தினம் ஒரு தத்துவ பாட்டு - 22 = 152

“வம்புசண்டையை விலைக்கு வாங்குபவன் கோழை
வந்தசண்டையை விலக்கி விடுபவன் மேதை..!
வயிற்றின் உணவை வீணடிப்பவன் சோகை
விளைநிலத்தை விலைக்கு விற்பவன் ஊதை

ஒன்றும் தெரியாமல் இருப்பதென்பது அறிவீனம்
அனைத்தும் அறிந்து கொள்வதென்பது அறிவாழம் !
எதற்கும் துணிந்து நடப்பதென்பது கம்பீரம்
எதையும் முனைந்து பெறுவதென்பது அபாரம் !

சப்பைக்கட்டு கட்டுகின்றோம் செய்த தப்புக்காக
செய்வதை சரியாய் செய்தால் சப்பைக்கட்டு எதற்காக
தொப்பைவிழுமுன் யோசித்திருந்தால் நடப்பதில் சிரமம் வருமா
கொழுப்புசத்தை குறைத்திருந்தால் நோய்கள் பலம்பெறுமா.

மாச்சரியங்கள் கொள்ளாத மனிதர்கள் உலகில் யாரு ?
ஆச்சரியம்தான் அப்படியிருந்தால் அவனுக்கு தனிப்பேரு !
அச்சமென்பது மடமையென்ற பட்டுக்கோட்டையாரு
விட்டுச்சென்ற தத்துவம்தான் திராவிடத்தின் ஆணிவேரு !

பித்தலாட்டக்காரனுக்கு வக்காலத்து வாங்காதே – நீ
வக்கீலுக்கு படிச்சதுக்கு பச்சைத்துரோகம் செய்யாதே… !
மருந்துக்கும் மாத்திரைக்கும் நித்தம் அடிமையாகாதே - நீ
விருந்துக்கு அழைத்துவிட்டு வெறும்கையை விரிக்காதே !

கேடுகெட்ட பிழைப்பால் முதலாளி பொறுப்பா…?
பாடுபட்டு உழைப்பால் பாட்டாளியாய் இருப்பா..!
நாடுவிட்டு நாடுச்சென்று பிழிப்பது ஒரு பிழைப்பா ?
தாய்நாட்டில் என்ன இல்லை யோசித்து நடப்பா..!

தேசத்தை குறைக்கூறும் கொள்கையை விடப்பா
கோஷத்தை குறைத்து நன்மைகளை பெறப்பா
மோசத்தின் மூக்குடைத்து காக்கைக்கு பலியிடப்பா
நேசத்தை நட்டுவைத்து நாட்டுநலன் புரிப்பா..!

வஞ்சகத்தை வளர்ப்பது வாழ்க்கைக்கு உதாவாதே
நெஞ்சகத்தில் நஞ்சுவைத்து உத்தமனாய் நடிக்காதே
சங்கடத்தில் சிக்கிக்கொண்டு திக்குமுக்காடாதே
வங்கக்கடல் வற்றினாலும் வசீகரம் இழக்காதே…!

எழுதியவர் : சாய்மாறன் (2-Jul-16, 5:00 pm)
பார்வை : 117

மேலே