கடத்தப்படும் வரலாறு - 2

வான்முட்ட வளர்ந்ததாம் கோபுரங்கள்
மாயங்கள் செய்தனவாம் சிற்பிகொண்ட
சிற்றுழியும் சிறுவிரலும் கரும்பாறையில்
அவைநின்றதாம் காலத்தை வென்றே.

சிற்றுழி கொண்டே சிறுகச்செதுக்கி
கற்பாறை ஆனதாம் அழகுச்சிற்பம்
காலவோட்டத்தில் கலை வளர்ந்தே
பெற்றெடுத்ததாம் செப்புத் திருமேனி.

ஐவகை உலோகங்கள் கலந்தே
ஐம்பொன் சிலைகள் பிறப்பெடுத்ததாம்
அவைகொண்டதோ பொன்னோடு வெள்ளி
செம்பும் ஈயமும் துத்தமுமாகும்.

மூவெட்டு ஆயிரமாம் பழங்கோயில்
அவைகொண்ட ஐம்பொன்கள் நூறாயிரமாம்
நாற்பது சதமோ பொன்னாகும்
ஏனையுலோகமோ மூவைந்து சதமாகும்.

- செ.கிரி பாரதி.

விளக்கம்:
செப்புத் திருமேனி – செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட சிலை. கண்டராதித்தன் எனும் சோழ மன்னனின் மனைவியான செம்பியன் மாதேவி(90 ஆண்டுகள் வாழ்ந்தவர்) கோயில்களுக்குச் செப்புத் திருமேனிகள் செய்தளிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

ஐம்பொன் சிலைகள் – ஐந்து உலோகங்களின் கூட்டுக் கலவையாக உருவாக்கப்படும் சிலைகள். அவை, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம்.

‘மூவெட்டு ஆயிரமாம் பழங்கோயில்’
(3x8=24) – 24 ஆயிரம் பழமையான கோயில்கள் தமிழகத்தில் உள்ளன.

‘அவைகொண்ட ஐம்பொன்கள் நூறாயிரமாம்’
நூறாயிரம் என்பது ஒரு லட்சம். ஏறக்குறைய ஒரு லட்சம் ஐம்பொன் சிலைகள், மேற்குறிப்பிட்ட 24 ஆயிரம் கோயில்களில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

‘நாற்பது சதமோ பொன்னாகும்’
ஐம்பொன் சிலைகளில் உள்ள தங்கத்தின் அளவு 40 சதவிகிதம்.

‘ஏனையுலோகமோ மூவைந்து சதமாகும்’
ஏனைய நான்கு உலோகங்களான வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை தலா 15 சதவிகிதம்(15+15+15+15=60%) ஆகும்.

எழுதியவர் : செ.கிரி பாரதி (8-Jun-16, 11:34 am)
பார்வை : 142

மேலே