நினைவென்னும் நீரோடை

நிலவோடு விளையாடும்
இரவுநேர முகில்கூட்டம்
மனதோடு நிழலாடும் – உன்
நினைவென்னும் கனிக்கூட்டம்.

என் மனதோடு
ஒரு நீரோடை
நில்லாது ஓடும்.....
அது, நதி சுமக்கும்
நறுமலரைப் போல்
உன் நினைவைச் சுமக்கும்.....

அடியே,
நீ பின்னிய குழல் கண்டு
என் மனமாடுது முன்பின்னாய்
நீ தலைவாரிய நேர்கோட்டில்
நில்லாமல் வரும் என் கால்கள்
உன் கன்னக் குழியில் மட்டும்
ஏனோ.....
தடுமாறுது என் நடையும்.

வெகுநாளாய்க் காத்திருந்தும்
சிறு வளையல்களோடு – ஏன்
கைகோர்த்தாய்
உன் சிறு கை அசைவிலும்
அவை எனைக் கண்டு சிரிக்கிறதே.....

நாள்தோறும் உன் அழகை
நான்பேசக் கேட்டுத்தான்
என் வீட்டுப் பூவெல்லாம்
எனைக் கண்டு முறைக்கிறதே.....
உன்னைத் தழுவி நகரும் காற்றோ
நின்ற இடத்தில் சிலநேரம்
நினைவிழந்தே சுழல்கிறதே.....

நதி சுமக்கும்
நறு மலரோ
நதி தாங்கா நிறையா
என் மனம் சுமக்கும்
உன் நினைவுகளோ
வெகுநாள் தாங்காதே.....


நீ பேசும் மொழியெல்லாம்
எனக்கு,
தெவிட்டாத மழலைச் சொல்லே.....
அச்சொல்லில் நீ எனக்கு
எப்போது அமுதைத் தருவாய்.....
எப்போது அமுதைத் தருவாய்.

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (5-Jun-16, 10:33 pm)
பார்வை : 506

மேலே