சவம் பேசினால்

சவம் பேசினால்!

நடைமேடையில் பொதுமக்கள் தூறலாய் நிற்க
வாழ்க்கை பறிபோவதை எதிர்பாரா மடமையால் வருவதறியாது வாலிபனோடு வாதிட்டேன் நானும்
வெட்டரிவாள் வீசி கோரமாக வேட்டையாடினான்
காலை நிசப்பதத்தை கிழித்திட்ட என்ஓலம்
பின்பு முணங்குதல் நின்று அசைவுகள் நின்றது
தாடை கிழிந்து பற்கள் சிதற
குருதியாற்றில் உயிர் ஊசலாட
கூச்சலிட்ட நா உலருமுன் நாடியிழந்தேன்!
வலியால் அலறினேன் சீண்ட ஆளில்லை
கொலையாளி மறைந்தும் தீண்ட நாதியில்லை
இரண்டுமணி நேரம் உதிரத்தில் மிதந்தேன்
பிணமாய் பேசுகிறேன் சிந்திப்பீர் யாவரும்!
கடைசி அசையும் நிராசை ஆனது
கிழிந்த தேகத்தில் எதனை தானம் செய்வேன்?
நாளை, நடைமேடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
உபயம்: சுவாதியின் வன்கொலையென்று பதிவிடுங்கள்
ஜாதிக்கொரு சட்டம் இன் நாட்டில் உண்டா?
வெட்டரிவாள் எந்த ஜாதியையும் வெட்டும்
பிரேதத்தின் மீது பிராமன முத்திரை ஏன்?
ஜாதி வெறியில் தோய்ந்திட்ட சமூகமே!
வெட்டியவன் சிறுபான்மை இனத்தவன் என்ற வதந்தியேன்?
குருடர்களும், செவிடர்களுமாய் நின்ற பார்வையாளர்களே
கண்காட்சி பொருளாய் ஆனதா என் உருகுலைந்த தேகம்?
ஒன்றும் செய்யாமல் வெறிக்க நின்றதேன்?
உயிருள்ள ஜடங்களுக்குள் மனிதநேயம் பட்டுப்போனதா?
ஆவியாய் துரத்துவேனேன ஒதுங்கிக் கொண்டீரோ?
ஆழ் குழி அகல தோண்டி
என்றோ மனிதநேயம் புதைத்துவிட்டோம் நாம்
என் சாவை விமர்சிக்கும் ஊடகங்களே
என் அந்தரங்கத்தை கிசுகிசுக்கும் இதயங்களே
என் உறவுகள் அழும் அவலம் கேட்கிறதா?
மீளா துயரை மேலும் புகுத்தாதீர் அவர்களை தனிமையில் இருக்க விடுங்கள்
காலம் காயமாற்றும் கரிசனம் செய்க
ஆதாரங்கள் அழிந்துவிடும் தடயங்கள் மறைந்துவிடும்
நாளை எனக்கு காரியம் முடிந்துவிடும்
கொலையாளி இன்றும் சுதந்திரமாய் உலவுகின்றான்
சட்டமெனும் சவுக்கடி உரக்க பேசும்வரை
பெண்ணே என் கண்ணே ஜாக்கிரதை!

இப்படிக்கு சவம்

பின்குறிப்பு: சென்னை நுங்கம்பாக்கத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் சுவாதி மர்ம நபரால் 24/06/2016 வெள்ளிகிழமை காலை 6.30 மணியளவில் கொலை செய்யப்பட்டார்.

எழுதியவர் : அருண்மொழி (30-Jun-16, 9:17 pm)
Tanglish : savam pesinal
பார்வை : 127

மேலே