வைரத்தோடும் மூக்குத்தியும்

வைரத்தோடும் மூக்குத்தியும்


“என்னவாம் மாப்பிள்ளை வீட்டார். எல்லாம் அவர்களுக்குத் திருப்திதானே. ஆர் இவ்வளவு காசும் நகையும் சீதனமாகக் கொடுக்கப் போகினம். ஏதோ நல்ல ஜாதகப் போருத்தம் என்றபடியால் விட்டுக் கொடுத்திருக்கிறம்”. மாப்பிள்ளை வீட்டிலிருந்து முடிவெடுத்து அவர்கள் கொடுத்த பதிலோடு திரும்பிவந்த புரொக்கர் பொன்னையரைப் பார்த்து கெட்டார்; தேவகியின் தந்தை ராஜலிங்கம். அவர் மனைவி அம்பிகா ஆவலுடன் பொன்னையரின் பதிலை எதிர்பார்த்து சுவர் ஓரமாக நின்றாள். அவள் மூக்கில் வைரமூக்குத்தி மதுரை மீனாட்;சி அம்மனைப போல் பிரகாசித்தது. அம்பிகா கறுப்பி என்றாலும் நல்ல முகவெட்டு, அந்த வயதிலும்;; இறுக்கமான மெல்லிய உடல். அவளது மூக்குத்தியின் பிரகாசம் இருட்டில் மின்னும் மின்மினிப் பூச்சிபோலிருந்தது.

தரகர் பொன்னையர் இப்படியான சிக்கலின் போது பதிலை உடனே சொல்லமாட்டார். சுற்றி வளைத்து தான் விஷயத்துக்கு வருவார். அது அவர் அனுபவம்
“அது சரி அம்மா உங்களிடம் முக்கியமாக ஒன்று கேட்கவேண்டும’. மாப்பிள்ளை வீட்டார் தேவகியைப் பெண் பார்க்க வந்த போது நீங்கள் உந்த மூக்குத்தியோடவா இருந்தீர்கள்.”
“ஓம் அதுக்கு இப்ப என்ன?. இந்த மூக்குத்தியை கணகாலம் போட்டிருக்கிறன். அப்பா தந்தவர்”.

“அப்போது மகளுக்கு அவ்வளவு நகை போட்டிருக்கவில்லையே”.

“அவள் விரும்பவில்லை. ஏன் எங்களிடம் இருப்பதை மாப்பிள்ளை வீட்டாருக்கு வெளிக்காட்டுவான்”?

“அப்படிச் சொல்லுங்கோ அது தான் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. உங்கள் வைர மூக்குத்தி அவர்கள் கண்களை உறுத்தியிருக்கு”.

“ஏன் அதையும் அவர்கள் களட்டி சீதனமாகத் தரட்டாமோ” கோபத்ததோடு ராஜாகேட்டார்.

பெயருக்கு ஏற்ப பணவசதி படைத்வர் அவர். எவ்வளவு செல்வம் இருந்தும் வெளிக்காட்டமாட்டார். இருபது வயதிலேயே வேலை கிடைத்து மலேசியாவில் உள்ள பினாங்கிற்;குப் போன இராஜலிங்கம் எங்கே மலேயாக்காரியோடு தொடர்பு வைத்திவிடுவானோ என்ற பயத்தில் லீவில் வந்த இராஜாவுக்கு மாமன் மகள் அம்பிகாவை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தார் இராஜாவின் தந்தை. அம்பிகாவின் தந்தை ரங்கூனில் இரண்டாம் உலகயுத்தத்துக்கு முன்னர் சொந்தமாக கடை வைத்திருந்தவர். தேவையான அளவுக்கு பணம் சம்பாதித்து ஜப்பானியரி;ன குண்டு வீச்சுக்கு முன்னர் தாய் நாடு திரும்பினார்.

பொன்னையருக்கு இராஜா குடும்பத்தின் பூர்வீகம் தெரியும். எவ்வளவு சொத்து இருக்கிறது என்றும் தெரியும்.

“அதில்லை ஐயா மாப்பிள்ளை வீட்டுக்காரர் பெண்ணுக்கு வைரத் தோடு போடவேண்டும் என்று கேட்கினம். அம்மா மூக்கிலை வைர மூக்குத்தியை கண்டு போட்டினம் பொல இருக்கு. அதோடை அம்மாவின்டை தகப்பன் ரங்கூனில பிஸ்னஸ் செய்து சம்பாதித்தவர் என்று அறிந்திட்டினம் போல. ரங்கூன் வைரம் பற்றி கேள்விபட்டிருப்பினம். அங்கிருந்து இங்கை வந்த பலபேர் மகளமாருக்கு வைர நகையையும் பெரிய வீட்டையும் சீதனமாக கொடுத்திருக்கினம். ஏன் அங்கை வேலை செய்து நாடு திரும்பிய முருகேசு தன்னுடைய மூன்று மகள் மாருக்கும் ஒரே மாதிரி வைரத்திலை தோடு சேய்து போட்டதுமல்லாமல் வீடும் கட்டிகொடுத்தவர். இது தான் சொல்றது சொத்து இருந்தால் தம்பட்டம் அடிக்கக்கூடாது எண்டு. சிலபேர் செய்து காட்டியதை பார்த்து தான் அவையளும் கேட்கினம்”.

“பொன்னர், எனக்கு இருப்பது ஒரே மகள். பட்டதாரி. நல்ல குணமுள்ளவள். சமூக சேவகி எங்களுக்குப் பிறகு எங்கடை சொத்தெல்லாம் அவளுக்குத் தான் எண்டு அவையளுககுக தெரியவேண்டும்”.

“மாப்பிள்ளையை விடத் தாயும் தகப்பனையும் தான் முக்கியமாக தங்களுக்கு இரண்டாவது மருமகளாக வருபவள் வைரத்தோட்டோடை வர வேண்டும் என்று ஒற்றைகாலிலை நிற்கினம்;. அவர் அந்தஸ்த்து பார்க்கிற பேர்வழிகள். கார் வேண்டும் எனறு கேட்டால் கூட ஆச்சரியப்படத் தேவையில்லை” தரகர் பதில் அளித்தார்.

“ பெடியன் என்னவாம் சொல்லுறான்” ?

“ அவன் ஒன்றுமே சீதனத்தைப்பற்றிப் பேசவில்லை” சிரித்தபடி பொன்னையர் பதில் அளித்தார்.
“என்ன புதுமையான கதையாக இருக்கிறது. நல்ல காலம் தகப்பன் தனக்கும் வைரமோதிரம் வேண்டுமென்று கேட்காமல் விட்டிட்டாரே” என்றாள் சற்று கோபத்தோடு அம்பிகா.

“அம்மா, வழக்கத்திலை பெற்றோர் தான் சீதனம் பேசுவது வழக்கம். சிலர் டொனேஷன் கூட கேப்பினம். இவர்கள் அதைக் கேட்கவில்லை ஆனால் பெடியனுக்கு அப்படி அவர்கள் கேட்கிறதுக்கு காரணமிருக்கிறது.”
“ என்ன அப்படி தலை போகிற காரணம் தகப்பனாருக்கும் தாயுக்கும்.?. வடிவான நல்ல நிறமுள்ள, குணமான, படித்த பெண்பிள்ளையைக் கொடுக்கிறம். அவளுக்கு சமூகத்திலை நல்ல மதிப்புண்டு. வரப் போகிற மாப்பிள்ளைக்குப் பொறுப்பு வேறு கிடையாது. வேறு என்னவாம் வேண்டும்?” சற்று கோபத்தோடு கேட்டாள் அம்பிகா.

“கோவிக்காதையுங்கோ அம்மா.. மாப்பிள்ளையிண்டை தாய் திருமணமாகி வீட்டுக்கு வரும் போது வைரமூக்குத்தியும் , வைரத்தோட்டொடும் வந்தவவாம். அது மட்டுமே? மாப்பிள்ளையின்டை தமையன் திருமணமானபோது அவர் மனைவியும் வைரத்தோட்டோடு தானாம் வந்தவ. உங்கடை மகள் அதில்லாமல் குடும்பத்துக்குள்ளை போன பிறகு அதைச் சுட்டிக்காட்டி குடும்பத்தில் பிரச்சனை வரக் கூடாது கண்டியளோ. உங்கடை மகளிண்டை மரியாதை தான் குறையும். அவர்கள் சொல்லுறதிலை நியாயமிருக்குது தானே”, என்றார் தரகர்.

“அம்பிகா, பொன்னையர் சொல்லுறதிலை நியாயமிருக்குது போல எனக்குப் படுகிது, திருமணமாகி கொஞ்சகாலத்திலை வீட்டுக்கு வந்தவள் என்ன நகை கொண்டு வந்திருக்கிறாள் என்று துருவித் துருவி விசாரிதது மூத்த மருமகளோடை ஒப்பிட்டுப் பார்த்து குறை கண்டு பிடிப்பதில் சொந்தக்காரர் கெட்டிக்காரர். பிறகு தேவகிp கண்களங்கக் கூடாது. அதோடை இப்படி நல்ல ஜாதகப் பொருத்தத்தோடை அமைகிறது அபூர்வம். மாப்பிள்ளையின் சாதகமும் நல்ல அதிர்ஷ்டம் உள்ள சாதகம் என்று சாஸ்திரியார் சொன்னார். இதை பார்க்கும் போது நாம் ஒத்துப் போகத்தான்; வேண்டும். என்ன சொல்லுகிறீர்.” மனைவியை பார்த்து கேட்டார் இராஜலிங்கம்.

“அப்ப எனக்கு எண்டை அப்பா தந்த ரங்கூன் வைரங்களிலை தோடு செய்து போடச் சொல்லுறியளே? கணவனைக் கேட்டாள் அம்பிகா.

“அதை பெட்டிக்குள் மூடிவைத்திருந்து என்ன பிரயோசனம்? நானே அவ் வைரங்களை கண்டு கனகாலம். அவள் தேவகிக்கு கொடுத்தால் காலப்போக்கில் அவளுக்கு மகள் பிறந்தால் பரம்பரைச் சொத்தை அவளுக்கு கொடுப்பாள். என்ன சொல்லுறீர்” ராஜா மனைவியைக் கேட்டார். பரம்பரை என்றவுடன் அம்பிகாவுக்கு ராஜா சொன்னதில் அர்த்தம் இருப்பதை உணர்ந்தாள். சொத்து தன் பரம்பரையை விட்டு போகக் கூடாது என்பது அவள் நோக்கம். கணவன் சொன்னதை அம்பிகா ஒரு போது எதிhத்து பேசியது கிடையாது. தேவகி பரம்பரை சொத்தை பாதுகாப்பாள் என்ற தைரியம் அமபிகாவுக்கு.

பொன்னையருக்கு உள்ளுக்குள் சந்தோஷம். கலியாணம் கை கூடினால் இரண்டு பகுதிகளிமிருந்து கிடைக்கும் தரகு காசை மனதுக்குள் கணக்கு போட்டு பார்த்தார். தன் வீட்டு அடகுக் காசை கட்டி முடித்திடலாம். தன் மனைவியின் நச்சரிப்பில் இருந்து தப்பிவிடலாம்.
“நீங்கள் செல்வது சரிதான். நான் அந்த வைரங்களை வைத்திருந்து எனக்கு என்ன பிரயோசனம். தரகர். நீர் போய் மாப்பிள்ளை பகுதிக்கு;சொல்லும் நல்ல விலையுயர்ந்த ரங்கூன் வைரத்திலை தோடும், வைர மூககுத்தியும் செய்து போடுகிறோம் என்று. இதுக்கு மேல் நகை கேட்கக் கூடாது எண்டும் சொல்லும்”. அம்பிகாவின் பேச்சில் திமிர் தொனித்தது

“சரி அம்மா. நல்ல நாளாகப் பார்த்து கலியாணத்துக்கு குறித்துக் கொண்டு வாறன்”. பொன்னையர் மகிழச்சியேர்டு போனார். போகும் போது அவரது கைச்செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார் ராஜா..

தேவகி கதவு ஓரத்தில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டவாறு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். என்ன மனிதர்கள். பணம் , பாரம்பரியம், அந்தஸ்த்து இது தான் முக்கியமா? எங்கடை சமுதாயத்தில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் குடும்பங்கள் கஷ்டப்படுவது இவர்களுக்கு தெரியவாப் போகுது?. போரினால் எத்தனை அனாதை பிள்ளைகள் கவனிப்பார் அற்று இருக்குதுகள். மகள் தேவகியின் முற்போக்கு சிந்தனைகளை அவள் பெற்றோர்கள் அறியவில்லை. அவளும் வெளிக்காட்டிக் கொள்ள வில்லை. தனக்கு வரும் கணவனும் தன் சிந்தனைக்கு ஏற்றவராக இருக்க வேண்டும் என்பதே அவள் விருப்பும. மாப்பிள்ளையைப் பற்றி பெற்றோருக்குத் தெரியாமல விசாரணை நடத்தியதில் அவன் ஒரு பொதுவுடமைப் போக்குள்ளவன் என்பது அவளுக்கு தெரியவந்தது. . இந்த வைரமூக்குத்தி நாடகம் எல்லாம் தாயும் தகப்பனும் ஆடும் நாடகம் என்பது அவளுக்குத் தெரியும்.

*******

தேவகியின் திருமணத்தின் போது அவள் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அலங்காரம் செய்தது போல் காட்சியளித்தாள். எதிர்பாராத அளவுக்கு கூட்டம். அதில் பெண்கள் தான் அதிகம். இவ்வளவு நகைகளின் பாரத்தை எப்படி தேவகி தாங்கிக்கொள்வாள்”. ஆறு சோடி காப்பு, பதக்கம் சங்கிலி, பத்து பவுனில் சங்கிலி, முத்து அட்டியல்;. இரண்டு கையிலையும் மோதிரங்கள். ஒட்டியாணம் , சின்னச் சின்ன வைரங்கள் சூழ நடுவிலை ஒரு பெரிய வைரங்கள் இரண்டு பிரகாசமாய் ஜொலிக்கும் வைரத்தோடு, அம்பிகாவின் உறவினருக்கு அந்த நகைகள் விளம்பரமாக அமைந்தது மற்றுமன்றி வயிற்றெறிச்சலையும் கொடுத்தது. குசு குசு வென்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். இவ்வளவு நகை தன்னிடம் இருக்கிறது என்று ஒரு போதும் அம்பிகா எங்களுக்கு சொன்னது கிடையாது காட்டிக் கொண்டது கிடையாது. கலியாணங்களுக்கு வரும்போது போட்டதும் இல்லை. என்றாள் தூரத்து உறவுக்காரி ஒருத்தி.

“ இது எல்லாம் அவளுடைய அப்பர் மலேசியாவிலையும், பர்மாவிலையும் சேர்த்த சொத்து.” இது இன்னொருத்தியின் விளக்கம்.

“இந்த வைரத்தோடு இரண்டுமே பல இலட்சம் பெறும். பார்க்க கண்ணை கூசுது. உது நிட்சயம் தேவகியின் தாத்தா சம்பாதித்து வாங்கின ரங்கூன் வைரம் தான். கொகீனூர் வைரம் போலிருக்கு” இது வந்திருந்த ஒருத்தியின் விமர்சனம். தன் மகளுக்கு இது போல நகை போட முடியவில்லையே என்ற ஆதங்கம் வேறு அவளுக்கு. தன் மகளுக்கு பிறர்ட கண்பட்டு போய்விடுமோ என்று அம்பிகா யோசித்தாள். திருஷ்டி சுத்திப் போட்டாள். மாப்பிள்ளைக்கோ தான் நினைத்ததை சாதித்து விட்டேன் என்ற பெருமிதம்;. அடிககடி மனைவின் வைரத்தோட்டை கடைக்கண்ணால் பார்த்து புன்சுரிபபை வெளியிட்டான் அண்ணியை விட தன் மனைவி பெறுமதி வாய்ந்த வைரத்தோடு அணிந்திருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

“ வைரம் வாங்கும் போது பார்த்து பார்த்த வாங்கவேண்டும் கறுப்பு புள்ளி ஏதும் விழுந்திருந்தால் குடும்பத்துக்கு நல்லதல்ல. அக்பர் மன்னரின் குடும்பம் கொகினூர் வைரத்தால் சீரழிந்தாக கேள்விப்பட்டேன்”என்று தனது கருத்தை தெரிவித்தாள் ஒரு கிழவி. அவள் எப்போதும் நல்லது பேசியது கிடையாது.

“ கிழவி, ஒரு நல்ல காரியம் நடக்கும் போது தேவையில்லாததை கதைக் கதைக்காதே. தேவகி நல்ல மனசு உள்ள பிள்ளை, அவளுக்கு அப்படி ஒன்றும நடக்க கூடாது. நடக்க கடவுள் விடமாட்டார்” இது ஒரு நல்ல மனசு படைத்த கிழவியின் ஒருத்தியின் பதில்.
திருமணம் ஒருவழியாக பிரச்சனை ஒன்றுமில்லாமல் நடந்தேறியது இராஜலிஙகம் தம்பதிகளுக்கு பெரும் சந்தோஷம்.
.
“ என்ன எல்லாம் திருப்திதானே” என்று மாப்பிள்ளையின் தாயாரைப் பார்த்து சிரிப்போடு கேட்டாள் அம்பிகா.

“ ஓம் ஓம். நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுடைய மகளுக்கு தானே செய்திருக்கிறியள.; வேறுயாருக்குமே?” என்றாள் பதிலுக்கு நக்கலாக சம்பந்தி.

******

தேவகிக்குத் திருமணமாகி இரு வருடங்கள் உருண்டோடியது ஏதோ கனவு போலிருந்தது அம்பிகாவுக்கு. தேவகியும் கணவனும் தனிக்குடித்தனம் நடத்தினர். அதையே ராஜா தம்பதிகளும் விரும்பினார்கள்;.
புது வருடத்துக்கு தேவகியும் கணவனும் வீட்டுக்கு வந்த போது அம்பிகாவும் ராஜாவும் திகைத்துப் போய் நின்றனர்.

“ என்ன தேவகி கலியாணத்துக்கு நாங்கள் தந்த வைரத்nதூடும் மூக்குத்தியும் எங்கை?; ஏன் தாலியோடையும் சங்கிலியோடையும் மட்டும் வந்திருக்கிறாய். நீ இப்படி வந்தது உண்டை அவருக்குத் தெரியுமா?
தேவகி கணவனை பார்த்து சிரித்தாள் அவர் பதில் சொல்லட்டும் என்று எதிர்பார்த்து

“ மாமி ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. ஒரு நல்ல காரியத்துக்கு தான் நாங்கள் நகையை பாவித்திருக்கிறோம். தேவகியின் விருப்பமும் அதுவே”.

“ என்ன தேவகி உண்டை கணவர் சொல்வது உண்மையா. அப்படி என்ன நல்ல hகரியத்துக்கு நகையை பாவித்திருக்கிறாய்?

“ ஓம் அம்மா. நகையை கழுத்தில் வடிவுக்கு போட்டிருந்து என்ன பயன்ஃ எத்தனையோ அனாதைப் பிள்ளைகள் சாப்பிட , படிக்க வழியில்லாமல் கஷ்டப்படுவது உங்களுக்குத் தெரியவாப்போகிறது? வாழ்க்iயின் ஒரு கோணத்தில், உங்கள் பரம்பரை, சௌகரியங்கள் , அந்தஸத்து பற்றியே சிந்தித்தபடி வாழ்பவர்கள் நீங்கள்.. நானும் என்கணவரும் அப்படி இல்லை. அவர் என்னைப் போல் ஒரு முற்போக்குவாதி. திருமணத்துக்கு முன்னரே அவரப்பற்றி விசாhரித்துவிட்டேன். பணக்கார குடும்பத்திலை பிறந்தாலும் அவர் போக்கு என் போக்கைப் போல்” தேவகி சொன்ன விளக்கம் அம்பிகாவுக்கும் ராஜாவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

“கலியாணத்துக்கு உனக்கு போட்ட நகைகள் இப்ப எங்கே? அம்பிகா கேட்டாள்.

“ ஒரு அனாதைபிள்ளைகளுக்கான இல்லம் ஒன்றை ஸ்தாபிக்க பயன் படுத்திவிட்டோம். சுமார் ஐம்பது பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள். வளர்ந்து அறிவாளியாவார்கள். சமூகத்து உதவுவார்கள் அவ்வளவும் வைரம் போன்ற பிள்ளைகள். இனி என்ன வேண்டும்.” தேவகியின் கணவர் சொன்தை அவர்களால நம்பமுடியவில்லை. வைரத்தோடு வேண்டும் எண்டு கேட்டார்களே இதுக்குத்தானா?. அப்போ எனது பரம்பரை நகைகளின் கதி என்ன? அம்பிகா அங்கலாயித்தாள். ராஜாவால் பதில் சொல்ல முடியவில்லை.

“ போக வேண்டிய இடத்துக்கு வைரங்கள் போய் சேர்ந்து விட்டது அம்மா” என்றாள் அமைதியாக தேவகி.

******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (19-Oct-16, 2:11 am)
பார்வை : 444

மேலே