கடமையெனக் காத்திடுவீர்

உழைத்துத் தேய்ந்திட்ட
உயிரொன்று உறக்கத்தில் !
பிழைத்து வாழ்ந்திடவே
கூறுகளருகில் கூடாக !

மறைந்தாரோ மணந்தவர்
மறந்தனரோ பிள்ளைகள் !
விட்டனரோ வீதியில்
விளைந்தவர் கருவினில் !

வாங்குவோர் வரவில்லை
வாழ்ந்திடவும் வழியில்லை !
இத்தாயின் நிலைகண்டு
இதயமும் வலிக்கிறது !

கண்டிடும் காட்சியால்
கரைந்திடும் கல்மனமும் !
கண்ணீரும் செந்நீராகும்
கரைகடந்த கடலாகும் !

வளரும் தலைமுறையே
வளர்ந்திட்ட சமுதாயமே
ஒதுக்காதீர் பெற்றவரை
மறவாதீர் கருவறையை !

சுமையெனக் கருதாமல்
சுமந்தாள் அன்னையும் !
இமையென இயன்றவரை
காத்திட்டாள் உன்னையும் !

நன்றிக்கடன் செலுத்திட
நானிலத்தில் வாழ்ந்திட
இதயம் நிற்கும்வரை
இன்பமாய் வைத்திரு !

தாயின்றி எவருமில்லை
தரணியில் பிறக்கவில்லை !
தன்னுயிராக தாயினை
கடமையெனக் காத்திடுவீர் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jul-16, 7:56 pm)
பார்வை : 208

மேலே