நண்பா நீ நலமா -கங்கைமணி

நண்பா நீ நலமா ?
நான் நலமென உன்னிடம்
நவிலத்தான் ஆசையடா.

வான் தொட்ட மேகமெல்லாம்
எனைத்தொட்டால் பாவமென்று
எங்கோ போகிறது...,

வருகின்ற வழிநெடுகே
வசந்தத்தின் வாழ்வெடுத்து
வளர்ந்துவரும் தென்றல்கூட
எனைக்கண்டு ஒளிகிறது!

பெய்கின்ற மழைகூட
பெய்யாது என்னை வெறுக்க
இயற்க்கை அன்னை வீசிட
இழிந்தோனாய் நானானேன்.

உலகத்து மக்களெல்லாம்
உறுத்தலாக எனைப்பார்க்க
"எய்ட்ஸ்" எனும் அரக்கனிடம்
அகப்பட்டேன் இந்நாளில்!

இன்நோயால் என்னுருவம்
இல்லாது தேய்கிறது..,
புகலிழந்த என்னுள்ளம்
புலம்பியே தவிக்கிறது,

கருமுகிலின் மறைவுக்குள்
காட்சியற்ற நிலவைப்போல்,
பெருநோயின் பிடியிற்குள்
பெரும்பிழையாய் கிடக்கின்றேன்.

தனிமனித ஒழுக்கத்தை
தானறியாப் போனதினால்
தடம்பிரண்ட என்வாழ்வு
தரிசுநிலம் ஆனதுவே.

மடைமாற்றா புத்திதனால்
மதியிழந்து மோகத்தினால்
இலையுதிர்க்கும் மரத்தைப்போல்
உயிர் உதிர்க்கும் நிலையானேன்….

மலர்விட்டு மலர்தாவும்
மனம்கொண்ட வண்டினைப்போல்
தினம்வாலும் என்நண்பா
மடியாதே மதிகெட்டு!

புதையுண்டு போறவனின்
புலம்பளெனக்கொள்ளாதே.
நெருப்பள்ளும் நெனச்சோடு
அரும்புவதை கூறுகிறேன் …!

என் தாயும் எனைவெறுக்கும்
நான் பெற்ற இத்துன்பம்
என்னோடு இறந்தழிய.

ஒருத்தனுக்கு ஒருத்தியெனும்
உறுத்தலுடன் வாழ்ந்திடுவோம்.!
தலைநிமிர்த்தும் தமிழனெல்லாம்
இன்நோயால் தலைகுனியும் நிலையழிய...,

முன்னேறிப் படித்துவந்து-இன்நோயை
மருந்துகண்டு அழித்திடுவோம் !.
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (1-Dec-16, 11:54 pm)
பார்வை : 157

மேலே