உலக நீரழிவு நோய் தினம்
உலகில், குறிப்பாக, வருவாய் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகளில் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளை, இந்நோய் தாக்கப்படாமல் தடுப்பதற்கு நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டுமென்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கேட்டுள்ளார்.
உலகில் ஏறக்குறைய 35 கோடிப் பேர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நீரழிவு நோயுள்ளவர்கள் தங்களின் இரத்தத்திலுள்ள
சர்க்கரையைச் சரியான விதத்தில் முறைப்படுத்த முடியாமல் உள்ளனர் என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்நிலை நரம்புச் சிதைவு, மாரடைப்பு, பார்வையிழப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு, உறுப்புகளை எடுத்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதால், பலர் வேலை செய்ய முடியாமல் ஊதியங்களை இழக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார், பான் கி மூன்.
நவம்பர் 14, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக நீரழிவு விழிப்புணர்வு தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சி மற்றும் பிற உடல் பயிற்சிகள், இந்நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.
நீரழிவு நோயை ஒழிப்பதில், உலகளவில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 2030ம் ஆண்டுக்குள் அதனை முழுவதுமாக ஒழிக்க வேண்டுமென்ற புதிய மில்லென்னியத் திட்டத்தையும் நினைவுபடுத்தியுள்ளார் பான் கி மூன்.
உலகில், வயது வந்தவர்களில், 11 பேருக்கு ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் நலவாழ்வுக்கென செலவாகும் நிதியில் 12 விழுக்காடு இந்நோய்க்குச் செலவாகின்றது.
: