திருக்குறளும் திருமந்திரமும்-6

திருக்குறளும் திருமந்திரமும்-6

”நம்பினோர் கெடுவதில்லை
இது நான்கு மறை தீர்ப்பு”

எனக் கூறுவர். கேள்விக்குறிய கருதுகோள் அல்லது பொருள் நிலைக் கோட்பாடுகள் எது ஆயினும் அதனை எவ்வித கேள்வியும் கேட்காமல் அப்படியே நாம் நம்பினோம் என்றால் அது மூட நம்பிக்கை எனப்படும். கடவுள் மீதான நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்ற அடைப்புக்குள் இட்டு விட்டு தங்கள் நம்பாமை கொள்கையினை ஒரு நல்ல மதமாக பரப்பிக் கொண்டு இருப்பதையும் நாம் காண்கிறோம்.

”நான் நம்புவதற்காக புரிந்து கொள்ள முயலவில்லை, மாறாக, நன்றாக புரிந்து கொள்வதே மேலும் நம்புவதற்குத்தான்” என ஹிப்போ நகர கிறிஸ்துவ ஆயராகிய புனித அகுஸ்தின் கூறுவார். இதன் அடிப்படையிலேயே ”நம்பிக்கையை நாடும் நற் புரிந்துணர்வு” என்ற கருதுகோளை தனது படைப்பாகிய ”ப்ரோஸ்லோகியோன் -1.” எனும் படைப்பில் காண்டெர்பரி நகர ஆயராகிய புனித ஆன்ஸ்லெம் என்பவர், “ ”நான் புரிந்து கொள்வதற்காக நம்புகிறேன்” எனும் பிரபல வாக்கியத்தை இலத்தீன் மொழியில் (Credo ut intelligam) எனக் கூறினார்.

நம்பிக்கை, நம்மை இறைவனுக்கு வெகு அருகில் கொண்டுசேர்க்கிறத எனும் திருவிவிலியம்,
”வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? நெடு நாள் வாழ நாட்டமா? அப்படியெனில் தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு, வஞ்சக மொழியை உன் வாயை விட்டு விலக்கிடு; தீமையை விட்டு விலகு; நன்மையே செய், நல்வாழ்வை நாடு; அதைஅடைவதிலேயே கருத்தாயிரு. ஆண்டவரின் கண்கள், நீதிமான்களை நோக்குகின்றன. அவரது செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன”
என திருப்பாடல் எண் 34:11-15 இல் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு நெடு நாழ் வாழ்வது ஒரு ஆசீராக நம்புவோர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது .இதன்படிப் பார்த்தொமெனில், திருவிவிலியத்தில், ஆதாம் எனும் முதல் மனிதன், 930 ஆண்டுகளும், அவரது புதல்வரான சேத் 912 வருடங்களும், ஈனோக்கு 905 ஆண்டுகளும், கேணான் 910 ஆண்டுகளும், மஹலலேல் 895 ஆண்டுகளும் ஜாரெடு 962 வருடங்களும் ஈனோக் 365 ஆண்டுகளும் லாமேக்கு 777 ஆண்டுகளும், ஜலப்பிரளயத்தில் தப்பிப் [பிழைத்த நோவோ 950 ஆண்டுகளும், இவர்கள் அனைவருக்கும் சிகரமாக மெதுசலா என்பவர் 969 ஆண்டுகள் வாழ்ந்தனர் எனத் தொடக்க நூலில் காண்கிறோம்.

வடமொழியாகிய சமஸ்கிருதத்தில், சிரண் என்றால் நீண்ட, நீண்டு, நெடு என்றும் ஜீவி என்றால் வாழ்பவர் என்றும் பொருள் ஆவதால் ’சிரஞ்சீவி’ என்பதற்கு அமரத்துவம் படைத்தவர் என்பதும் பொருளாகும். இவ்வாறு, இந்து சமய புராணங்களின்படி, மகாபலி, பரசுராமர், விபீஷணர், வியாசர், கிருபாச்சாரியார், மார்கண்டேயர், அசுவத்தாமா, மற்றும் அனுமான் ஆகியோர் இன்றளவும் சிரஞ்சீவிகளாகக் கருதப்படுகின்றனர்.

இவ்வாறு இறைவனின் பாதக் கமலங்களைச் சேர்ந்த அடியவர்கள், இப்பூவுலகில் நீண்ட நாள் வாழ்வர் என்றும் அவ்வாறு வாழாதவர் இருந்தும் பயனில்லை என்பதை அனைத்து சமய நூல்களும் எடுத்தியம்புகின்றன. இறைவனின் திருவடிகளை நாம் கட்டாயம் சேர்ந்து சேவிக்க வேண்டும் என்பதைக் கூறவந்த விவேக சிந்தாமணி, 28 ஆம் பாடல்

திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்
இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே.


மாணிக்கவாசகரின் திருவாசம், சிவபுராணம்.(91-95) இல்
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லர்க்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

அல்லல் பிறவியை அறுப்பதும் சொல்லற்கு அரிய ஏகன், அனேகன், இறைவன் ஆகிய அவனது திருவடியே என்கிறது. இதனை இரத்தினச் சுருக்கமாகக் கூற வந்த பொய்யாமொழிப் புலவர்,

மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

என்று மொழிந்தார். மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின்
புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் என இதற்கு உரை கூறும் கலைஞர் கூற்றை பரிமேலழகர்தம் உரையுடன் ஒப்பீட்டொமெனில், .

மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்)

இவ்வாறு ’இடைவிடாது நினைத்தல்’ என்பதாலேயே, சிந்தயுளே சிறக்கும் சிவம் எனவும் சிவனடியார் போற்றுவர். ஒளியில். விளங்கும் சிவபெருமான் வேண்டியவர்க்கு வேண்டியவாறு அருள் புரிவான் எனக் கூற முற்பட்ட திருமூலதேவ நாயனார், சகஸ்ர தளத்தை விரும்பி எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருவடியை, எவ்வாற்றானும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர், உமை காண நடனம் புரியும் இடபவாகன மூர்த்தி இச்சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அறிந்து அதனை அவனுக்கு அருள்வார் என்பதை அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பாகப் பின்வருமாறு கூறுவார்.

”போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந்த் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந்த் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே” - -திருமந்திரம்-632.

’உள்ளங்கவர் கள்வன்’ எனத் திருஞானசம்பந்தர் பயன்படுத்திய சொற்களையும், ’மலர்மிசை ஏகினான்’ எனும் திருவள்ளுவர் வாக்கினையும் ஒருங்கிணைத்து, திருமூலர் தமக்கே உரிய பாணியில், எங்கும் நிறைந்தவன் ஒவ்வோர் உயிரினிடமும் அவரவர் உள்ளத்தில் தன்னைக் காட்டாமல் மறைந்துள்ளான்.. அவன், கொடை வழங்குவதில் வள்ளல். சிரசிலுள்ள சகஸ்ர தளத்தில், சக்தியும் தானும் பொருந்தி நிற்பான். ஒன்பது வாயில்களைக் கொண்ட உடம்பினுள் புகுந்து மேல் நோக்கிச் செல்லும் கள்வன் அவன். தொழிற்படு வகையினை உலகினர் அறியாதவராக உள்ளனர் எனக் கூறியுள்ளார். அவரது மொழியில், 1531 ஆம் பாடலில்,

”உள்ளத்து லேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறியார்களே”

இவ்வாறு ’மலருறை மாதவன்’ எனக் குறிப்பிடும் திருமூலர் மற்றொரு பாடலில் இளமையில் அகத்தே விளங்கும் இறைவனது உண்மைத் தன்மையை அறியாது மக்கள் வீணாகின்றனர். அக்கினி மண்டலத்தில் விளங்கும் ஈசன், உருத்திர சோதி என்றால், கமலத்துறை ஈசன் சுவாதிட்டானச் சக்கரத்தில் விளங்கும் அனல். அதுவே, உருத்திர சோதியின் ஆற்றல். இதனை மேலும் விளக்கப்போந்தால், முந்தைய திருமந்திரப் பாடலில் கூறியபடி, இளமையில் இளஞ்சூரியனைப் போன்ற உருவம் அமையும். அவ்விதம் அக்கினி மண்டலத்துள் அமர்ந்த தலைவனும் இம்முறையில் சுவாதிட்டான மூலாதாரங்களில் பொருந்தி விளங்கும் ஈசனும் ஆகிய இறைவனது உண்மைத் தன்மையை இதுவரை விசாரித்து அறியாமல் இருப்பது எத்துனை அறியாமை என்பார். இக்கருத்தைக் கூறும் 2091 இல் உள்ள திருமந்திரப் பாடல் பின்வருமாறு.

இப்பரி சேயிள ஞாயிறு ப்பொலுரு
அப்பரி சங்கியின் உள்ளுறை யம்மானை
இப்பரி சேகம லத்துறை யீசனை
மெய்ப்பரி சேவின வாதிருந்தோமே.

இவ்வாறு ’மலர்மிசை’ என்ற திருவள்ளுவரின் வாக்கு, திருமந்திரத்தில் எந்த மலர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. அது செந்தாமரை அன்றி வேறல்ல என்பதால், மாறுபட்ட தன்மையுடைய ஆயிர இதழ்த் தாமரையின் உள்ளே விளங்கும் சோதியை, செல்லுகின்ற மூலாதாரத்திலிருந்து எழும் நாதமானது அருளால் கிட்டுமாயின், அங்கே பொருந்தும் அமுதேசுவரி வெளிப்பட முன் அடைந்திருந்த மேல்வாசலைத் திறந்திருப்பீராக என சிரசின் மேல் விளங்கும் சோதியோடு நாதசக்தியைக் கலத்தலே முச்சொரூபம் கடக்கும் வழியாகும் எனப் பாடுவார். இவ்வாறு
’உடந்த செந்தாமரை’, ’நடந்த செந்தாமரை’ என வரும் அப்பாடல் எண் 2484 பின்வருமாறு.

உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதந் தகைந்தால்
அடைந்த பயோதரி யட்டி யடைத்தவ்
விடந்தரு வாசலை மேல்திற வீரே.

எஎபது, சீவமுத்தி தரும் வழியாக திருமூலர் கூறும் உபாயம் ஆகும்.
”மலர்மிசை யெழுதரு பொருள்” என திருஞான சம்பந்தரின் தேவாரத்திலும் அதே சொற்பிரயோகம் செய்யப்பட்டு இருப்பதைக் காணாலாம்.

சினமலி யறுபகை மிகுபொறி
சிதைதரு வளிவகை நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு
தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை
தகுபர நுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை
பவர்கலை மகள்தர நிகழ்வரே (தேவாரம் சம்..1.21.5)



பொதுவாக, எண்களில் ஐந்து என்ற எண் மிகவும் சிறப்பு உடையது ஆகும். இவ்வெண் மனிதனின் ஆரோக்கியம், அன்பு, திருமணம் ஆகியவற்றை சமப்படுத்தும் எண் எனக் கூறுவர். பெண்ணுக்குரிய எண் இரண்டு என்றால், ஆணின் எண் மூன்றும் சேர்ந்தால் திருமணம் எனக் கூறுவர் கிரேக்க ஞானியாகிய பித்தகோரஸை பின்பற்றுவோர் இந்த எண் ”Hieros Gamos”
அதாவது விண்ணுக்கும் மண்ணுக்கும் மணம் செய்து வைப்பது என்பர். மனித உடலில் இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் தலை என மனித உயிரக் குறிப்பிடும் சொல்லாகவும் இது இருக்கிறது.

அறிவியலில், போரோன் எனப்படும் உலோக சார்பற்ற கருந்தவிட்டு நிற தனிப்பொருளின் அணு என் 5 ஆகும். கடலில் வாழும் நட்சத்திர மீனுக்கு ஐந்து கரங்களும், மண்ணில் வாழும் மண் புழுவுக்கு ஐந்து இருதயங்களும் உள்ளது.

லிமெரிக் எனும் கவிதை வகையில் ஐந்து நகைச்சுவை உணர்வு மிளிரும் ஐந்து வரிகள் மட்டுமே இருக்கும்.

ஒரு கூடைப்பந்தாட்டக் குழுவின் ஒவ்வொரு குழுவிலும் ஐவர் மட்டுமே ஆடுவர்.

இசைக்கருவிகளில் ஒரு பகுதியில், செங்குத்தான மற்றும் இணையான ஐந்து வரிகள் இருக்கும்.

இப்போது அதிகமாகப் பேசப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் சின்னம் ஆகிய ஐந்து வட்டங்களில் ஐரோப்பாவைக் குறிக்கும் நீல வட்டமும், ஆசியாவைக் குறிக்கும் மஞ்சள் வட்டமும், ஆப்பிரிக்காவைக் குறிக்கும் கறுப்பு வட்டமும், ஓஷனியாவைக் குறிக்கு, பச்சை வட்டமும், அமெரிக்காவைக் குறிக்கும் சிவப்பு வட்டமும் உள்ளன.

யூதர்கள்ன் மற்றும் இசுலாமியர்களின் பாதுகாப்புச் சின்னம் எனப்படும் ஹம்ச கரத்தில், இரு பெரு விரல்களும் நடுவில் மூன்று விரல்களும் கொண்ட கைச் சின்னம் இசுலாமியர்களால் பாத்திமாவின் கரம் எனவும் சொல்லப்படும்.

மார்டின் லூத்தரின் ரோசாவில், நடுவில் உள்ள நம்பிக்கை எனும் இதயத்தைச் சுற்றிலும் உள்ள ஐந்து வெள்ளை இதழ்களும் அமைதியைக் குறிப்பதுடன், அதிலுள்ள நீல வானம் விண்ணக மகிழ்வையும், மஞ்சள் வட்டம் நித்தியத்தையும் குறிக்கும்.

திருவிவிலியத்தில், 1.சாமுவேல்: 17:40 இன் படி, கோலியாத்து எனும் அரக்கனை வீழ்த்த ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீதிடம் ஐந்து கூழாங்கற்களே இருந்தன.

யூதரின் திருவிவிலியம் ஆகிய ’டோரா’ எனும் புத்தகத்தில், தொடக்க நூல், பயணனூல், லேவியர். இணைச் சட்டம், எண்ணாகமம் என ஐந்து புத்தகங்களே உள்ளன.

திருவிவிலியத்தியன்படி, எண் ஐந்து கடவுளின் அருளைக் குறிக்கும் சின்னமாக 318 முறை வருகிறது.

கடவுளால் அனுப்பப்பட்ட உலக மீட்பர் எனும் யேசு கிறிஸ்துவுக்கும் காயங்கள் ஐந்து என வழிபடப்படுகிறது.

ஆதியில் மோசே எனும் இறைவாக்கினர்க்கு, இறைவன் அருளிய பத்து கட்டளைகள் இரண்டு ஐந்து பிரிவுகள் கொண்டது. முதல் பிரிவு, மனிதர்க்கும் கடவுளுக்கும் இடையேயான உறவைக் குறிப்பது, அடுத்தது, மனிதர்க்கும் மனிதர்க்கும் இடையேயான உறவைக் குறிப்பது.

இசுலாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் தூண்கள் எனப்படுவதோடு தொழுகையும் ஐந்து வேளை எனக் குறிக்கப்பட்டுள்ளது.

சீக்கிய மதத்தினர்க்கு பஞ்ச கக்கார் எனப்படும் கேஷ் (தலைமுடி), கங்கால் (சீப்பு), கரா (இரும்பு வளையல்), கச்செரா (வீரர் அணியும் குட்டைக் காலுடை, கிர்பன் ( வாள்) ஆகிய்வற்றுடன், காம, குரோத லோப மோஹ, ஆங்காரம் ஆகியவை ஐந்து தலையாய பாவங்கள் என்றும் இதிலிருந்து விடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

நாம் வாழும் இந்த பூமியும் சரி நமது மனித உடம்பும் சரி பஞ்ச பூதங்கள் எனச் சொல்லப்படும காற்று , நீர், நெருப்பு, பூமி, வானம் ஆகியவற்றால் ஆனது. மனிதனுக்கு உள்ள ஐந்து இந்திரியங்கள் எனப்படுபவை, மெய், வாய், கண் மூக்கு, செவி என்றும், இவற்றின் பயனாக அவனுக்கு கிடைக்கும் புலனறிவு, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் என்றும் நாம் எல்லோரும் அறிந்ததே. இத்தகைய சிறப்பு மிக்க புலனறிவு தரும் வாயில்கள் ஐந்தும் ”அறிவு வாயில்கள்” என நாம் கொள்ளும்போது, இவற்றால், மனிதர் பிழை செய்தும், வாழ்வின் நெறி தவறியும் போவதால் இதனை ”பொறிவாயில்” என்பார் வள்ளுவர். நம்மைப் பாவ வாழ்க்கைப் பொறியில் சிக்க வைத்து விடுவதால், இந்த ஐம்புலன்களை நாம் வெல்ல வேண்டும் என்பதைக் கூற வந்த வள்ளுவர்,


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ் வார்

எனக் கூறுவதன் மூலம், ஐம்பொறிகளின் வழியாக உண்டாகும் ஆசைகளை அகற்றி, கடவுளின் பொய்யற்ற ஒழுக்க நெறியில் நிற்பவர் நீண்ட காலம் வாழ்வர் என்றார். இக்குறள் குறித்த பரிமேலழகர் உரையினை காண்போமெனில்,

பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

இதற்கு தனக்கே உரிய பாணியில் விளக்கம் கூற வந்த கலைஞர்,
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும்
கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப்
பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும் என்பார்.
இந்த கருத்தினை தனது கடவுள் வாழ்த்துப் பாடலில் வலியுறுத்திய திருமூலர், , ஐந்து வென்றனன் என எண்ணலங்காரமாகப் பின் வருமாறு பாடியுள்ளார்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந்த் தானுண தெட்டே

என்று ஒரு பொருளாகிய சிவனே இனிமையான சக்தியோடு இரண்டாயும், பிரமன், விஷ்ணு உருத்திரன் என்ற மூன்று நிலைகளில் நிற்பவனாகவும், நாங்கு புருடார்த்தங்களையும் உணர்ந்தவனாகவும், மெய், வாய், கன், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களை வென்றன்வனாகவும், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தீ, அக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்தவனாகவும், அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ர தளத்தின் மேல் விளங்குபவனாகவும், , நிலம், நீர், தீ, காற்று, விண், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள்களையும் உணர்ந்து அவற்றில் கலந்து விளங்குகிறான்.

இதனையே சுருக்கமாக, சிவன் ஒருவனே, சக்தொயோடு இரண்டாய், மும்மூர்த்தியாய்ப் படைத்தலாதி முத்தொழில்களைச் செய்து, நாங்கு வேதங்களால் உண்மை விளங்கச் செயுது, ஐந்து இந்திரியங்களை அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறாதாரங்களில் விரிந்து,சகஸ்ர தளத்தின் மேல் பொருந்தி, அட்டமூர்த்தியாய் விளங்குகிறான் என்பதாகும்.. இப்பாடலை முதல் கடவுள் வாழ்த்துப்பாடலாய் அவர் அமைத்து இருப்பதும் இதன் சிறப்பினை பெரிதும் உணர்த்தும்.

மேற்கண்டவாறே எண்ணலங்காரத்தில் ஒத்த கருத்துடைய பாடல் ஒன்று திருப்புகழில் இருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு சுவைத்திட விருந்தாகும்.

தொல்லை முதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்தம் எனவாகித் துய்ய சதுர் வேதங்கள்
வெய்ய புலனோரைந்து, தொய்யு பொரு ளாறங்கம்
என மேவும் ….ஆனந்த பொளவம் (திருப்புகழ் 389)



இதே கருத்தினை திருஞான சம்பந்தரின் தேவாராம் 1.11.10 இல் வென்றவன் புலனைந்தும் என்றும்
அப்பரின் பாடல் 5.98-7 இல் வென்றானைப் புலைந்தும் என பாடி இருப்பதும் இங்கு ஆய்வு கண் கொண்டு நோக்கற்பாலது .

எழுதியவர் : தா. ஜோ. ஜுவலியஸ் (25-Jul-16, 4:06 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 341

மேலே