மறுமணம் மகிழ்வைத் தருமா

என் வீட்டின் அருகே ஒரு குடும்பம் . ஒரு அம்மா,ஒரு அப்பா, ஒரு அண்ணன்,ஒரு தங்கை. பணத்திற்கு மட்டுமே பஞ்சமான குடும்ப சூழலில் பாசத்திற்கு சிறிதும் குறைவில்லை. பெற்ற மகளான ஒற்றை மகளை, கொள்ளை பாசம் கொட்டி வளர்த்தனர். காலையில் அவள் எழும் நேரமே 8.30 தான் . எழுந்தவுடன் குளித்து உணவுண்ண செல்லும் அவளுக்கு ஓடி ஓடி ஊட்டிவிடுவாள் காலை உணவை அவள் அன்னை . இடையை தொடும் சடையை நீவி நீவி ,வனையப்படும் மண்பாண்டம்போல் சிறிதும் சிணுங்காமல் சீவி விடுவாள் அவளின் தலைமுடியை. அணிந்துள்ள சுடிதாரை சிறிதும் சுருக்கமின்றி இஸ்திரி போட்டு,துப்பட்டாவை சுருக்கெடுத்து தோளில் தொங்கவிட்டு , பலவடிவில் கோர்த்துவைத்த பூச் சரத்தை பொற்குழலில் முடித்து ,புத்தகப் பையை தோளில் மாட்டி , வீட்டின் அருகே உள்ளப் பேருந்து நிலையத்திற்கு அவளை அழைத்துச் சென்று வழியனுப்பி, பின்வந்து தன் வேலை முடித்து ,வேலைக்கு செல்வாள் அவள் அன்னை.

அதீதப் பாசத்தால் அதிர்ந்து கூட அவளிடம் பேசாத தந்தை . அவளுக்கு என்று சிறிதும் குறைவைக்க மாட்டார் .

தற்போதே குரூப் தேர்வில் தகுதி பெற்று ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்த அண்ணன், தங்கைக்கு தலையில்வைக்கபூவாங்கமறந்தும்வரமாட்டான்தினமும்,இப்படியும் பாசக்கார அண்ணனா என ,பொறாமைப் பட வைக்கும் ஒற்றுமை .

ஏழைக் குடும்பத்திற்கு திடீரென்று கிடைத்த வரப்பிரசாதம் போல் , வந்தது புதிய வரன் . சிங்கப்பூர் மாப்பிள்ளை , பெரிய வேலை., கை நிறைய சம்பளம் . ஒரே ஒரு பையன் . இப்படி ஒரே சமயத்தில் திடீர், திடீர் சந்தோசத்திற்கு அளவேயில்லை .

மகளுக்கு திருமண ஏற்பாடுகளும் நடந்தது . திருமணம் முடித்து அளவில்லா ஆனந்தத்தில் திளைத்தது அக்குடும்பம் . மாப்பிள்ளை , திருமணம் முடித்து ஒரு மாதம் முடிந்த நிலையில் , மாப்பிள்ளை சிங்கப்பூருக்கு போய் சேர்ந்து விட்டார் . மீண்டும், ஒரு மாதத்தில் அவர் , தன் வேலை மாற்றம் பெற்று , சென்னை வரவே , மனைவியின் மீதுள்ள பாசத்தால் , ஒரு மாதம் சென்னையில் ரூம் எடுத்து தங்கி வாரம் ஒருமுறை பெண் வீட்டிற்கு வந்து மனைவியைப் பார்த்து அன்பைப் பொழிந்துவிட்டு அடுத்த நாளே மீண்டும் சென்று விடுவார் . இப்படி சென்ற மணவாழ்வில் , பெற்றோர் தன் மருமகன் படும் கஷ்டத்தைப் பார்த்து , ஒரு வீடு காஞ்சிபுரம் பக்கத்தில் எடுத்து , இருவரையும் குடியமர்த்தினர். ஒரு மாதம் கூட முடியவில்லை . வாகன விபத்தில் மரணம் அடைந்தார் அவளது கணவன் .
இதற்கு மேல் அக்குடும்ப நிலை என்றுமே மீளாத எல்லைமீறிய சோகத்தில் ஆழ்ந்துள்ளது . பெண்ணை விட பெண்ணைப் பெற்றோர் நிலை . எதற்குத்தான் நாம் இவைகளை காண்கிறோமோ ? எப்படித்தான் இவைகளைத் தாண்டி இந்தக் குடும்பம் மீண்டு வருமோ ? என்பது இந்தக் குடும்பத்தைப் பார்க்கும் மக்களின் கேள்விக் குறி.
மறுமணம் நடந்தால் மீண்டு விடுமோ ? மழலைகள் பிறந்தால் மீண்டு விடுமோ ?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் . விதவையின் மறுமணம் விளக்கேற்றுமா இக்குடும்ப மக்களுக்கு ? மறுமண நிகழ்வு மகிழ்வைத் தரும் என்ற நம்பிக்கையில்
உயிர்வாழும் பெற்றோர் . ஆதரவு காட்டும் அக்கம்பக்கத்தினர்.

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (23-Aug-16, 8:37 pm)
சேர்த்தது : PJANSIRANI
பார்வை : 246

மேலே