அப்புறம் என்னாச்சுன்னா

சொர்கத்துக்கு வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது . கடவுள் உடனே ஒரு தேவதையை அழைத்து , "நீ என்ன பண்ணுவியோ தெரியாது . ஆனா இனிமே சொர்க்கத்துக்கு வரவங்க கூட்டம் பாதியாகிரணும்." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

தேவதையும் உட்கார்ந்து யோசித்தது. அதற்கு ஒரு அருமையான யோசனை வந்தது . அதாவது, சொர்கத்துக்குள் நுழைய நினைப்போரிடம் அவர்கள் எப்படி இறந்து போனார்கள் ? என்று கேட்க வேண்டும் . யாருடைய இறந்த விதம் வித்யாசமாக இருக்கின்றதோ, அவர்களை மட்டும் சொர்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும் .

தேவதைக்கு இந்த யோசனை மிகவும் பிடித்துப் போக , உடனேயே அதை செயல்படுத்த முடிவெடுத்தது. அப்போது இறந்து போன ஒருத்தன் உள்ளே நுழையும் போது , அவனிடம் சொர்கத்தின் புதிய விதியை தேவதை கூற , அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கு கல்யாணம் ஆகி 5 வருசம் ஆகுது. குழந்தைங்க இல்ல. என் பொண்டாட்டி எனக்கு துரோகம் பண்றானு எனக்கு ஒரு நாள் தோணிச்சு. நான் ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்கேன். என்னோட வீடு 5 ஆவது மாடில இருக்கு.

ஒரு நாள் வேலைக்கு போறதா பொய் சொல்லிட்டு , பாதியிலேயே வீட்டுக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி என்னைய எதிர்பாக்கல. என்னைப் பாத்ததும் , 'ஏதாச்சும் மறந்து விட்டிட்டு போய்ட்டிங்களா? ' ன்னு கேட்டா.

நான் அவளுக்கு பதில் சொல்லாம வீடு பூரா தேடிப் பாத்தேன். ஆனா ஒருத்தனையும் காணோம். கடைசியா பால்கனிய (BALCONY) போய் பாத்தேன் . நான் தேடி வந்த பன்னாடை அங்க பால்கனி க்ரில்ல புடிச்சி தொங்கிகிட்டு இருந்தான் .

எனக்கு ரொம்பக் கோபம் வந்துச்சி . அவன் வெரல்ல ஓங்கி ஓங்கி மிதிச்சேன். வலி தாங்காம அவன் பிடிய விட்டுட்டு கீழ விழுந்துட்டான். நான் கீழ எட்டி பாத்தேன் . அந்த நாய் சாவாம ஒரு புதர் மேல விழுந்து கெடந்தான் .

நான் உடனே கிட்சனுக்குள்ள போய் , பிரிட்ஜ் அ இழுத்துகிட்டு வந்து , பால்கனி மேல கஷ்டப்பட்டு தூக்கி வச்சு , அந்த பிரிட்ஜ் அ கீழ விழுந்து கெடந்த அவன் மேல போட்டு, அவன நசுக்கி கொன்னுட்டேன்.

இதெல்லாம் செஞ்ச பின்னாடி எனக்கு சந்தோஷத்துல நெஞ்சு வலி வந்து, அங்கேயே விழுந்து செத்துட்டேன்."

அவன் கதையை கூறி முடித்ததும், தேவதை புன் சிரிப்புடன், "நீ உள்ளே போகலாம் ." என்றது .

அவன் போன சற்று நேரம் கழித்து , இன்னொருவன் வந்தான். அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூற , அவன் அவனுடைய கதையை கூற ஆரம்பித்தான்.

"நான் ஒரு அபார்ட்மெண்ட்ல 6 ஆவது மாடில குடியிருக்கேன். நான் எப்பவும் ப்ரீயா இருந்தா பால்கனில யோகா பண்றது வழக்கம் . அன்னைக்கு அப்படித்தான் தலைகீழ நின்னுக்கிட்டிருந்தேன். திடீர்னு பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்துட்டேன்.

நல்ல வேளையா 5 ஆவது வீட்டு பால்கனி கிரில் கம்பிய பிடிச்சுக்கிட்டேன். அந்த வீட்டுல ஒரு புருஷனும் அவனோட பொண்டாட்டியும் மட்டும் இருக்காங்க .

திடீர்ன்னு வெளிய வந்த அந்தம்மாவோட புருஷன் , பால்கனில தொங்கிகிட்டு இருந்த என் கைய மிதிக்க ஆரம்பிச்சான். நான் வலி தாங்காம கீழ விழுந்துட்டேன் . நல்ல வேளையா நான் விழுந்த எடத்துல ஒரு புதர் இருந்ததால நான் சாகல. ஆனா என்னோட முதுகு ஒடஞ்சி போச்சி.

அந்தம்மாவோட புருஷனுக்கு என் மேல அப்படி என்னதான் கோபம்னு எனக்குத் தெரியல. கொஞ்ச நேரத்துல மேல இருந்து ஒரு பிரிட்ஜ் அ என் மேல தள்ளி வுட்டு என்ன கொன்னுட்டான்."

அவன் பேசி முடித்ததும் , தேவதைக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு அவனை உள்ளே போக அனுமதியளித்தது.

மூன்றாவதாக ஒருத்தன் வந்தான் . அவனிடமும் தேவதை புது விதியை பற்றி கூறியது . அவனும் அவன் இறந்த கதையை கூற ஆரம்பித்தான்.

"எனக்கும் பக்கத்து தெருவுல ஒரு அபார்ட்மெண்ட்ல குடியிருக்குற ஒருத்தனோட பொண்டாட்டிக்கும் இடையில 2 வருஷமா கள்ள தொடர்பு இருந்துச்சி. அவ புருஷன் வேலைக்கு போனதும், அவ எனக்கு போன் பண்ணுவா. ஒடனே நானும் அவ வீட்டுக்கு போய்டுவேன்.

அன்னைக்கும் அப்படித்தான் அவ எனக்கு போன் பண்ணுனா . நானும் உடனே கெளம்பி அவ வீட்டுக்கு போனேன். ஆனா கொஞ்ச நேரத்திலேயே அவ புருஷன் வந்து கதவ தட்ட ஆரம்பிச்சான் . அவ உடனே என்ன பிரிட்ஜ்க்குள்ள வச்சு பூட்டிட்டு கதவ தெறக்க போனா .

நான் பிரிட்ஜ்க்குள்ளேயே பயந்து போய் உக்காந்திருந்தேன். அப்புறம் என்னாச்சுன்னா...?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (1-Oct-16, 11:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 236

மேலே