கல்லறை கனவுகள்

தாளிருந்தும்
மையிருந்தும்
தனிமையுந்தானிருந்தும்
ஏகாந்த காவியமதை
எழுத முடியவில்லை...
முனை மழுங்கிய
கோலிதனால்!...
உண்மை,நேர்மை, வாய்மையென
துளி மை கொண்ட
வரையறை கோடி!
ரணந்தோய்ந்த
காதற் பக்கங்களில்
எஞ்சி நிற்பது
பொய்மையும்
பெண்மையுமே!
உயிர்மெய்தனை
பிரித்தால்
உயிருண்டு!
மெய்யுண்டு!
உயிரதை
எப்படி பிரிப்பது?
அழித்தாலொழிய
வழியில்லை!
அணைத்துச் சென்றவள்
நீயடி!
கரங்கோர்த்து
நடைப்பயின்ற
கடற்கரை
நொடியதிலோ...
மடி மீது
துயில் கொண்ட
மகரந்த நொடியதிலோ
மூண்டிருக்கலாம்
சிறு
முரண்பாடு!
'உயிரே...உணர்வே'யென
அலங்கார சொற்கொண்டு
அடுக்கிய பொய்களை
ஆராவாரமாய்
ஏற்க முடிந்த
நம்மால்
ஏதோவொரு
மங்கிய பொழுதில்
மாலை வெயிலில்
மனம் கசந்தவொரு
யதார்தத்தை
ஏற்காமல் போனது
விதிதான்!
ஆம்,
உயிரிருந்து
உயிர் பிரிக்கும்
புதிய விதி!!
உணர்ந்த பின்னேனும்
கேட்டிருக்கலாம்
ஒரு மன்னிப்பு
சிறு தழுவலில்!
கேட்காமல் தடுத்ததெது?
சுயமா? கௌரவமா?
ஈருடலான ஓருயிருள்
உயர்ந்ததெது?
தாழ்ந்ததெது?
புரிந்தும்
பிரிவதெல்லாம் பேதமை
வாழ்க்கையடி!
நான் வென்றதாய்
நீயும்
நீ வென்றதாய்
நானும்
மாறி மாறி
நடிக்கிறோம்...
உயிர்க்காதல்
கொன்றபடி!
மழைத்தரா
இடி போலும்
தாகந்தீரா நீர் போலும்
தனிமையில் மாய்கிறது
சேர்த்து வைத்த
கனவுகள்!
தோற்ற காதல்
ஒவ்வொன்றுமே
நடைப்பிணம்தான்!
பிரிந்த மனங்கள்
ஒவ்வொன்றுமே
புதைந்த சவம்தான்!
இறப்புக்கு பின்னான
வீண் சடங்காய்
எனக்கே நேரட்டும்
முதலிலது!...
உலக பக்கங்களெல்லாம்
காகிதத்தில்
எழுதப்படுகையில்
காதல் பக்கங்கள்
மட்டுமே
கண்ணீரால்
எழுதப்படுகிறது!
இதோ
எழுதி முடித்துவிட்டேன்
என்
கல்லறை மீததை!!!
**********************************************

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (18-Jun-16, 11:14 am)
Tanglish : kallarai kanavugal
பார்வை : 222

மேலே