அழகிய தேவதை

அவள் கூந்தல் வைத்திருக்கும்
குறுந்தொகை
ரம்பை ஊர்வசி மேனகையின்
கூட்டுத்தொகை

அவள் படித்த கல்லூரிக்
கல்லில் எல்லாம்
கள் வடிகின்றது

அவள் படித்த பள்ளி
வாயிலில் இன்னும்கூட
ஜொள் வடிகின்றது

அவள் மாதாவின்
பனிக்குடம் உடைந்து பிறக்கவில்லை
மார்கழிப் பனித்துளி
உடைந்தல்லவா பிறந்தாய்

என் பேனா மை குறையும்போதெல்லாம்
அவள் பெண்மை கவிதையாய்
நிறைந்து வழிந்தது காகிதத்தில்

கரும்பலகையில்
வார்த்தை வடிவ
வானவில் படம்
அது அவள் எழுதிய பாடம்

அவள் பூலோகத்தில் வாழும்
பூ லோகம்

அவள் புத்தகம் படிக்கும்போது
அவளுக்கோ அறிவு கிடைகின்றது
அதற்கோ அழகு கிடைக்கின்றது

அவள் முகம் தாமரை
அதனால்தான்
இந்திய நாட்டை ஆள்கின்றது

அவள் என் கனவுத்திரையரங்கை
ஆயுட்கால குத்தகை எடுத்தவள்

வித்தகம் ஏந்தி
நடிக்கச்செல்லாமல்
கையில் புத்தகம் ஏந்தி
படிக்கச்செல்லும் படிப்பழகி

பச்சைப் பாம்பை
கண்ணில் கொண்டவள்
பிச்சைக்காரனையும்
கண் இமைக்க வைப்பவள்

அவள் தலைமீது சுற்றும்
மின்விசிறி மட்டும்
மின்சாரம் நின்றும் சுற்றிக்கொண்டிருந்தது
அவள் கூந்தல் வாசம்
இயற்கையா செயற்கையா என்ற
குழப்பத்தில் தலை சுற்றிக்கொண்டிருந்தது

அவள் உணவருந்திய
வாழை இலைகூட
வாழ நினைத்தது அவளோடு

எழுதியவர் : குமார் (17-Jun-16, 7:40 pm)
Tanglish : alakiya thevathai
பார்வை : 1925

மேலே