இயற்கையின் ஆதங்கம்

காதலிக்க நேரமில்லை, எனை காதலிக்க பலர் இருந்தும்!
கனவுகளுக்கு நேரமில்லை, தூக்கம் தொலைந்த இரவுகள் சாட்சி!
காட்சிகள் புலப்படவில்லை, கண்ணிருந்தும் குருடனாய் அலைகிறேன்!
கொண்டதே கோலம் கண்டதே காதலென
கடிகார முள்ளாய் வாழ்க்கையை துரத்துகிறேன்!

வானவில் வண்ணங்களும் , விண்மீன் திரளும் வீணாய் போகுதே!
கார்முகில் மேகமும், கானக்குயிலும் என் அறியாமையை எள்ளி நகைக்குதே!
வெண்ணிலவும் வளர்ந்து தேய்ந்து வியப்புடனே வினவுது!
எனை சுற்றியுள்ள வனப்பெல்லாம் சினங்கொண்டே சாடுது!

இயற்கையை ரசிக்க நேரமில்லா இயந்திர உலகமே!
இன்றே எங்கள் மரபுகள் கொஞ்சம் மறந்தால்?
இம்மண்ணில் மாற்றங்கள் என்றேனும் நிகழ்ந்தால்;
இம் மானிடம் செழிக்குமா? சிறக்குமா?

கருப்பு வெள்ளை வானவில்லும், கூவாத குயிலும்;
வாசமில்லா பூக்கள், வண்ணமில்லா வண்ணத்துப்பூச்சி;
ஒளியில்லா ஆதவன், ஓசை இல்லா அலை!
மண்வாசம் இல்லா மழை, வேர் இல்லா மரங்கள்;

பூக்களிள்ளா சோலை, நீரில்லா ஓடை;
ஊமையான விலங்குகள், பறக்க மறந்த சிறகுகள்;
சிரிக்க மறந்த மழலை, சிந்தனை மிக்க இயந்திரம்;
வருடாத தென்றல், வளராத தேகம் வேண்டுமா?

சிந்தனையை சிதற விடாதே மானிடா!
திக்கு திசை உணர்ந்து பயணம் செய்
உன் இலக்குகள் நிரந்தரம் இல்லை!
நிற்காமலோட நீயும் பந்தயக் குதிரை இல்லை!

மெளனமாய் உரையாடும் இயற்கையின் அழகை பார்;
பந்தயக் குதிரையாய் பாய்ந்தே பழகி விட்டாய்!
மறவாதே, உறவுகளும் நட்புகளும் செழுமை தரும்
ஏய் குதிரையே! இன்றே மனிதனாய் மாறிவிடு!

வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் அல்ல
வானில் தோன்றும் சூரியனும் சந்திரனும் போல
தோன்றி மறையும் மறைந்து தோன்றும்
விடியல் புதிய நாளை படைக்கும்!

ஓட்டத்தை தாண்டிய வாழ்க்கை இனிக்கும்
புன்னகை மறந்து புதைந்து போகாதே!
உள்ளத்தால் இணைந்தால் உறவுகள் மேம்படும்!
ரசித்து பார் வாழ்க்கை உன்னை காதலிக்கும்!

எழுதியவர் : அருண்மொழி (24-Aug-16, 2:33 pm)
பார்வை : 93

மேலே