பிச்சை புகினும்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிச்சை புகினும் கற்கை நன்றே
. பெரிய வார்த்தை சொல்லிவிட்டார் !
இச்சம யத்தில் பிச்சை எடுத்தும்
. இயலா நிலைக்கே விலைவாசி !
அச்சம் கொள்ளும் உலகம் சேயை
. அமர்த்து கிறது பலபணியில் !
இச்செயல் நீங்க என்னநாம் செய்வோம்
. இயன்றால் அவரை மதிப்போமே !
வீட்டு வேலை செய்யும் நபரோ
. விடலைச் சிறுவன் என்றானால்
கூட்டிப் பலவாய் வேலை கொடுத்துக்
. கூட்டு கின்றார் பணிச்சுமையை !
நாட்டின் பலமே நாளும் கற்கும்
. நல்லோர் கையில் உள்ளதெனக்
காட்டிச் சென்ற அப்துல் கலமைக்
. கையால் தொழுவோம் ! அறிவுறுவோம் !
படிக்கும் வயதில் படிக்கச் செய்தல்
. பாரில் பெற்றோர் கடனாகும்
படிக்கும் செயலை ஒழுங்காய்ச் செய்தல்
. பால கர்க்குக் கடனாகும் !
வடிக்கும் கண்ணீர் வாட்டம் நீங்க
. வாரீர் ! தினமும் கற்பீரே !
குடிக்கும் பழக்கம் போல்தான் ! கல்வி
. கொடுக்கா பழக்கம் ! மிகத்தீமை...!
- விவேக்பாரதி