நிர்வாண நிலங்கள்

மண்ணில் நெல்மணிகள் காற்றில் தலையசைக்க
வண்ணப் பூக்கள் தன்முகம் சிரிக்க
தண்ணீரும் ஓடையில் ஓடி சலசலக்க
கண்ணை மூடிய திரையிலே வருகிறது......


மேகத்தின் விழிகளில் பார்வை மங்கியதோ?...
பூமியின் தாகத்தைத் தணிக்க மறந்ததே...
பொன்னி நதியும் தூங்கிப் போனதால்...
பொன் விளைவதும் நின்று போனதே......


நிலவின் ஒளியில் நிலமும் சுடுகிறது...
நீரின்றி உடலும் வெடித்துக் கிடக்கிறது...
வாய்விட்டு அழுதிட வார்த்தைகள் இல்லை...
வானைப் பார்த்து சோகத்தைச் சொல்கிறது......


நஞ்சை நிலமும் புஞ்சை நிலமும்
களர் நிலமாய்க் காட்சி தருவதால்
இமைகள் வழியே இதயத்தின் வழியே
இரத்தத் துளிகள் மழையாய்ச் சொட்டுகிறது......


பசுமைப் போர்த்திய பயிர்கள் சருகானதால்
பசியின் பிடியில் பஞ்சம் தலைவிரித்ததே...
ஆடையின்றி துடிக்கும் நிலமகளை நினைத்தே
ஆசையோடு வளர்த்தவன் அவள்மடியிலே சாய்கிறானே......

எழுதியவர் : இதயம் விஜய் (29-Nov-16, 2:35 pm)
Tanglish : nirvaana nilankal
பார்வை : 178

மேலே