தெரிந்த புராணம் தெரியாத கதை

காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாகக் கேட்கப்பட்டும் படிக்கப்பட்டும் பழக்கப்பட்ட இதிகாசம்- ராமாயணம். மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தைத் தழுவி 12-க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராமனின் புகழ்பாடும் காவியங்களாகத் திகழ்கின்றன. இது பலருக்கும் தெரியும். ஆனால், 'சீதாயணம்’ என்ற காவியம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

'அயணம்’ என்பது வழிநடந்த பாதையைக் குறிக்கும். ஸ்ரீராமன் நடந்து சென்ற பாதையும், அவன் காட்டிய தர்மநெறிகளும் ராமாயணமாகத் திகழ்கின்றன என்றால், ராமாயணத்தின் தெய்வீகக் கதாநாயகி சீதை வாழ்ந்து காட்டிய வரலாறு 'சீதாயணம்’ எனப்படுகிறது. இதை, ராமாயணத்தின் ஒரு பகுதியாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் ராமாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில் ஸ்ரீராமனுக்கு உறுதுணையாக நின்று, அவன் அவதாரப் பணி நிறைவேற விஷ்ணு பத்தினி மகாலட்சுமி எடுத்த அவதாரமே சீதாதேவி.

தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீராமனின் பிறப்பு பற்றியோ, அவதார ரகசியம் பற்றியோ பல்வேறு பரிமாணங்களில் ராமாயணத்தில் பேசப்படவில்லை. ஆனால், சீதாதேவியின் பிறப்பு, தோற்றம் பற்றிய விவரங்கள் வித்தியாசமான பரிமாணத்தில் காணப்படுகின்றன. சீதையின் ஒரு அவதாரத்துக்குள் மூன்று, நான்கு அவதாரப் பரிமாணங்கள் காணப்படுகின்றன.

சரி, யார் இந்த சீதை?

வால்மீகி ராமாயணத்தின்படி, மிதிலை நகர் மன்னர் ஜனகர் ஒரு யாகத்தைச் செய்து முடித்து, தங்கத்தால் ஆன உழுகருவியை ஏர்கொண்டு பூட்டி நிலத்தை உழுதார். அப்போது, பூமியில் புதைந்து கிடந்த ஒரு வண்ணப்பெட்டகம் தட்டுப்பட்டு, அதனுள் இருந்து ஓர் அழகான பெண் குழந்தை அவருக்குக் கிடைத்தது. பூமித்தாய் தந்த புத்திரியாக ஏற்று, அவளுக்கு ஜானகி என்று பெயரிட்டார் ஜனகர். சீராட்டி வளர்த்த அந்த மகள் பெரியவள் ஆனதும், அவளுக்காக சுயம்வரம் நடத்தினார். யாராலும் தூக்கமுடியாத சிவ தனுஸை, தசரதன் மைந்தன் ஸ்ரீராமன் வளைத்து முறித்து ஜானகியின் கரம் பற்றினான். இந்த சீதாராம கல்யாணக் கதை அனைவருக்கும் தெரிந்ததே!

அதே நேரம், சீதையின் பிறப்பு ரகசியம் பற்றி 'அத்புத ராமாயணம்’ என்ற காவியத்திலும், ராவணனால் எழுதப்பட்ட 'இராவணீயம்’ என்ற நூலிலும் வித்தியாசமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தைதான் சீதை. தான் அன்றாடம் வணங்கும் சிவபெருமானின் இடப்பாகமாகத் திகழும் அன்னை பார்வதியே தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தான் ராவணன். ஆனால், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், அந்தக் குழந்தை விஷ்ணுவின் அம்சமுடையது என்றும், ராவணனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவுக்கு உதவவே அந்தக் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் கூற... அதிர்ச்சியானான் ராவணன். அந்தக் குழந்தையைக் கொன்றுவிட உத்தரவிட்டான். ஆனால், அவன் மனைவி மண்டோதரி, சிசுஹத்தி பெரும் பாவம் என்றும், அதனால் தங்களுக்குச் சந்ததியே இல்லாமல் போய்விடும் என்றும் எடுத்துக் கூறி, மன்றாடினாள். இதில் கொஞ்சம் மனம் இரங்கிய ராவணன், அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து, கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில், பனிபடர்ந்த ஒரு பகுதியில், பனிப்பாறைகளுக்கு நடுவில் பேழை ஒன்றில் வைத்து, விட்டுவிடுகிறான். இப்படிச் செய்தால், பனியில் உறைந்து அந்தக் குழந்தை மடிந்துவிடும் என நம்பினான்.

ஆனால் அதற்கு மாறாக, பனி உருகி, கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது அந்தப் பேழை. அது, மிதிலை நகரை அடைந்து பூமிக்கடியில் புதைந்தது. அந்தத் தருணத்தில்தான், மன்னர் ஜனகர் ஏர் பூட்டி உழுதார். குழந்தையும் கிடைத்தது. பூமியை உழும்போது கிடைத்த குழந்தை என்பதால், ஏரின் கூரான பகுதிக்கு வழங்கப்பட்ட 'சீதா’ என்பதையே குழந்தைக்குப் பெயராகச் சூட்டினான். ஜனகர் மகள் என்பதால் 'ஜானகி’ என்றும், மிதிலை நகரில் கண்டெடுக்கப்பட்டதால் 'மைதிலி’ என்றும் அழைக்கப்பட்டாள் சீதை. அவளுக்கு 'வைதேஹி’ என்றும் ஒரு பெயர் உண்டு.

தேவி மஹாத்மிய புராணத்திலோ சீதையின் அவதாரம் பற்றி முற்றிலும் வேறு விதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில், நாரதரிடம் பகவான் விஷ்ணுவே, 'மகாலட்சுமி துளசி தேவியாகவும், வேதவதியாகவும், சீதையாகவும் அவதரிப்பாள்’ என்று கூறுவதாக வருகிறது.

இந்தக் கதையை இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

த்ரேதா யுகத்தில் தர்மத்வஜன், குஜத்வஜன் என்னும் இரண்டு பேர் விஷ்ணுவை நோக்கிக் கடும் தவமிருந்து, மகாலட்சுமியே தங்களுக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என வரம் கேட்டுப் பெற்றனர். அதன்படி, தர்மத்வஜனுக்கு மகாலட்சுமியே பெண்ணாகப் பிறந்து, பிருந்தா எனப் புகழ்பெற்றாள். தன் பதிவிரதா தர்மத்தால், பிருந்தாவே 'துளசி’ எனும் செடியாகி, விஷ்ணு சேவை செய்து, நம்மால் வழிபடப்பட்டு வருகிறாள்.

இதே போல், குஜத்வஜனுக்கும் மகாலட்சுமி பெண் குழந்தையாகப் பிறந்தாள். பிறந்த சில மணி நேரங்களிலேயே, அந்தக் குழந்தையின் வாயிலிருந்து வேதங்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதனால், அவள் 'வேதவதி’ என்று பெயர் பெற்றாள். ஒரு கானகத்தில் தபஸ்வினிபோல தனிமையில் வாழ்ந்துகொண்டிருந்த அவள், விஷ்ணுவையே பதியாக அடைய வேண்டும் என்று கடும் தவம் புரிந்தாள். தர்மத்தைக் காக்க ஸ்ரீராமனாக அவதாரம் செய்யும் விஷ்ணுவுக்குப் பத்தினியாகி சேவை செய்ய வேண்டும் என்பது அவளின் ஆசை.

ஒருநாள், வேதவதி வாழ்ந்து வந்த கானகத்தின் வழியே ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான் ராவணன். யதார்த்தமாக வேதவல்லியை அவன் கவனித்துவிட, அக்கணமே அவள் அழகில் மயங்கினான். அவள் அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான். அதிர்ச்சியும் கோபமும் அடைந்த வேதவதி, எந்த ஒரு பெண்ணையும் அவளுக்கு விருப்பமில்லாத நிலையில் ராவணன் தொட்டால், அக்கணமே அவனது தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சாபம் கொடுத்துவிட்டு, அங்கே எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீயில் அக்னிப் பிரவேசம் செய்தாள்.

அப்போது, ''நான் மீண்டும் பிறந்து வந்து உன்னை அழிப்பேன்'' என்று சபதமிட்டு அக்னியில் பஸ்பமாகிவிடுகிறாள் அவள். அக்னிதேவனோ, வேதவதியாகத் தோன்றிய மகாலட்சுமியைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறான்.

பஞ்சவடியில் சீதா, லட்சுமணனுடன் ஸ்ரீராமன் வனவாசம் கழித்துக்கொண்டிருந்த நாளில், ஒருநாள் மாலையில் சந்தியாவந்தனம் செய்யும் வேளையில், அக்னி பகவான் ஸ்ரீராமன் முன் தோன்றினான்.

''ராமா! உன்னிடம் ஒரு பரம ரகசியம் சொல்லவே வந்தேன். சில நாட்களில் ராவணன் தன் மாயா சக்தியால் உன் மனைவி சீதாதேவியை சிறையெடுத்துச் செல்வான். அப்போது நான் உன் மனைவி சீதைக்குப் பதில் என்னுள் மறைந்திருக்கும் வேதவதியை மாயா சீதையாக்கி ராவணனுடன் அனுப்பிவிடுவேன். நிஜ சீதாதேவியை நான் பவித்ரமாகப் பாதுகாத்து வைத்திருப்பேன். ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு மாயா சீதை என்னை வந்தடைவாள். நிஜ சீதை உன்னை அடைவாள். அதுவரை இந்த ரகசியத்தை நீ யாரிடமும் வெளியிடக் கூடாது!'' என்றான் அக்னிதேவன். ஸ்ரீராமனும் அந்த ரகசியத்தைக் காப்பாற்றுவதாக சத்தியம் செய்து கொடுத்தான்.

இதன்படி, ராவணன் பர்ண சாலையில் இருந்து சீதையைத் தூக்கிச் செல்லத் திட்டமிட்டபோது நிஜ சீதைக்கு பதில் மாயா சீதையே (வேதவதி) ராவணனுடன் செல்கிறாள். அசோகவனத்தில் இருந்துகொண்டு சீதையின் கடமைகளையே அவள் செய்கிறாள். சாபத்தின் காரணமாக ராவணனால் அவளை நெருங்க முடிய வில்லை. அதே நேரம், நிஜ சீதை அக்னிதேவன் பாதுகாப்பில் பத்திரமாக இருந்தாள்.

ராவண வதம் முடிந்ததும், ஸ்ரீராமன் சீதைக்கு அக்னிப் பரீட்சை நடத்தினான். லட்சுமணன், ஹனுமன், விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்கள் 'சீதைக்கா அக்னிப் பரீட்சை?’ என்று கலங்கிக் கண்ணீர் வடித்தனர். ஆனால், அதற்கான காரணம் ஸ்ரீராமனுக்கும் அக்னிதேவனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது. தீக்குளித்த மாயா சீதை (வேதவதி) அக்னி தேவனை அடைகிறாள். தன்னிடம் அடைக்கலத்தில் இருந்த நிஜ சீதையை ஸ்ரீராமனிடம் சேர்க்கிறான் அக்னிதேவன். ஏகபத்தினி விரதனான ஸ்ரீராமன் ராமாவதாரத்தில் வேதவதியை மனைவியாக ஏற்க முடியவில்லை. ஆனால், கலியுகத்தில் அவளை ஏற்பதாக வாக்களிக்கிறான். திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளாக அருள்பாளிக்கும் வேங்கடாசலபதியின் தேவியாகத் திகழும் பத்மாவதி, வேதவதியின் அவதாரமே!

தேவி மஹாத்மியம் மட்டுமின்றி, வெங்கடேஸ்வர மஹாத்மியம் எனும் திருமலை ஸ்தல புராணத்திலும் வேதவதி என்கிற வேதவல்லியின் வரலாறு காணப்படுகிறது.

இன்னொரு கதையில் பூமித்தாயின் புத்ரிதான் சீதை என்கிற தகவல் நமக்குக் கிடைக்கிறது. இந்தக் கதையையும் பார்த்துவிடுவோமே..!

இந்தத் தகவலைச் சொல்வது, உத்தர ராமாயணம். இதில், சீதாதேவி இரண்டாவது வனவாசம் ஏற்றுக்கொள்வது பற்றி விரிவாக விளக்கப்படுகிறது.

கர்ப்பிணியான சீதை, வால்மீகி மஹரிஷி ஆஸ்ரமத்தில் வாழ்ந்து லவ, குசர்களைப் பெற்றெடுத்தாள். உலக அபவாதத்துக்குகூட நியாயம் வழங்க நினைத்து மனைவி சீதையைக் காட்டுக்கு அனுப்பி இருந்தான் ஸ்ரீராமன். ராஜாராமனாக வாழ்வதா, சீதாராமனாக வாழ்வதா என்ற பிரச்னையில், ராஜாராமனாகவே வாழ முடிவு செய்து, சீதையைத் தியாகம் செய்தான் ஸ்ரீராமன். நிந்தித்தவர்களே தவறுகளை நினைத்துத் திருந்தி மன்னிப்புக் கோரியபோதும், சீதை அயோத்திக்கு திரும்ப விரும்பவில்லை. ராமாவதாரம் முடியப் போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து, ஸ்ரீராமன் பாற்கடல் விஷ்ணுவோடு ஐக்கியமாகும் முன்பே சீதாதேவி தன் தாயான பூமா தேவியை வேண்டி வரவழைத்து, அவள் மடியில் சரணடைந்துவிடுகிறாள்.

ஆக... அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு எடுத்த ராமாவதாரத்தில், அவருக்குச் சரிசமமாகத் தன் பணியைச் செய்து, துன்பங்களை ஏற்று, தியாகங்களை விரும்பிச் செய்து, சூரியவம்சத்தின் புகழ் மறையாதிருக்க லவ- குசர்கள் எனும் இரு வாரிசுகளையும் தந்து, ராமாயணத்தை ஒரு தொடர்கதையாக்கிய தெய்வீக வடிவம்தான், மகாலட்சுமியின் அம்சமான சீதை!

நன்றி: விகடன் - டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (20-Jul-16, 6:17 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 490

மேலே