காய்ச்சல்

காய்ச்சல்! விஷக்காய்ச்சலாக இருக்கக் கூடும். வம்பெதற்கு! விட்டேன் நடையை டாக்டரிடம்! பார்வை நேரம் (6pm to 9pm). கிறுக்கு புத்தியில் தோன்றிய குறுக்கு சிந்தனையை அப்படியே விழுங்கி விட்டு உள்ளே சென்றேன்.

“வாங்க!” பணிப்பெண் வரவேற்றாள்! நான்தான் இன்றைக்கு முதல் போண்டியாக இருக்கக் கூடும்! மன்னிக்கவும். முதல் போணியாக இருக்க வேண்டும்! “உள்ளே வந்து உக்காருங்க! டாக்டர் வர்ற நேரம்தான்!” சொல்லிவிட்டு டிவியை சுவிட்ச் ஆன் செய்தாள். என் மேல் நம்பிக்கை இல்லை போலும்! இருக்கட்டும்!.
ஒரு வயதான தாத்தா வந்தார்! உங்களுக்கு இரண்டாவது பேஷண்ட் கெடச்சிட்டாறு என்று பணிப்பெண்ணைப் பார்த்து சிரித்தேன். அவர் நேராக என்னை நோக்கி வந்து பேஷண்ட்டா? என்று கேட்டார்!
ஆமாம் என்றேன்! “உள்ளே வாருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். பணிப்பெண் “டாக்டர் கூப்பிடுகிறார் உள்ளே போங்க” என்றாள்.
உள்ளே சென்றேன். “என்ன தம்பி , ஜுரமா?” என்று கேட்டார் கண்ணாடியை சரி செய்து கொண்டு. “ஆமா டாக்டர்!”
“எத்தனை நாளா இருக்கு? “
“ரெண்டு நாளா இருக்கு டாக்டர்”
“ஆ சொல்லு” என்றார் 1-ஆம் வகுப்பு காயத்ரி டீச்சரை நினைவு கூறும் விதமாக. வாயைத் திறந்து காட்டியதும் நாவினுள் ஒளி வீசினார்.
“மூச்ச இழுத்து விடுங்க தம்பி, இன்னும் ஒருமுறை. சரி பரவாயில்லை”
அதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. கீழே குனிந்து எழுத ஆரம்பித்து விட்டார். எழுதிக்கொண்டே இருக்கிறார். இன்னும்!
பொதுமைய்யா! நான் ஏதும் வாங்குவதாக இல்லை என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன். “டாக்டர் உங்களோட பீஸ்?” என்று அவரிடம் கேட்க வெளியே இருக்கும் பணிப்பெண்ணைக் கேள் என்று சைகை காட்டினார். மருந்து சீட்டை எடுத்துகொண்டு வெளியே வந்தேன். மிகவும் சுறுசுறுப்பாகக்காட்டிக்கொண்டே ஒருவர் என் சீட்டை வெடுக்கென்று புடிங்கிக் கொண்டு மெடிக்கல்ஸ் நோக்கி நடந்தார். சார் சார் நான் மருந்தை வெளியே வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னவுடன் அவர் முகத்தில் ஒரு ஏமாற்றம்.

“எவ்வளவு?” என்று கேட்டேன். 250 என்றாள் பணிப்பெண். 10 ருபாய் குறைவாக இருக்கிறது என்றேன். பரவாயில்லை அடுத்தமுறை வரும்போது தாருங்கள் என்றால் முகத்தில் சற்று பெருந்தன்மை தூக்கலாக. அவள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் உடம்பு என்னுடதயாயிற்றே! விட்டால் இவர்கள் நன்றி மீன்றும் வருக என்று போர்டு வைப்பார்கள் போல. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். இருமல் சத்தம் காலிங் பெல்லாக ஒலிக்க அம்மா “என்னடா உடம்புக்கு ஜுரமா?” என்று கேட்டவள் என் பதிலுக்கு காத்திருக்காமல் நெற்றி மீது கை வைத்துப் பார்த்தாள். வேகமாக சமையலறைக்குள் சென்றவள் சூடாக எதையோ கலந்து கொண்டு வந்து என்னை குடிக்கச் சொன்னாள். என்னவென்று கேட்காமல் குடித்துவிட்டேன். கஷாயத்தில் கொஞ்சம் மிளகும் அன்பும் தூக்கலாக தெரிந்தது. தூங்கி எழுந்தேன். பறந்துவிட்டது காய்ச்சலும் டாக்டரின் மீது வைத்திருந்த நம்பிக்கையும்.

எழுதியவர் : (17-Sep-16, 10:29 am)
சேர்த்தது : Nelson Vasudevan
Tanglish : kaaichal
பார்வை : 265

மேலே