கடவுளே … காப்பாத்து…

எத்தனையோ கருத்து முரண்பாடுகள் இருப்பினும், அவர்கள் எதிரியாக இருந்தாலும், அவர்கள் பூரண உடல் நலமுடன் விளங்கவேண்டும் என்று எண்ணுவதே தலைசிறந்த மிக அவசியமான மக்கட்பண்பு. அவ்வகையில், தமிழக முதல்வர் அவர்கள் தன் உடல்நலனை, வலிமையைத் திரும்பப்பெற்று, மக்கட்பணியாற்ற வருகைதர நானும் ஆவல் கொள்கிறேன். பிரார்த்திக்கிறேன்.
ஆனால், தமிழகத்தில் இப்போது “வதந்தியைப் பரப்புவோர்” என்கிற ஒரு புதிய இனத்தைக் கண்டுபிடித்து, அவர்களை உள்ளே தள்ளும் வேலையை தெள்ளத்தெளிவாக செய்ய தமிழக காவல்துறை பணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. சரி, அவர்கள் வதந்தியைத்தான் பரப்புகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதுதவறுதான். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்கிறார்கள். அதேபோல், வதந்தியைப் பரப்புதல் குற்றமெனில், வதந்திக்குக் காரணகர்த்தாக்களாக விளங்கி, அதற்கு இடம் கொடுப்பதும் குற்றமாகாதா?
வாக்களித்த மக்களுக்கு முதல்வரின் உடல்நிலையை, நலத்தை வெளிப்படையாக தெரிவிப்பதில் என்ன விபரீதம் நிகழ்ந்துவிடப் போகிறது? நரை, திரை, மூப்பு, பிணி ஆகியவை மானிடத்திற்கு மட்டுமல்ல … அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது தானே ! இதைத் தெரிவிப்பதில் சங்கடம் என்ன வந்து விடப்போகிறது?
ஒரு வாதத்திற்காக தொண்டர்கள் தீக்குளிப்பர் என்றே கொள்வோம். அதனால்தான் நாங்கள் வெளிப்படையாக அறிவிக்க தயக்கம் காட்டுகிறோம் என கூறினாலும், தீக்குளிப்பது, தீவைப்பது ஆகியவை தமிழக அரசியல் பண்பாட்டில் ஒன்று என்பது யாவரும் அறிந்ததே.
சமீபத்தில் விக்னேஷ் என்கிற இளைஞன் தீக்குளித்து இறந்தபோது, “அவர் துணிச்சலான முடிவெடுத்துள்ளார்” என தொல்.திருமாவளவன் அவர்கள் ஊக்குவித்தார். அதைப்போல, ஏற்கனவே நமது முதல்வருக்காக சிலர் தீக்குளித்திருக்கலாம். அது அறிவுடைமையாகாது என்பதை அறியாதவர்கள் செயலாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரின் உடல்நிலை குறித்து அனைவரும் ஒரேமாதிரியான மெளனம் காப்பதும், ஆட்சி நிர்வாகத்தில் எதோ ஒன்று நடக்கிறது அல்லது நடக்கப்போகிறது என்கிற கோணத்திலேயே பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுவதும் எந்தவகை நியாயம்?
அரசியல் தலைவர்கள் மாற்று அல்லது பொறுப்பு முதல்வர் தேவையில்லை என்று கூறினர். ஆனால், கவர்னர் திரு.ஓ.பி.எஸ். அவர்களிடம் பொறுப்பை வழங்கியதுமே ”நிர்வாகம் சீராக நடைபெற கவர்னர் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது” என்றனர். உண்மையில் இவர்களின் நிலைப்பாடு என்ன ?
செயின் பறிப்பு, கொள்ளை, கொலை விஷயங்களில் காட்டவேண்டிய அதீத அக்கறையை, வதந்தி விஷயத்தில் கையாள்வது ஏன்?
மக்களுக்கு கருத்து சுதந்திரம் தரப்படவில்லையா? அல்லது மக்கள் முக்கிய விஷயங்கள் குறித்த கருத்துகளை அறிந்துகொள்ளவே கூடாது என முடிவெடுத்து விட்டார்களா? எதுவாயினும் இது சரியான நடைமுறையல்ல.
இது குறித்து வழக்கு மன்றம் என்ன பதில் வைத்திருக்கிறது? பத்திரிக்கைகள், பிற ஊடகங்கள் ஆகியவற்றின் நிலைப்பாடு என்ன?
”இம்” என்றால் சிறைவாசம்… ”ஏன்” என்றால் வனவாசம் என்னும் பிரிட்டிஷாரின் ஆட்சி (அவர்கள் இந்தியாவை ஆண்டபோது) நடைமுறைக்கும் என்ன வேறுபாடு?
“மிசா” சட்டம் மறைமுகமாகப் பாய்கிறதா?
ஒருவர் ஆட்சிக்கு வந்துவிட்டால், அவரையோ, அவரது ஆட்சியையோ, அல்லது அவர்களின் கவலைக்கிடமான உடல்நிலையைப் பற்றியோ கண்டுகொள்ளாமல்தான் இருக்க வேண்டுமா? இது நல்ல ஜனநாயகத்தின் அடையாளமா?
மாண்புகள் மிகுந்த நமது காவல்துறை இதை எப்படி அனுமதிக்கிறது?
சமீபத்தில் மான நஷ்ட வழக்குகள் குறித்த விஷயத்தில் வழக்காடு மன்றம் தனது வேதனை மிகுந்த கருத்துகளை பகிர்ந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.
அதேபோன்று, இத்தகைய வதந்தி வழக்குகளிலும் கருத்து தெரிவித்தால், அரசுக்கு, காவல் துறைக்கு கெட்டபெயரில்லையா? அரசுகள் கூட மாறிப்போகலாம். ஆனால், நிலைத்துநின்று மக்களைக் காக்கும் காவல்துறையின் மாண்பு என்னாவது?
முதல்வர் விஷயத்தில் இவர்கள் காட்டும் வதந்தி குறித்த இதே அக்கறையை சாதீய, மத ரீதியான வதந்திகளை வேரறுப்பதிலும் காட்டுவார்களா?
2000 ஆம் ஆண்டில் உலகம் அழியப்போகிறது என வதந்தி பரப்பியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ”முடமானவர் எழுந்து நடக்கிறார்”, என்பதும், தமிழகத்தில் ”சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்” என்று சிலர் கூவுவதும், வதந்திகள் இல்லையா? இவை மக்களை பாதிக்காதா? இதனால் சமூக அமைதி கெடவில்லையா? இதற்கெல்லாம் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?
யாருடைய வழிகாட்டுதல், ஆணையின் பேரில் இவ்வாறெல்லாம் நடக்கிறது? முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்பது ஒருபுறம். பொறுப்பாளர் நியமிக்கப்படாத நிலை மறுபுறம். இந்நிலையில் முதல்வரின் இலாகாவான காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமான ஆணை யாரால், எந்தத் தேதியில் வழங்கப்பட்டது? ஒன்றும் புரியவில்லை.
இப்போது ஆளுனரால் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ள முதல்வர் இலாக்காக்களின் பொறுப்பாளரான திரு.ஓ.பி.எஸ் அவர்கள் தயவு செய்து இதுகுறித்து ஆலோசித்து, மக்களிடம் நேர்முகமாக பேசி, உண்மை நிலையை விளக்கவேண்டும். அதுமட்டுமல்ல, ”வதந்திகள் பரப்பினால் வழக்கு” என்பதை வாபஸ் பெற்று, கைதானவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டும்.
ஏனெனில் அனைத்து கடவுளர்களும் கூட விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர்.
இதுவே இவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகும். இதுவே இவர்களின் மீதான நல்லெண்ணத்திற்கு வழிவகை செய்வதாகும். தமிழக முதல்வர் நலம் பெற நானும் பிரார்த்திக்கிறேன்.

இந்தக்கட்டுரைக்கு என்ன ஆக்ஷன், ரியாக்ஷனோ தெரியவில்லை.
கடவுளே ….. காப்பாத்து….

எழுதியவர் : M .பழனிவாசன் (17-Oct-16, 8:39 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 353

சிறந்த கட்டுரைகள்

மேலே