அழகிய தமிழ் மகள்

இரவு சூழ்ந்தபூமி
விடியலை நோக்கி
பூமிக்கு விடியல்
தினந்தினம் நிச்சயம்..

வானம் வண்ணமயம்
நானும் வண்ணமயம்
இரசிப்பீர்கள்! மகிழ்வீர்கள்!
கொண்டாடுவீர்கள்! குதூகளிப்பீர்கள்!

ஏனடா ஏன்
உடமையாக்க துடிக்கிறீர்கள்?
ஏனடா ஏன்
கிட்டாதெனில் கிழித்தெறிகிறீர்கள்?

எதுநடந்தாலும் பெண்தான்!
பொறுப்பும் பெண்மீதுதான்
வெறுப்பும் பெண்மீதுதான்
என்னடா உங்கள் நியாயம்?

உணர்விழந்தாலும் உடமையிழந்தாலும்
உறுப்பிழந்தாலும் உயிரிழந்தாலும்
பெண்தானாம் பொறுப்பு!
மண்ணாகும் வாழ்க்கை!

பெண்ணென்ன உடமையா?
பெண்ணென்ன உரிமையா?
பெண்ணென்ன போகமா?
பெண்ணென்ன மோகமா?

ஆணாகிவந்த அகந்தையே!
ஆணாகிவந்த அறிவிலியே!
குத்திக்கிழிக்கவும் கழுத்தறுக்கவும்
பெண்ணுக்கும் தெரியாதா?

ஆணே எச்சரிக்கை!
அன்புநேசம் மட்டுமா?
வாய்ப்பேச்சு மட்டுமா?
வாள்வீச்சும் பேசுமடா!

ஆத்திரத்தில் அறிவிழக்காதே!
மமதையில் மூடனாகாதே!
அன்பாகி வெல்லப்பார்!
அறிவாகி உயரப்பார்!

அற்புதமான வாழ்வுண்டு
சிறப்பான இடமுண்டு
பொறுமைகொள்
வாழ்வை வாழ்ந்திடு!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (4-Jul-16, 12:47 am)
பார்வை : 329

மேலே