கண்ணாடிச்சிதறல்கள்

கண்ணாடிச்சிதறல்கள்
==================================================ருத்ரா

உன் முகம் பார்த்து படித்தேன்
எவருக்குமே
எட்டாத ஒரு
"எட்டுத்தொகையை"!

உன் விழி விழுந்து புதைந்தேன்
எவருமே
அண்டாத
மாயப்புகை மண்டிய‌
கனவுகளின் கிடங்கு.

உன் சொல் கேட்டு கரைந்தேன்
ஏழு கடலுக்குள்ளும்
காதலுக்கு அர்த்தம் சொல்ல‌
முடியாத‌
அகராதிகளின்
சொற்குழம்பில்.

உன் நடைகண்டு வியந்தேன்.
அங்காடிகள் போதாது
ஆடைகள் போதாது
உன் அசைவே ஒரு ஓவியம்.
காலடியில்
ரவிவர்மாக்களும் பிக்காஸோக்களும்
தொலைத்த‌
தங்கள் தூரிகைகளை
தேடிக்களைத்தனர்..

உன்னையே
விண்ணிலும் மண்ணிலும்
நரம்பு நாளங்கள் ஆக்கி
மின்னலில்
துடித்து துடித்து
கைப்பற்ற எண்ணி
ஓடினேன்...ஓடினேன்.

முட்டி மோதி
சுக்கல் சுக்கலாய்
கண்ணாடிச்சிதறல்கள்.
என் முகம் பார்க்கும்
பிம்பத்திலும்
உன் முகமாக அல்லவா
தெரிந்தாய்!

===============================================

எழுதியவர் : ருத்ரா இ.பரமசிவன் (7-Jun-16, 3:35 am)
பார்வை : 49

மேலே