சிறு மழலையென அவள் நுனிவிரல் பற்றி திரிவேன் தமிழ் கவியாக

நான் தேடும் கவிகருவை
என் சிந்தை தர மறுக்கும்
தருணம்
உணர்கின்றேன்
மலட்டு தன்மையின்
கொடூர வலிகளை ....

தாய்குணம் பெற்றேன்
சில நொடிகளில்
குழந்தையாக ...
இந்த மழலையின் மொழி
தாய்க்கு மட்டும் தானே
புரியும் -இதோ

என் எண்ணக் குவியலில்
ஆயிரம் செல்வங்கள் உண்டு....
தமிழ் இல்லையென்றால்
என் பேச்சும் இங்கில்லை
கவி மூச்சும் எனக்கில்லை

நான் வெற்று இடமாக
எனை
உணரும்போதெல்லாம்
எனக்குள் ஒருவனை
தமிழல்லவா அழைத்து வருகிறது
கவியாய் ...
கருணைக்கொண்டு
என்
வெற்றிடம் நிரப்பி
அனைத்து கோள்களையும்
பரிசளிக்கிறது
நான் உறவாட ....

விந்தையான
உலகம் தான் ...
என் உணர்வுகளின் உருவம்
சிந்தி விழுந்தாலும்
எதிர்த்து நின்று சண்டையிடுகிறதே ....
இதுவல்லவா வீரம்
அவள் கொடுத்த வரம் அல்லவா!

என் சிந்தனை குழந்தைகள்
ஒடி விளையாட
மடி கொடுத்த தாயல்லவா -என் தமிழ்!

அவள் கொஞ்சும் சுகம் கண்டுதானே கம்பனும் உயிர் நீத்த பின்னரும்
தாய் மடி இன்றும் தவழ்கிறான்...

என் இரண்டு கால்கள் கட்டி
கைகள் கட்டி
விழிகள் மறைத்து மூட்டையென வார்த்தாலும்
என் சிந்தை ஓடுதே
குடு குடுவென என் தமிழ்தாய் கரம் தேடி ...

யாருக்கு சொந்தம் என்ற வினா எழுந்தால்
பஞ்சபூதங்களும் அவள் பஞ்சு மடி குழந்தையென
ஏக்கம் கொண்டு
இன்றும் ஓடி கொஞ்சுகிறதே....
அவள் தானே
முழுமுதற்தாய்!

தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
இது முற்றுபெறாத மூச்சல்லவா
நானும் தான் இறப்பேனா...
மறுபடியும் பிறப்பேனே
சிறு மழலையென
அவள் நுனிவிரல் பற்றி திரிவேன்
தமிழ் கவியாக ...

எழுதியவர் : மருதுபாண்டியன். க (30-Jul-16, 11:33 pm)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
பார்வை : 180

மேலே