யாவரெலாம் ஏதமில் மண்ணாண்டு கொள்வார் குடிவாழ்வார் – ஏலாதி 46

களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்
ஒளியான் விருந்திற் குலையான் - எளியாரை
எள்ளானீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து. 46 – ஏலாதி

பொருளுரை:

கள்ளையுண்டு தன்னிலை மறந்து களிப்புடன் இல்லாமலும்,

கள் போன்ற மயக்கம் தரும் பானங்களை உண்ணாமலும்,

கள் போன்ற மயக்கம் தரும் பானங்களை உண்டு களிப்பாரைக் காணாமலும்,

வந்த விருந்தினரை விரும்பிக் கவனிப்பதற்குப் பயந்து ஒளியாமலும்,

விருந்தினரை கவனித்து மனம் நோகாமலும்,

எளியவர்களை ஏளனம் செய்யாமல் ஏற்றோர்க்குக் கொடுத்துத் தானும் உண்பானாயின் குறைவில்லாது தானே மண் அனைத்தும் ஆண்டுகொள்வதும் அன்றித் தன் இல்லற வாழ்க்கையினும் ஓங்கி வாழ்வான்.

கருத்து: செருக்காமை முதலியன உடையான் குடிபெருகி நாடாள்வான்.

நாட்டுக்கு ஏதமின்மையாவது நல்ல விளையுளும் நற்குடிகளுமுடைமையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-16, 8:27 am)
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே