பறைபாட்டு

கள்ளப்பணத்த
கருப்பு பணத்த
கடுமையா ஒடுக்கிப்புடுறன்னு - ஏழ
கடுகு டப்பா காசப் புடுங்கலாமா
சுவிஸ் வங்கியில்
சுழலும் பணத்த
சுறுக்கா கொண்டு வரன்னு - ஏழ
சுறுக்குப்பைய இறுக்கிக்கொல்லளாமா
கள்ளப்பணம் கருப்புப்பணம்
காகிதத்திலா கெடக்கு
கட்டிடம் தங்கமுன்னு
கண்ட இடத்தில் பரவியிருக்கு
வீட்டுல இல்ல - அட
வீடுகளாய் நிமுந்து கெடக்கு
நிலத்துல இல்ல - அட
நிலங்களாய் விரிஞ்சி கிடக்கு
ஆயிரம் ஐநூருக்கு விதிச்ச தட
ஆயாக்கடையில் காயுதய்யா இட்டிலி வட

சம்பளம் வாங்குனவன்
சங்கடத்தில் நிக்குறான்
கூலி வேல செய்யுறவன்
குடியில்லாம நௌியுறான்
பாக்கெட்டுல பணமிருந்தும்
பால் வாங்க முடியல
ஆயிரம் ரூபாயிருந்தும்
அவசரத்துக்கு ஒதவல
ஊழல ஒழிக்கச்சொன்னா
ஊருகா பாட்டில ஒடக்கிறாங்க

சுத்திப்பாக்க போனவங்க
சுத்திக்கிட்டே இருக்குறாங்க
பேருந்துக்கு பணமில்ல
பேந்த பேந்த முழிக்கிறாங்க
கடையில திங்கிறவங்க
கட கடையாய் திரியிறாங்க
பணமா பணமிருந்தும்
பசியினிலே திணறுறாங்க
கள்ளப்பணம் ஒழிக்க சொன்னா
கஞ்சிப்பானைய ஒடக்கிறாங்க

முந்தானையில் முடிஞ்சது
ஐநூரும் செல்லல
ஆயிரமும் செல்லல
வேட்டியில மடிஞ்சது
வேர்வை நாத்தம் போகல
வெத்தலைக்கும் வழியில்ல
வெறும் வாயி நமிக்கிது
வங்கியில கணக்கு இல்ல
வெல வெலத்துப்போகுது
ஏடிஎம்மு சிரிக்கிது
லஞ்சத்த ஒழிக்க சொன்னா
லம்பா நம்மள சுருட்டுறாங்க

- மணிமாறன் மகிழினி
புத்தர் கலைக்குழு

எழுதியவர் : மணிமாறன் மகிழினி (10-Nov-16, 11:00 pm)
பார்வை : 128

மேலே