பூயல் படுக்குந் திருவத்தனார் – இன்னிலை 8

தூயசொல் லாட்டுந் துணிவறிவுந் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு மடிச்சேரா வாறு. 8 இன்னிலை

பொருளுரை:

தூய்மையான சொற்களைப் பேசுவதும், அறிஞர் உண்டென்று ஆய்ந்து துணிந்தபொருளை யறிவதும், கவலைகள் வந்து பொருந்தியபோது மனங்கலங்காத அளவு உற்ற துணையின் வலிமை பெற்றிருப்பதும் ஆகிய இவற்றை பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினையுடையவரே அடுக்கி வருகின்ற பிறவியில் சேராதவாறு அதனைக்களைவர்.

கருத்து:

தூயசொற் பேசுதலும், செம்பொருட்டுணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான் என்பது.

விளக்கம்:

தூயசொல் என்பது பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனில்சொல் என்ற நான்கினையும் நீக்கிப் பேசுஞ் சொல்லையுணர்த்தியது. வாய்மையும் இன்சொல்லும் ஆகும்.

துணிவு அறிவு என்பது துணிவினை அறியும் அறிவு எனப் பொருள்படும். கடவுள் உண்டு, இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, முத்தி, நரகம் இவையுண்டு என்று சான்றோர் துணிந்தவற்றைத் தானும் அறிந்து கொள்ளல்.

குறிப்பு: பூயல் - பொருந்துதல். மடி - வயிறு; இது பிறவியை உணர்த்தியது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-May-16, 10:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே