என்ன செய்துவிட்டோம் அவளுக்கு

எண்ணிப் பார்த்துக் கொள்வோம் ஒருமுறை
என்ன செய்துவிட்டோம் அவளுக்கென !
எண்ணிப் பார்த்துக் கொள்வோம் !!

உவமைகளை அவள்மீது அடுக்கியே
அவள் உணர்ச்சிகளை உணர
ஒருபோதும் நாம் நினைத்ததில்லை !

பொறுமைக்கானவள் நீயென்றே சொல்லி
சொல்லி அவள் பொறுமையை
நிதம் சோதித்துக் கொண்டோம் !!

அழகுக்கு இலக்கணம் அவளெனக்
காட்டி அதைவிட சிந்தனை
ஏதுமின்றி அவளை அடக்கியே
- வைத்துவிட்டோம் !!

விட்டுக்கொடுப்பவள் நீயென்று கூறியே
அவள் விட்டதை எல்லாம்
நாம் பிடுங்கி நின்றோம் !!

தொழில்நுட்ப வளர்ச்சி தொல்லையேயென
அதை தொடவிடாமல் அவளை
பூட்டியே வைத்துக் கொண்டோம் !!

ஒருவரை சார்ந்தேவாழும் உயிரினத்தின்
அடுத்த தலைமுறை அவளேயென
அறிவியலுக்கே நாம்பாடம் சொன்னோம் !!

ஒருதலைக் காதலில் அவள்தலை
வீழ்த்தி ஆறறிவுடன் நாம்
தெய்வீக காதலும் செய்தோம் !!

அணிகலன்களை அவளுக்கெனச் செய்து
அலமாரியில் அதை பூட்டிவைத்து
அதனழகை பார்க்கச் செய்தோம் !!

வெளியில்தான் வேதனைகள் என்று
வீட்டினுள்ளே அவள் இருந்துகொண்டாள் !
விடாமல் வீடு புகுந்தும்
அவளை வெட்டி வீழ்த்தினோம் !!

உவமைகள் மட்டும்தான் தாமென
அவளும் ஊமையாக ஆகிவிட்டாள் - இனி
உரக்கச் சொல்லி கொள்வோம்
நாமும் பெண்ணியம் பேணுவோமென !!

சொல்வதும் நாமே ! கேட்பதும் நாமே !!
- அவள் ?

எழுதியவர் : விக்னேஷ் குமரவேல் (16-Sep-16, 12:15 pm)
சேர்த்தது : vignesh28040
பார்வை : 293

மேலே