சேத்திரத் திருவெண்பா - பாடல் 22 - திருவொற்றியூர்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின். 22

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, '’ஆலகால விசத்தை உண்ட கழுத்தினை உடைய திருவொற்றியூரில் வாழும் இறைவன் ஆதிபுரீசுவரராய் வணங்கு’ என்று கூறுகிறது.

பொழிப்புரை:

ஆலகால விசத்தை உண்ட கழுத்தினை உடைய சிவபெருமானாகிய இறைவன் ஆதிபுரீசுவரர் வாழும் திருவொற்றியூரில் ஓடு ஏந்தி இரந்து உண்ணும் துறவு வாழ்க்கை அமையப் பெற்றால், எளிமையாக மூன்று உலகையும் ஆட்சி செய்து குடிமக்களை நன்கு காப்பாற்றியும், அவ்வாறு காப்பதில் கொஞ்சமும் தளர்ச்சியடையாமலும் உடைய பேற்றினைப் பெற்றாலும் அதனை நான் விரும்ப மாட்டேன் என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

தஞ்சம் - எளிமை, தலையளித்தல் - குடிகளை நன்கு காப்பாற்றுதல்,

எஞ்சாமை - அங்ஙனம் காப்பதில் இளையாமை.

அத்தகைய பேற்றினைப் பெற்றாலும் அதனை வேண்டேன்` எனப்படுகிறது.

`கரந்து உண்ட` என்பதை `உண்டு கரந்த` என முன்பின்னாக வைத்து விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க வேண்டும்.

ஒற்றியூர் - தொண்டை நாட்டில் உள்ள கடற்கரைத் தலம்.

`ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறித்தது.

திருவொற்றியூர்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் இருக்கும் சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகும்.

சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்துள்ள திருவொற்றியூர் திருக்கோவில், வழிபாட்டுச் சிறப்புடையதும், வரலாற்று சிறப்புடையதுமான திருக்கோவிலாக விளங்குகிறது.

இத்திருக்கோவிலில் இறைவன் பெயர்: ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறி யும் பெருமான், தியாகேசர்.

இறைவி பெயர்: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-May-16, 10:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே