உலகத்தோர் தூயர் பழிச்சற்கு உரியராய் உயர வெறுக்கை கட்டளையாம் – இன்னிலை 19

பட்டாங்குத் தூயர் பழிச்சற் குரியராய்
ஒட்டின் றுயர வுலகத்தோர் - கட்டளை
யாம்வெறுக்கை யின்றி யமையாரா மையாவின்
ஆம்வெறுக்கை நிற்க வுடம்பு. 19 - இன்னிலை

பொருளுரை:

உலகத்துள்ள மக்கள் உண்மையாக தூய்மையுடையவராகவும் துதிப்பதற்கு உரியவராகவும் ஒப்பில்லாமல் உயர்வதற்கு செல்வமே உரைகல்லாகும்.

அச் செல்வமில்லாமல் வேறொன்றாலும் அளப்பதற்கும் பொருந்தாதது ஆகும்.

செல்வமின்றி உடல்மட்டும் நின்றால், காட்டுப் பசுவைப் போல வெறுப்பதற்கு உரியதாகும் எனப்படுகிறது.

கருத்து:

உலகத்தில் மக்களையளந்து உயர்வு தாழ்வு காட்டுவதற்குக் கட்டளைக் கல்லாக இருப்பது செல்வம். செல்வமில்லாதவர் உடம்பு காட்டுப் பசுப்போல வெறுக்கப்படுவதாம்.

விளக்கம்:

பட்டாங்கு - உள்ளபடி, ஒட்டு - ஒப்பு,

கட்டளை என்பது பொன்னை உரைத்து மாற்றுப் பார்க்கும் ஒரு கல், உரையாணியும் ஆம்.

செல்வம், எத்துணை பெருகியுள்ளதோ அத்துணை உலகத்தார் மதிக்கப்படுவார். செல்வம் இன்றெனில் மதிக்கப்படார். எனவே அவர் பெருமையை யளந்து காட்டுவது செல்வம் என்பது தோன்ற "வெறுக்கை கட்டளையாம்" என்றார்.

கட்டளைக்கல்லாற் பொன்னின் மாற்றுக் கண்டு உயர்வு தாழ்வு கூறுவதுபோல உலகமக்களின் உயர்வு தாழ்வு அவரவர் படைத்திருக்கும் செல்வத்தையே நோக்கி அறியலாம் என்பது கருத்து.

மைஆ – கரிய பசு. மை என்ற அடைமொழி காட்டுப் பசுவைக் குறித்தது.

இப்பசு நாவினால் நக்கினால் இன்பமாகப் தோன்றும் என்பதும், நக்கிய இடத்திலுள்ள தசை குருதி முழுவதும் அதன் வாய்க்குட் சென்று பின்னர் மிகுந்த துன்பத்தை விளைக்கும் எனப்படுகிறது.

"ஆமாபோ னக்கி யவர்கைப் பொருள்கொண்டு" என்பது நாலடியார். காட்டுப் பசுவிற் பால் கறப்பதும் இயலாது. அதனைக்கண்டவர் அதன் பண்பினை நினைந்து வெறுப்பது போலச் செல்வமில்லாதவன் உடம்பு கண்டவரும் வெறுப்பர் எனப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-16, 10:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே