நிழலில் மறைந்த நிஜங்கள்

நிழலில் மறைந்த நிஜங்கள்...

இரத்த வெள்ளத்தில் மனிதன்
வேடிக்கை பார்க்கின்றது மனிதம்
இறந்தபின் இரங்கல் அறிவித்து
போலி கண்ணீர் வடிக்கின்றது உலகம்...

கருப்புத்துணியால் கண்ணை
மறைத்தவள் கையில் தராசு
பணத்தின் சுமை தாங்காது
பாதாளத்திற்குள் சிறைவைக்கிறாள்
நீதியை....

பசியில் அழுகிறது குழந்தை
நடிகனை பால் கொண்டு
குளிப்பாட்டுகிறான் தந்தை...
மடியில் சுமந்த மழலையை
நடு வீதியில் கையேந்திட
அடகு வைக்கிறாள் அன்னை...

பெண் பிணத்திலும் தன் காமப்பசி தீர்க்கிறான்
காமுகன்..
எரிந்த சாம்பலிலும் பணம் பார்க்கிறான்
பண வெறி பிடித்தவன்...

வயிற்றுப்பிழைப்பிற்கு தன் மானத்தை விற்கிறாள்
மாது...
தன் கற்பினை விலையாக கொடுப்பவன்
மணம் முடிக்கிறான் கற்புக்கரசியை...

காதல் என்ற பெயரில் காமலீலைகளை
அரங்கேற்றுகிறான்...
ஒரு நிமிட சுகத்திற்காய் பெண்ணவளும் பிணை
வைக்கிறாள் தன் பெண்மையை...
காலம் கடந்து உதித்த கரு உலகை கண்டதும்
தூக்கி வீசுகிறாள் குப்பைத்தொட்டியில்...

சாதி வெறியில் குளிக்கிறான் உதிரத்தில்
தன் உயிர் காக்க அவன் உதிரம் வேண்டி
நிற்கிறான்...
உருவம் வேறு உதிரம் ஒன்று என
ஏற்றுக்கொள்ளவும் ஏனோ மறுக்கிறான்..

மண்ணில் வாழும் வேளை முகமூடியால்
அகம் மறைத்தே போலி வேடம் போடுகிறான்...
மண்ணுக்குள் மடிந்து வாழும் வேளை
வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தே
கண்ணீரால் கல்லறையை நனைக்கின்றான்...

எழுதியவர் : அன்புடன் சகி (3-Nov-16, 9:09 pm)
பார்வை : 160

மேலே