காதலை நேரில் சொல்லும் தைரியம் யாருக்குண்டு

காதலை நேரில் சொல்லும் தைரியம் யாருக்குண்டு?

கடிதம் மூலமும், கைபேசி குறுஞ்செய்தி மூலமும்தானே

காதல் அழைப்புகளும், காதலிக்க அழைப்புகளும் பறக்கும்...

பலவற்றிற்கு ஒத்திகை பார்த்திருப்போம்,

காதலை சொல்வதில் மட்டும் நேரடியாக அரங்கேற்றம் தான்,

ஏனென்றால் எப்படி சொல்வதென்றே புரியாது, தெரியாது...

நானும் என் காதலை சொல்ல கையாண்ட முறை "குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றம்".

அந்தச் செய்தி காற்றில் அலைகளைத் தடவி என்னவனின் கைபேசியை வருடியது,

என் காதலன் அனுபவிக்கும் முன் காற்று அனுபவித்தது என் காதலை.

எங்களுக்குள் காதல் மொட்டு விரிந்து, மலர்ந்து, மனம் பரப்பிக் கொண்டிருந்தது,

திடீரென்று ஒரு சலசலப்பு........

அவனின் எண்ணம்: இது சரி வருமா என்று...

என் எண்ணம்: ஆற்றில் இறங்கி விட்டோம் எப்படியாவது நீந்திக் கடந்து விடுவோம் கரையை என்று...

அதற்குள் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது பல பல துன்பங்களின் வடிவில்...

கரையே புரண்டாகிவிட்டது இனி எங்கு கரை சேர?
~~~~~~~~~~~~~~~~~~...!?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...!?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~...!?
இப்போது மனம் "புயலுக்குப் பின் அமைதி" யாய் காத்திருக்கிறது

அமைதி காத்தால் புயல் வரவில்லை என்றாகிவிடுமா...?

ஈரம் காய்ந்ததனால் ஆற்றில் இறங்கவில்லை என்றாகி விடுமா...?

நாங்கள் அமைதியாய் இருந்தால் எங்களுள் காதல் இல்லை என்றாகிவிடுமா...?

"பொறுத்தால் பூமியையும் ஆளலாம்
காத்திருந்தால் காதலையும் கைவசமாக்கலாம்..."

~~~@@@~~~@@@~~~@@@~~~@@@~~~@@@~~~@@@~~~

எழுதியவர் : jansi (18-Nov-16, 12:06 pm)
பார்வை : 180

மேலே