யார் முதல் விஞ்ஞானி
விஞ்ஞானம் தோன்றியது எவராலே? - மனிதன்
விஞ்ஞானி ஆனதும் எதனாலே?
தேவைகள் கூடியது அதனாலே - விடையை
தேடினான் விஞ்ஞான வழியாலே....!
பச்சைக் கறிகள் சமைத்திடவோ - இல்லை
படுத்தும் குளிரை கொளுத்திடவோ!
கருப்பு இருளை பார்த்திடவோ - இரு
கற்கள் உரசியவன் விஞ்ஞானி...!.
விடைக்கின்ற குளிர்வாடைக் காற்றினையும் - காட்டு
விலங்குகள் எங்கனம் தாங்கிடுதோ..!
வினாவொன்றை வினவினான் விஞ்ஞானி - விலங்குத்
தோலுரித்து மூடிக்கொண்டான் தன் மேனி...!
வெகுதூரம் வேகமாக செல்வதற்கு - வட்ட
வடிவமாக சக்கரத்தை வடிவமைத்தவன்
ஆகச் சிறந்த ஆதிகால விஞ்ஞானி - அவன்
இந்த கால ஊர்திகளின் முன்னோடி....!
விஞ்ஞானத்தின் துவக்கம் எக்காலம்
கற்கால மனிதன் வாழ்ந்த அக்காலம்
மனிதனை உச்சிமேற்றிய அறிவியல் ஏணி - அதன்
ஆதிப் படியை மிதித்தவன் ஆதிமனிதன்
அவனே உலகின் முதல் விஞ்ஞானி....!!