குழந்தை
தென்றல் பூவுக்கு நடத்திய
காம வேட்டையில்
தானாக வந்துவழிந்த தேனே!
ஞானத்தின் முதல் சொட்டாய்
பருகத் தெரியாமல்
தாய்பால் பருகிய மென்மை பாலே!
இருவேறு இனப்பிறப்புக்கு
அங்கிகாரம் கொடுத்த
அழகிய குருவே!
கலவி போர்களத்தில்
காமச்சண்டைக்கு பலமாதம்
ஓய்வு கொடுக்க வந்த பிறவியே!
உன் பிஞ்சு உடல் பார்க்கும்போது
மக்களுக்கு பஞ்சு கூட சற்று
கடினமாகத் தான் தெரியும்!
உன் முதல் புன்னகையில் தான்
தாயோ முழுபிறப்பு அடைகிறாள்!
மெத்தையில் தவழும் உயிர்
தலையணையே!!
தாயென்ற பட்டத்தை
அவளுக்கு தந்தது நீதான்!
அப்பா என்ற பட்டத்தை
அவனுக்கு தந்தது நீதான்!
இருந்தும் சிறுபிள்ளை
நீயென கூறுதல் சரியாமோ??
குமரனோ குமரியோ
கிழவனோ கிழவியோ
உன்னை கண்டபின்
அவரவர் பாவனைகளை
குழந்தையாய் மாற்றும்
அதிசயத்தை உன்போல் தர யாருண்டு?
புவியீர்ப்பு உன்மேல் காதல்
கொண்டதால் தானோ நீ
நிற்க முடியாமல் தவழ்கின்றாய்??
சிறுசிறு பாவனையில்
மனதை கொள்ளை கொள்ளும்
வண்ணப் பறவையே!
நீ கலவிக்கு பின்
பூத்த பூ!
நீ கணவன் மனைவி
வரைந்த முதல் உயிரோவியம்!