கடற்கரை

சுயநலமாய் வாழுகின்ற சூட்சுமம் கொண்டு
=சுதந்திரமாய் ஊற்றெடுக்கும் சுகஆ சைபோல்
நயமுடனே தினந்தோறும் நல்லலை முத்து
=நகையுதிர்த்து கரைதொட்டு நடமா டிடுமே
பயமெதுவும் அறியாத பாலகர் போன்று
=பவனிவரும் அவ்வலைகள் பாடும் பாட்டு
சயனம்ற்றுத் தவிக்கின்ற சலனம் கொண்டோர்
=சஞ்சலத்தைத் தீர்க்கின்ற சலத்தா லாட்டு.

ஆயிரமே வாழ்வினிலே ஆட்டி வைத்து
=அவலத்தில் போட்டாலும் அடக்கிக் கொண்டு
தூயதுவாய் இருக்கின்ற தோற்றத் தோடு
=துயர்மடக்கி சிரிப்பதற்கு துணிவைக் காட்டும்
வாயினையே கரையோரம் வைத்துக் கொண்டு
=வகையாக சிரிக்கின்ற வதனம் ஏந்தி
கோயிலென அமைதிதரும் கொள்கை பூண்டு
=கொண்டிருக்கும் கடற்கரைகள் குமுறல் தீர்க்கும்

அதிகாலைப் புத்துணர்ச்சி அழிக்க வென்று
=அயர்ந்துறங்கும் மனிதர்களின் அலுப்பைப் போக்க
கதிரவனின் எழிற்கோலம் காட்டி அந்தக்
=கரையோர மணல்மேட்டில் கோலம் போட்டு
புதிதான காட்சிவைத்து பூரிப் பூட்டி
=புத்தெழுச்சி கொள்வதற்கு புன்சிரிப் பாக
சதிராடும் கடலலைகள் சங்கீ தமென்று
=சரிகமப இசைத்திருக்கும் சந்தோ சமாக

முன்பொருநாள் சுனாமியென மூர்க்க மோடு
=முரட்டுதன மாகவேதான் மூண்டெ ழுந்த
பொன்னலைகள் பூமிவந்த போது கரைகள்
=பொதுப்படையாய் அசையாமல் பார்த்தி ருந்த
இன்னல்களை சுமந்தவர்கள் இன்றும் கூட
=இதயத்திலே இரணத்தோடு இருப்ப தற்கு
தன்னலங்கள் கொண்டாளும் தலைமை போன்று
=தலைகுனியா திருக்குமிந்த தண்ணீர் சாட்சி

காற்றுவாங்க வருவோர்க்கு காதல் தந்து
=கைபிடிக்கச் சொல்லுகின்றக் கடற்கரை. இங்கே
நேற்றுவந்த பேர்களுமே நெஞ்சம் இனிக்கும்
=நேசம்பெற்று வாழ்வினிலே நிஜமாய் இணைந்து
ஊற்றெடுத்த அன்பினாலே உவகை கொண்டு
=உயர்வடையக் காரணமாய் ஊர்கள் எங்கும்
ஆற்றுநீரை கலப்பதுபோல் அன்பால் கலக்க
=ஆதரவுக் கரம்நீட்டி அணைக்கும் கடற்கரை

கரையோர மரநிழலில் கைகள் சேர்த்து
=காதலெனும் பெயரினிலே காமம் கொள்ளும்
முறைகேடு நடப்பதனை முழுதும் பார்த்து
=முகம்சுழிக்கும் கடலலைகள் முகத்தில் காறி
நுரையாக உமிழ்ந்தாலும் நோக்கம் வெல்ல
=நூதனமாய் தமைமறந்த நிலையில் சிலர்தம்
அரைநிர்வா ணம்காட்டும் அவலம் மட்டும்
=அரங்கேற்றும் கேவலத்தின் அடையா ளமாக..

படகெடுத்து கடல்மேலே பயணம் செய்து
=பகலெனவே இரவதனை பயின்று கொண்டு
உடனிருக்கும் அலைகளினை உறவாய் எண்ணி
=உறவுகளின் நலவாழ்வை உயிரில் ஏந்தி
திடமுடனே மீன்பிடிக்க துணிந்து விட்டத்
=தோழர்களை வழியனுப்பி துணையி ருக்கும்
கடற்கரையில் விடியலிலே கவலை போக்கும்
=கடல்மீன்கள் குவிகின்றக் காட்சியி முண்டு


கூடுகின்ற மக்களுக்குக் கொடுக்க வென்றுக்
=கூடைகளில் பலபொருட்கள் கொண்டு சென்று
நாடுகின்ற பணத்துக்காய் நயமாய் விற்று
=நாள்தோறும் பலமைல்கள் நடக்கும் பேர்கள்
வாடுகின்ற குடும்பத்தார் வாட்டம் போக்க
=வாய்விட்டுக் கூவுகின்ற வழக்கம் பார்த்து
ஓடுகின்ற நாட்களுக்குள் ஓய்வே இன்றி
=உழைப்பவர்க்கு கடற்கரைகள் உதவி செய்யும்

தேவையற்ற எப்பொருளும் தேக்கி வைக்கும்
=தீயகுணம் இல்லாத திந்தக் கடலும்
தேவையுற்றோர் நலன்கருதி தெளிந்த மனதால்
=தெரியும்படி ஒதுக்கிவைக்கும் திரவி யத்தை
சேவைமனப் பான்மையுடன் சேர்த்து வைத்து
=செலவுசெய்யும் கடற்கரையில் சுயநலம் இல்லை
தீவைப்போல் தனித்திருந்துத் தவிக்கும் மனிதன்
=தெரிந்துகொள்ள கடற்கரையில் தேடல் நூறு
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jun-16, 4:10 am)
Tanglish : kadarkarai
பார்வை : 463

மேலே