வடிவில்லா வரைபடமாகும்

பசுமையின் விரிப்பிங்கே
பார்வைக்கு எழிலாகிறது ..
காட்சியின் அழகுமிங்கே
கவிதையாய் மாறுகிறது !

சாய்ந்திருக்கும் அந்திவேளை
ஓய்வெடுக்கும் இவ்வேளை ..
தேங்கிய நினைவுகளால்
தேய்கிறது மணித்துளிகள் !

காசில்லா இந்நிலை
மாசில்லா சூழ்நிலை ..
அலைபாயும் உள்ளமும்
அமைதியாகும் இவ்விடம் !

நடந்திட்ட நிகழ்வுகளும்
கடந்திடும் ஒருகணம் ...
நடக்கவுள்ள நிகழ்வுகளும்
நிழலாடும் ஒத்திகையாய் !

அலசிடும் ஆய்ந்திடும்
இதயத்தில் உள்ளோரை ...
தெரிந்திடும் தெளிந்திடும்
உள்ளமும் உணர்ந்தவரை !

சிதறியுள்ள சிந்தனைகள்
சிந்தையில் சீரடையும் ...
பதம்பிரிக்கும் நெஞ்சமும்
பதர்பிரித்த நெற்கதிர்களாய் !

அலைமோதும் ஆசைகளை
அசைபோடும் உள்ளமும் ...
அலைகளற்ற கடல்போல
அமைதியுறும் நெஞ்சமும் !

உடனிருந்த நண்பர்களை
உள்ளமும் நினைத்திடும் ...
விலகிநிற்கும் இதயங்களை
விரைவாக பட்டியலிடும் !

உதவிட்ட உள்ளங்களை
நன்றியுடன் நினைத்திடும் ..
உதவாத நெஞ்சங்களை
உதறிடவே வழிதேடும் !

வாழ்ந்திட்ட வாழ்வும்
வரலாறாய் தெரிந்திடும் ..
வாழவேண்டிய காலமும்
வடிவில்லா வரைபடமாகும் !

குற்றங்கள் புரிந்திருந்தால்
குறுகுறுக்கும் நெஞ்சமும் ..
குற்றமற்ற உள்ளங்கள்
குதூகலம் அடைந்திடும் !

மனமின்றி முடிக்கின்றேன்
மனதினில் குறையுடன் ..
மீண்டும் வந்தமர்ந்திங்கே
மிச்சத்தை எழுதிடுவேன் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jun-16, 4:00 pm)
பார்வை : 102

மேலே