நம்பிக்கை
இருள் இலை சருகுகள்
நாற்றிசை நீள
வான் சுருள் வடுவென
நிலவின் தசைத் திரள்.
ஊரும் நிலவினில்
நிழலொன்றின் நடனம்...
ஊர்ந்த ஓர் விளிம்பில்
விழியின் உள்ளே
உடைந்தது இருள் திரள்.
இருளினில் மிரண்டு
உறையும் என் மனக்கிணறு.
பிரியும்
ஒளிச் சாம்பல் பாதையில்
என் கனவலைச் சரிவுகள்.
குளிர்ந்த பதிவுகள்
எங்கும்...
மழைப்பூ பூக்கள்.
மின்னலின் எச்சிலாய்
சுழன்றது காலம்.
பரிதியின் வரவில்
விரியும் மலர்ச்செம்மை.
மொக்கவிழ்க்கும் கணத்தில்...
கண்ணிமைச்சிறையில்
துளிர்க்கும் என்
கனவின் குமிழ்கள்.
பருத்தித் திரளாய்
ஒளி நிழல் எழும்ப
புல்விழி வளைவில்
புன்னகைக்கும்...
ஒளிர்ந்த பரிதியின் பிம்பம்.