வருடத்தில்
ஊடகத்தில் இந்த தேதி
முக்கியத்துவம் பெற்றிருந்தது.

தமிழகத்தின் சில மனிதர்களின் கண்ணீருக்கு
இந்த தேதி
அந்த வருடத்தில்
பெரும் காரணம் பெற்றிருந்தது.

இந்த தேதியின்
அந்த வருடத்தில்
தமிழனத் தலைவனென சொல்லப்பட்டிருந்தவரை
கை நீட்டி.. குற்றஞ்சொல்லியே
தங்கள் ஆத்திரங்களை
தீர்த்துக்கொண்டு..தங்களை
உத்தமபுத்திரனாய்
தீர்மானித்துக்கொண்டனர் சில தலைவர்கள்.

இந்த தேதியின்
அந்த வருடத்தில்
போராளித் தலைவனுடன்
எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன்
தங்களை மாவீரன் தம்பி என்பதாக
விளம்பரப்படுத்திக் கொண்டனர் சிலர்.

இந்த தேதியின்
அந்த வருடத்தில்
நெஞ்சுப் பொறுக்காமல்
வீதியிறங்கி கதறியழுது
போலீசாரின் தடியடியில்
மாளத்துடித்த மானத் தமிழர்களும் உண்டு.

ஆம்!
இதே தேதியின்
அந்த வருடத்தில்தான்
தமிழகத்தின் தொப்புளாய்
இந்திய வரைப்படத்தில்
தொங்கி கொண்டிருந்த
ஈழத்தை சுற்றிலும்
கடல் கொந்தளிக்கவில்லை
இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது.

செத்துப்போன
ஓர் ஈழச்சியின் மார்பில்
பால் குடித்திருந்த மழலையின்
முதுகில் தோட்டாவின் சிதறல்கள்.

மற்றொர் ஈழத்தாயின் வயிற்றில்
கருவறையை கிழித்து
காலை நீட்டிய சிசுவை
ராட்சத பீரங்கி வாய்
கவ்விக்கொண்டிருந்தது.

புதைக்குழியில் தமிழ் பட்டாம்பூச்சிகள்
சிறகுகளை இழந்து
யாக்கைகளை புதைத்து
கைகளை வானில்
ஏதோ ஒரு குற்றப்பத்திரிக்கையினை
எழுதிக்கொண்டிருந்தது.

சில வீர ஆண்களோடு
அப்பாவி ஆண்களும்
கால் தனி
கை தனியாய்
ஆகாய குண்டு மழையில்
பிளந்துக்கிடந்தது.

அன்பு போதித்த
புத்தன் .. எப்போதும் போல
அப்போதும் தியான நிலையில்தான்
கிடந்தான்..
அவன்..
கிடந்தானோ.. செத்தானோ..
விசாரிக்க நேரமில்லை
உலக நீதிகளுக்கு..

அந்த ஈழத்து தேசத்தில்
இதே தேதி..
அந்த 2009ம் வருடம்
நிகழ்ந்தது
இந்த யுகத்தின் பெரும்
இனப் படுகொலை...
இந்த யுகத்தின் மாபெரும்
தமிழீழ தலைவனை
இழந்த நிலை.

இந்த தேதி....
தமிழக சட்டசபை தேர்தலுக்கு
முன்பு வந்திருந்தால்..
இந்த தேதி..
இந்த வருடம்
அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கும்
அதிக லாபமும் பெற்றிருக்கும்.

ஆம்..
ஈழத்தின் கண்ணீரை
நக்கிச் சுவைக்கும்
எமது தாய் தமிழகத்தின்
அரசியல் நாக்குகள்.
--


இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (18-May-16, 5:48 pm)
பார்வை : 77

மேலே