கவிதையில் ஒரு புதிர் பல விகற்ப இன்னிசை வெண்பா

கவிதையில் ஒரு புதிர்.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

ஓர்மரத்தில் தேனொழுகும் மாங்கனிகள் பார்த்தவுடன்
ஏறியதில் ஏழுபேர் கொய்தெடுத்த மாங்கனிகள்
ஓரிடத்தில் வைத்துவிட்டு கண்ணுறங்கிப் போயிருக்க
கண்திறந் தாரிரு வர்

கண்திறந்த அவ்விருவர் கொய்தெடுத்த மாங்கனியை
ஆளுக்குப் பாதிபாதி கூரிடும் போதிலே
எஞ்சியொரு மாங்கனியி ருக்கிறதே யென்றபடி
இன்னொரு வன்விழித்தான் கண்

மூவரும்த மக்குள் பகிர்ந்துகொண்ட போழ்திலும்
எஞ்சியதோர் மாங்கனி நெஞ்சினிலே பீதியை
தோற்றுவித்த நேரத்தில் மற்றொருவன் கண்விழித்துப்
பார்த்திட்டான் ஏளன மாய்

பறித்த கனிகள் அனைத்துமே நால்வர்
பகிர்ந்த பொழுதிலும் மிஞ்சியொரு மாங்கனி
அங்கிருக்க நால்வரும் அச்சமுற்ற வேளையில்
மற்றொருவன் கண்விழித் தான்

அஞ்சியஞ்சி ஐவர் பகிர்த்தெடுத்த போதிலும்
எஞ்சுமொரு மாங்கனி கண்டு எழுந்துவந்த
இன்னொருவன் தன்பங்கைக் கேட்கப் பகிர்ந்தெடுக்கும்
போழ்திலும்எஞ் சும்ஓர் கனி

கொய்தெடுத்த மாங்கனிகள் ஏழுபாகம் வைத்துவிட்டால்
எஞ்சியங்கு நிற்கவில்லை ஓர்கனியும் என்றாயின்
ஏழுபேர் மொத்தமுமாய் கொய்தெடுத்த மாங்கனிகள்
எத்தனை தான்சொல்வீ ரோ

எழுதியவர் : (17-Aug-16, 4:01 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே