அரசமரத்தடி பிள்ளையார்
ஆத்தங்கரை ஓரம்
செழித்து வளர்ந்த
அரச மரம்
அதன் அடியில்
கூரை ஏதும் இல்லா
செங்கல் மேடையில்
சிலையாய் வீற்றிருக்கும்
கரையோர கணபதி
என் அபிமான கடவுள்
பரந்த வான் கீழே
கம்பீரமாய் அமர்ந்த
வர ப்ரசாதி
இவருக்கு கோயில் இல்லை
கூரை, கோபுரம், கலசம்
ஏதும் இல்லை
நித்ய பூஜை செய்ய
ஓதுவாரும் யாரும் இல்லை
வழி போக்கர் யாரேனும் எப்போதோ
அகலில் நை விளக்கு ஏற்றிவைப்பர்
என் அன்பு கணபதிக்கு
மல்லி, முல்லை, அரளி
என்ற மலர்மாலை ஏதும் இல்லை
எளிமை மொத்த உருவம்
என் தொந்தி கணபதிக்கு
எருக்கன் பூவும் அருகம் புல்லுமே
அவன் விரும்பி ஏற்கும் அணிகலன்கள்
கடலைச் சுண்டல் அவன் விரும்பி ஏற்கும்
நிவேதியம் ; அவ்வப்போது சிலர்
அவனுக்கு நெய் கொழுக்கட்டையும் தருவார்
கடா, கோழி, காவு என்று
என்னப்பன் வேண்டுவது ஏதும் இல்லை
எம்மதத்தாரும், ஜாதியரும் ,
எவ்வயது பெண்டிரும் ஆடவர்
மற்றும் சிறுவரும் அந்தி சாய் வேளையில்
அரசமர இப் பிள்ளையாரை அண்டிவந்து
தோப்பு கரணம் போட்டு, பொட்டிலே குட்டு வைத்து
அடிமேல் அடி வைத்து
அரசமரம் சுற்றி வந்து
நேர்த்தி கடன் நிறைவேற்றி செல்வர்
என்றும் இவர்கள் வேண்டுதலுக்கு
செவிமடுக்கா இருந்ததில்லை
என் அப்பன் தொந்தி விநாயகன்
பரந்த விண்ணின் கீழே
காற்றும் மழையும் அடித்தாலும்
கூரை ஏதும் கேட்கவில்லை
வேழமுகத்து வெற்றி கணபதி
என் எளிமை கணபதி
கேட்கும் வரும் தரும் கணபதி
எங்கள் ஊரார் போற்றி வணங்கும்
நம்பிக்கை கணபதிக்கு
பல்லாண்டு பாடுவோமே

