தன்வினை

"என்ன மிஸ்ட்டர் ரகுராம் குழந்தைங்க
பட்டாசு வெடிக்கும் போது பக்கத்துல
இருக்கமாட்டிங்களா.? இவ்வளவு
அஜாக்கிரதையாவா இருப்பீங்க.! இப்ப
பாருங்க பட்டாசு வெடிக்காம சீர்னதால
மருந்து கண்ணுல பட்டு பயங்கரமா
பாதிச்சிருக்கு, பார்வை திரும்பவும்
கிடைக்க வெறும் பத்து பர்சண்ட்தான்
வாய்ப்பிருக்கு... கடவுள
வேண்டிக்கோங்க" என்று சொல்லிவிட்டு
டாக்டர் ஆப்ரேஷன் தியேட்டருக்குள்
சென்றார்..
இடி இறங்கிய மரமாய் நாற்காலியில் சாய்ந்த ரகுராம் இதயம் இயல்பை மறந்திருந்ததை உணர்ந்து.. கரங்கொண்டு கண்துடைத்த நேரம்.. எதிரே இருந்த கண்ணாடி அவன் உருவத்தை எதிரொளிக்க.. அதைக்கண்ட அவன் மனமோ... அவனது பட்டாசு ஆலையின் அலுவலகத்தைக் காட்டி.. அதில் வேலைசெய்யும் சிறுவனுக்கு உடல் நலமில்லையென உதவிகேட்ட அவனது தந்தையின் நிலையையும் காட்டியது.
தன்பிள்ளை வயதிலிருக்கும் சிறுவனை பணியில் அமர்த்தி அவனுக்கு உதவியும் செய்யமறுத்த தன்வினையே.. தன் மகனின் இந்த நிலைக்கு காரணமோ.! என உணர்ந்தான்.. எழுந்தான்..
விரைந்தான் அந்த சிறுவன் இருக்கும் மருத்துவமனைக்கு 'உன்வலி நான் உணர்ந்தேன் இனி குழந்தை தொழிலாளியை பணியமர்த்த மாட்டேன் உன் மகனுக்கான மருத்துவ செலவுடன் அவனது கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்கின்றேன்' எனக்கூறி திரும்பிய நேரம் அழைத்த அலைபேசியில் 'உங்கள் மகனுக்கு பார்வை திரும்பியது' என்ற குரல் கேட்க.. தன்வினைப் பயனை தான் கண்ட இன்றே தனக்கும் பார்வை திரும்பியதென இரட்டிப்பாய் மகிழ்ந்து திரும்பினான் ரகுராம்

எழுதியவர் : moorthi (21-Aug-16, 2:04 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 347

மேலே