தொழில்கல்வி மோகம்

தொழில்கல்விப் பயின்று வேலைக்குச் செல்ல
அறியாத வயதில் ஆசைக் கொண்டு
அந்த ஆசைதனை நிறைவேற்ற
பொறியியல் சேர்ந்தது என் மனம்......


உருவத்தில் வளர்ந்து விட்ட என்னிடம்
உண்மையான புரிதல் வளரவில்லை...
எவனோ ஒருவனைப் பார்த்து
என்னைத் தொலைத்து விட்டேன்......


சமூக கட்டமைப்பில் தனிக் கட்டமைப்பு
பொறியிய லென்று மனம் சொல்லுது...
ஊடகங்களும் கல்வி நிறுவனங்களும்
தினமதையே ஒளிப்பரப்பு கின்றது......


மேழிப் போன்ற ஆசை வர்த்தைகளால்
ஈரமான நெஞ்சங்களை உழுது
மோகத்தை மெல்லத் தூவுகின்றனர்
உண்மையென்று மனதில் முளைத்தும் விடுகிறது......


படித்த அறிவு என்னிட மிருந்தும்
பகுத்து அறியும் தன்மை இல்லை...
பட்ட அறிவு கொண்ட பெற்றோரும்
பகல் கனவில் மூழ்கித்தான் போகின்றனர்......


வரன் பார்த்து முடிக்கும் நேரத்தில்
வரதட்சணைக் கேட்க வசதியாக இருக்குமென்று
இந்தப் பிரிவினை தங்கள் பிள்ளைக்கு
தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் பலர் இங்கு......


வயலில் உழைத்து வெந்தது போதும்
வளர்ந்த வாரிசுக்கு இது வேண்டாமென்று
புத்திரப் பாசத்தில் வேளாண்மை விடுத்து
இத்துறையில் சேர்த்திடும் சிலரும் இங்கு......


எதிர்வீட்டில் ஒருவன் சேர்ந்து விட்டால்
மதிக்கெட்டு மற்றவரும் கர்வத்தில்
தனது மகனையும் அப்பிரிவில் சேர்த்திட
நினைக்கும் பெற்றோர் பலரும் உண்டு......


தனக்கு கிடைக்காத இந்தப் படிப்பு
தனது பிள்ளைக்கு கிடைக்க வேண்டுமென்று
தங்கள் ஆசையினை பிள்ளை மீது
திணிக்கின்ற பெற்றோரும் இங்குண்டு......


பணம் அதிகம் செலத்திப் படித்தால்
மணம் நிறைந்த வாழ்க்கை கிடைக்குமென்றும்
மனிதர்களின் மனதில் விழிப்புணர்வு இல்லாதும்
தொழில்கல்வியில் பயணம் போகின்றனர்......


வேலை உறுதியென்று கூறும் உண்மையற்ற
உத்தமர்களின் புரியாதப் பேச்சில் மயங்கி
சுயமாய் சிந்திப்பதை மறந்து
அதிலே வீழ்ந்தும் விடுகின்றனர்......


படித்து முடித்து வேலை இல்லாது
பட்டத்தை வைத்துக் கொண்டு
வேலைத் தேடி திரிவதைப் பார்த்தும்
தொழில்கல்வி மோகம் இன்னும் குறையவில்லை......

எழுதியவர் : இதயம் விஜய் (12-Aug-16, 7:27 am)
பார்வை : 381

மேலே