காதல் தோல்வியின் வலி

பள்ளிப் பருவமதில்
துள்ளித்திரியாமல்
அழகை அள்ளித்திரியும்
உன்னோடு என் காதலைச்
சொல்லித் திரிந்தேனடி
உன் நினைவில்
சொந்தமதைத் தள்ளித் திரிந்தேனடி

பள்ளியறையில்
மல்லிப்பூவதனை
வள்ளி உன் தலை சூட
வெள்ளிதோறும்
பல்லியாய்க் கோயில் சுவற்றில்
ஒட்டிக்கிடந்தேனடி
உன் தலையென எண்ணி
தலையணையைக் கட்டிக்கிடந்தேனடி

உன் ஜதி நடையில்
என் ஜாதி மறந்து
உன் மதியழகில்
மீதி மறந்து
வீதியில் நடந்தேனடி
போதையில் கிடந்தேனடி

காதல் என்ற மூன்றெழுத்து
காதில் நிறைந்ததடி
காமம் என்ற மூன்றெழுத்து
கனவில் நனைத்ததடி

வாலிபமோ சொல்வாங்கி
வாலியோடு வாலிபால் ஆடுதடி
என் வாணிபமோ உள்வாங்கி
வலியோடு வலிப்பால் ஆடுதடி

நீ உடலில் பூச்சுடியும்
தலையில் பூச்சூடியும்
தரையில் நடக்கும் பூச்செடியடி

நான் காதலெனும் காய்ச்சல் வந்து
அழுகாமல் அழுதுகொண்டிருக்கும்
காய்ச்செடியடி

ஜாதியெனும் ஜோதிவந்து
காதல் அதில் தீ வைத்ததடி
மதம் எனும் மதம் பிடித்து
சமூகமது குப்பையாகி ஈ மொய்த்ததடி

உன் கழுத்தில் மணக்கயிறு
தொங்குதடி
என் எழுத்தில் மணல் கயிறு
பொங்குதடி

நீ கணவனோடு
நானோ கனவுகளோடு

நீ பன்னீர்க் கவிதைகளோடு
நானோ கண்ணீர் விதைகளோடு

என் உடலை மட்டும்
உன்னிடம் விட்டுச்செல்கின்றேன்
உன் விரலை மட்டும்
கடைசியாய் ஒருமுறை தொட்டுச்செல்கிறேன்

நம் காதலுக்கு
என் உயிர் கொடுத்து
பரந்த வானில்
பறக்கவிடுகிறேன்

ஜாதி மத பேதங்களை
சமூகமது மறக்க விழைகிறேன்

வாழ்க நம் காதல்

எழுதியவர் : குமார் (3-Jul-16, 8:18 pm)
பார்வை : 1054

மேலே