கண்கள் பேசிய கதைகள்

அலையடித்து ஓயும்
கடல் போல்
உன் கண்களின் இமை அலைகளில்
இறுகி மூர்ச்சையாகிறேன்...

அந்த சிறு சிறு இடைவெளிகளிலும்
சிதைந்து போன நினைவுகளின்
சிதிலம் தெரிகிறது
உயிரற்ற நத்தையின் ஓடாய்...
உயிரற்ற முத்துச் சிப்பியாய்…!

இருந்தாலும் நீ என் இதயத்தின்
நாகரீகத் தொட்டில்..!
கனவுகளின் முகத்துவாரம்...!

கோடி பெளர்ணமிகளின்
மொத்த ஒளியிறங்கிய
உன் முகத்தில்
கருவண்டு இரண்டை
கண்களாக்கி விட்டதேன்.?
உன் முக அழகில்
பிரம்மனுக்கும் மயக்கமோ..?

உன் கண்களெனும் குப்பியில்
நிரம்பியிருக்கும்
காதல் எனும் போதையில்
சோம பானமும், சுரா பானமும்
சொற்ப சுவைகூட
இல்லாமல் போனதேன்..?

விடை தேடி அலைகிறேன்..

உனது காந்த கண்கள்
என்ற தேசத்தில்
கருப்பு மையென்ன
எல்லைக்கோடுகளா...?

அல்லது
என் உவர்ப்பு நில இதயத்தை
சரிப்படுத்தும் கந்தர்வ அமில
கருமை வண்டல்களா..?

காதலின் தாதுத் துகள்களா...?

கற்பனைகள் குறைவதில்லை.
கவிதைகளுக்கும் குறைவில்லை.
அத்தனைக்கும் காரணம்
உனது
கண்கள் பேசிய கதைகள்...!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-Sep-16, 4:43 pm)
பார்வை : 2141

மேலே