தேவதை

தவத்தால் கிடைத்த மகளிவள்
***தங்கச் சிலையாய் ஒளிர்பவள் !
கவலை தீர்க்கப் பிறந்தவள்
***கடவுள் தந்த வரமிவள் !
உவகைப் பொங்கச் செய்பவள்
***உலகை யாள வந்தவள் !
அவளே என்றன் வாழ்வினில்
***அன்பால் ஈர்க்கும் தேவதை !
கன்னல் பேச்சால் கவர்பவள்
***கனிவாய் மலர்ந்து சிரிப்பவள் !
பன்னீர்ப் பூவாய் மணப்பவள்
***பதுமை போன்ற வடிவினள் !
தென்றல் காற்றாய் தவழ்பவள்
***திங்கள் ஒளியாய்க் குளிர்பவள் !
என்றன் உள்ளம் மகிழ்ந்திட
***எனக்காய் வந்த தேவதை !
கண்ணின் மணியாய்த் திகழ்பவள்
***கவிக்குள் கருவாய் இருப்பவள் !
வண்ணம் கொஞ்சும் மலரிவள்
***வஞ்ச மில்லா அழகிவள் !
பெண்ணாய்ப் பிறந்த திருமகள்
***பெருமை சேர்பாள் என்மகள் !
மண்ணில் இவள்போல் இல்லையே
***மயங்க வைக்கும் தேவதை !