நாட்டாண்மை நாச்சிமுத்து

“என்ன நாட்டாண்மை காட்டுகிறாய்”?” என்ற சொற்பதம், அதிகாரம் காட்டுவதன்; மதிப்புண்டு. ஆனால் கொழும்பில் வியாபரப் பகுதியான “பெற்றா” என அழைக்கப்படும் புறக்கோட்டையைத் தெரியாதவர்கள் இல்லை. புறநகர் பகுதியைப் பேட்டை என்பர். தமிழ் நாட்டில் “பேட்டை” என்று ஒதுக்குப் பெயரோடு ராயல் பேட்டை, சைதாப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஐயம்பேட்டை, ஆழவார்பேட்டை, குரோம்பேட்டை போன்ற பல பகுதிகள் சென்னையிலுண்டு. இவ்வார்ததை அங்கிலோ இந்திய வார்ததையாகும். பேட்டையிலிருந்து மருவியதே பெற்றாவாகும்.

கொழும்பில் வணிகத்திற்கு பிரதான இடம் புறக்கோட்டை என்ற பெட்டாவாகும். இவ்விடத்தை சிங்களத்தில்; பிற்ற கோட்டை என்றழைப்பா.; சிங்கள, தமிழ் முஸ்லீம் இனத்தைச் சார்ந்த கடும் உழைப்பாளிகள் உள்ள இடத்தைக் குறிக்கும் இடம் பெற்றா. மூட்டைகளை ஏற்றி செல்லும் தள்ளுவண்டிகளும், தோளில் சுமந்து செல்லும் உழைப்பாளிகளும் நிறைந்த இடம். சரித்திர வரலாறு படைத்த கட்டிங்களும் இங்குண்டு கொழும்பில் பிரபல வர்த்தகர்களின் கடும் உழைப்புக்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், பலருக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதில் பிரசித்தம் பெற்ற இடம் “பெற்றா” என்ற வணிகப் பகுதியாகும்;.

அக் காலத்தில் தென்னிந்திய வர்த்தகர்களும், யாழ்ப்;பாணத்து வியாபாரிகளும் ஆட்சி புரிந்த இடம் புறக்கோட்டை என்ற பெற்றா. பெற்றாவில் பிரதான வீதியல் உள்ள ஐந்து லாம்புச் சந்தியை அறியாதவர்கள் இல்லை. அடுத்த முக்கிய வீதி காஸ்வேர்க் வீதி. சிங்கள முஸ்லீம் வர்த்தகர்களோடு இணைந்து தமிழர்கள் வியாபாரம் செய்தார்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருழைக்கிழங்கு, பெரிய வெங்காயம் , அரிசி, டின் மீன், செத்தல் மிளகாய், பல சரக்குகள் போன்ற ஒவ்வொரு பொருட்களின் தரமறிந்து இறக்குமதி செய்து, நம்பிக்கையோடு வியாபாரம் செய்து, இலங்கையின் பல பகுதிகளுக்கு விநியோகம் செய்து, அப்பொருளை அடிப்படையாக வைத்து பெயர் பெற்றவர்கள் பலர். உதாரணத்துக்கு டின் மீன், மாணிக்கம் , உருளைக்கிழங்கு சண்முகம், ஏ. ஸ். சங்கரப்பிள்ளை போன்றவர்களைத் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இவ்வியாபாரிகள் பெரும்பாலும் யாழ்குடாநாட்டில் உள்ள காரைதீவு, கரம்பன், வேலணை ஆகிய தீவுப்புகுதிகளை பிறப்பிடமாக கொண்டவர்கள். பல இனததை சேர்ந்த இப்படி பலதரப்பட்ட வியாபாரிகள் பெற்றாவில் ஆதிக்கம் செலுத்தினா.; இவர்கள் எவ்வளவுக்கு வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகளின் செல்வாக்குடையவர்கள் என்பதை பெரும்பாலோரது வீடுகள் இருந்த கறுவாக்காடு, கொள்ளுப்பிட்டி பகுதிகளும்; அவர்களின் அந்தஸ்த்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வளவுக்கு பிரபல்யமானவர்களாக இருந்தும,; பல ஊழியர்களை பரிபாலனம் செய்யும் தகுதி பெற்றாலும், எளிமையானவர்களாக வாழ்;ந்தார்கள். சுங்க இலாக்கா அதிகாரிகளை அரவணைத்து வணிகம் செய்தார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பு முக்கிய அம்சமாகும். அதோடு பொருட்களைப் பாதுகாப்பாக துறைமுகத்திலிருந்து பண்டகசாலைக்குக் கொண்டு வந்து இறக்கி, அதன் பின்னர் களவு போகாமல் கடைகளுக்கு விநியோகம் செய்வதில் திறமை பெற்றவர்கள் நாட்டாண்மைக்காரர்கள்.

திடகாத்திரமான தசைகளை வெளிப்படுதும் கறுத்த உடல், கண்டிப்பான பார்வை. நிமிர்ந்த நடை, விரல் அசைவினால் வேலை வாங்கும் திறமை. சிங்களம், தமிழ், அரைகுறை ஆங்கிலம் பேசும் திறமையுள்ளவன் நாட்டாண்மை நாச்சிமுத்து. முத்து தினமும் தேகப்பயிற்சி செய்வான். பெற்றா நாட்டாண்மைக்காரர்களுக்குள் முக்கியமான பேர்வழி. பெற்றாவில் “முத்து” என்று அன்பாக முதலாளிகளால் அழைக்கப்படும் நாச்சிமுத்துவை 1970இல் தெரியாதவர்கள் பெற்றாவில் இல்லை பொருட்களை மூட்டை மூட்டைகளாக எந்த பாரமானாலும் கடும்வெய்யிலில் வியர்வை சிந்தச் சிந்த தள்ளு வண்டிகளில் ஏற்றி இறக்கும் தொழிலாளிகளை தன் பார்வையின் கட்டுப்பாட்டுககுள் வைத்திருந்தான் தெயிலைத் தோட்டத்துக் கண்காணியைப் போல். அதோடு தன் சக தொழிலாளிகளுக்கு தோல் கொடுத்து தேவைப்பட்ட நேரத்தில் உதவவும் தயங்கமாட்டான். சில மூட்டை தூக்கும் தொழிலாளிகள் மூச்சு வாங்க எவ்வளவு பாரமாக இருந்தாலும் நாட்டாண்மையின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பார்கள். இவர்களுக்குகென மூட்டை தூக்குவோர் சங்கமிருந்தது. அதற்கு தலைவன் முத்து. சங்க அங்கத்தினர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பெற்றாவில் வணிகம் நடக்காது.

முத்து தமிழ் நாட்டில் உள்ள திருச்செந்தூருக்கு 11 மைல் தொலைவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பண்டைய துறைமுகங்களில் ஒன்றைக் கொண்ட குலசேகரப்பட்டிணத்தில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன். வியாபாரிகளோடு பழகி நல்ல பெயர் பெற்றவன். பைவாஸ், மிரண்டாஸ், பின்டோஸ் போன்ற பரவர் இனத்து கத்தோலிக்க வியாபாரிகள் குலசேகரப்பட்டிணத்தில் வாழ்ந்தாலும் அடிக்கடி கொழும்புக்கு படகுகளில் வியாபாரத்துக்காகச் சென்று வந்தார்கள். அவர்களோடு நாச்சிமுத்துவும் அவரகளின் பாதுகாப்புக்காக சென்று வந்தான். சிலம்படி, மல்யுத்தம், கராத்தி ஆகிய தற்காப்புக்கான வீரவிளையாட்டுகளைக் கற்றிருந்தான். பரவர் இனததை சேர்நத வியாபாரிகள் கொழும்பில் ஸ்தாபித்த கடைகளுக்கு பாதுகாப்பை கவனிக்க முத்துவை நியமித்தார்கள். கருவாட்டு வியாபாரம் பரவர் ஆதிக்கத்திலிருந்தது. அவர்கள் வைத்தது தான் விலை.

நாளடைவில் பெற்றாவின் நாட்டாண்மை பதவி கிடைக்க முத்துவிற்கு வெகு காலம் செல்லவில்லை. கொட்டாஞ்சேனை அந்தோனியார் கோயிலடியைச் சேர்ந்த சிங்களப் பெண்ணான ரங்மெனிக்காவை காதலித்து திருமணமும் செய்து கொண்டான். மெனிக்காவுக்கு முத்துவின் திடகாத்திரமான உடல் மேல் ஒரு தனி மோகம். அவளின் குடும்ப உறவினால்; சிங்களத்தை சரளமாக பேசவும் கற்றுக் கொண்டான். அதனால் சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளிகளை இலகுவாக அவனால் பரிபாலனம் செய்ய முடிந்தது. பல இனத்து வியாபாரிகளும் அவன் மேல் மதிப்பும் அன்பும் வைத்திருந்தனர். எந்த தொழிலாளிகள் பிரச்சனைக்கும் அவன் முன்னின்று சமரசம் செய்து வைப்பான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.

“முத்து இன்று இந்தியாவிலிருந்து வரும் கப்பலில் பெரிய வெங்காயம் வந்திறங்குகிறது. சுங்க அதிகாரிகளோடு பேசிவிட்டேன். சுணங்காமல் வெங்காய மூட்டைகளை பண்டகசாலைக்கு மாற்றிவிடு. பல ஓடர்கள் வந்திருக்கு கெதியிலை பழுதாக முதல் விநியோகம் செய்தாக வேண்டும். இது உன் பொறுப்பு” வெங்காயம் இறக்குமதி செய்யும்; சிங்கள முதலாளி சந்திரா என சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரசேனாவின் கட்டளையது.

யாழ்ப்பாணத்தில் இருந்து லொறிகளில் வரும் சின்ன வெங்காயத்துக்கும் பம்பாயிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயத்துக்கும் பெற்றா மார்க்கட்டில் பலத்த போட்டி. இது சந்திரா முதலாளிக்கு ஏற்கனவே தெரிந்தது . முத்துவை அழைத்தார் சந்திரா. “இதோ பார் முத்து! நீ என்ன செய்வாயோ தெரியாது சின்ன வெங்காயம் மார்க்கட்டுக்கு வரமுதல் பெரிய வெங்காயம் விநியோகித்தாக வேண்டும். இல்லையேல் நான் செலவு செய்த பணம் வீண்.”

“ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ மாத்தையா! அதை நான் கவனித்துக்கொள்கிறன்”. முத்து அளித்த பதில் சந்திராவுக்கு திருப்திகரமாக இருந்தது. இரண்டு லொறிகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துகொண்டிருந்த சின்ன வெங்காயம், குறித்த நேரம் கொழும்புக்கு வரமுடியாமல் செய்ய, அனுராதபுரத்தில் உள்ள சிங்கள நாட்டாண்மைகாரர்களின் உதவியோடு வேண்டிய ஏற்பாடுகளை முத்து தயார் செய்து விட்டான். பல நகரங்களிலிருந்த நாட்டாண்மைக்காரர்களுக்கிடையே இணைப்பு இருந்தது. ஆனுலாபபுரத்துக்கு வடக்கே ஏ9 பெருமபதையில் உள்ள மதவாச்சி ஊருக்கு அருகே வெங்காயம் சுமந்து வந்த இரண்டு லொரிகளும் தடம் புரண்டது. வெங்காய மூட்டைகள் பாதையில் சிதறிக்கிடந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது. முத்து திட்டமிட்டபடி சின்ன வெஙகாயம் கொழும்பை அடையவில்லை.

எல்லாம் சீரான நிலைக்கு வருவதற்கு சில நாட்கள் எடுத்தது. அக்காலத்துக்குள் பெரிய வெங்காயம் விநியோகிக்கப்பட்டு வெங்காயத் தட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. முத்துவின் திறமையைப் பாராட்டினார் சந்திரா. திறமைக்கு கை நிறைய முத்துவுக்கு பணமும் கிடைத்தது. அந்தபணம் மனைவி மெனிக்காவின் வருத்தத்துக்கு செலவு செய்ய போதுமானதாக இருந்தது.

புறக்கோட்டையில் பல நகைக்கடைகள் இருந்த உள்ள வீதி செட்டித் தெரு. இக்கடைகளின் உரிiயாளர்கள் பெரும்பாலோர் தமிழரகள். ,1983ம் ஆண்டு கொழும்பில் நடந்த இனக்கலவரத்தின்போது, எந்த நேரமும் சிங்;கள காடையர்களால் செட்டித் தெரு தாக்கப்பட்டு கடைகள் கொள்ளையடிக்கப் படலாம் என்ற பயம் நகைக்கடை வியாபாரிகளுக்கு இருந்தது.. சிங்களவர்கள் கூட அங்குதான் நகைகள் வாங்குவர். பல கடைகளின் பாதுகாப்பு நாட்டாண்மை முத்துவின் மேற்பார்வையிலிருந்தது. அவனது அரசியல் ஆதரவும் பாதுகாப்பிற்கு உதவியது. தொடர்ந்து நாட்டாண்மைத் தனத்தை முத்துவால் காட்ட முடியவில்லை. ஒரு விபத்தில் அவனது வலது கால் ஊனமாகியது. அவன் செய்த பாவம் அவனுக்கு அந்த நிலையை கடவுள் கொடுத்தார் என்று சனங்கள் பேசிக்கொண்டனர். பெற்றாவில் வணிகம் செய்யும் தமிழ் வணிகாகளுக்கு முத்து முடமனது பெரும் கவலை.

முத்து முடமானாலும் பெற்றாவில் கூலிகளை அதிகாரம் செய்வதை தன் குடும்பததுக்குள் வைத்துக்கோண்டான். முத்துவுக்கும் மெனிக்காவுக்கும் பிறந்தவன் ஒரேமகன் பிச்சைமுத்து. கத்தோலிக்கன் என்றபடியால் கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் எட்டாம் வகுப்பு வரை படித்தான். படிப்பு ஏறவில்லை. சண்டித்தனம் அந்த இடததைப் பிடித்தது. தகப்பனைப் போல திடகாத்திரமான உடல் கொண்டவன். மூன்று மொழிகளும் சரளமாகப் பேசுவான். அவனுக்கு மூட்டை தூக்க விருப்பமில்லை. நாட்டாண்மை சங்கத்தின் தலைவர் பதவியை தன் தகப்பனின் உதவியொடு பிடித்து அதகாரத்தைக் கைப்பற்றினான். முத்துவைப் போல் பிச்சை அரசியல் வாரிசுகள் போல் வாரிசானான். அரசியல் வாரசுகளைப் போல நாட்டாண்மை பதவியின் ஆதிக்கமும் தொடர்ந்தது.

********

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் – கனடா) (29-Oct-16, 3:43 am)
பார்வை : 208

மேலே