இரும்புப் பெண்மணிக்கு இறுதி வணக்கம்

எக்கு இதயம் ஒன்று நின்றுபோனதால்
சுக்குநூறாகிக் கிடக்கிறது
சில கோடி இதயங்கள்!

இரட்டை விரல் உயர்த்தி
இன்முகத்தோடு உலவிய பெண்சிங்கமொன்று
இறுதிப்பயணத்தை முடித்துக்கொண்டு
இளைப்பாறுகிறது இயற்கையின் மடியிலின்று!

மாண்டியாவில் பிறந்த இம்மரகதம்
தாண்டிய தடைகள் பல்லாயிரம்!

வழக்குகள் வரிசை கட்டி வந்து
வலி தந்தபோதெல்லாம்
தைரியத்தையே தைலமாகத்
தடவிக் கொண்டவர்!

விரக்திகளை வீதியோடு விரட்டிட
விடாமுயற்சியை
வீட்டில் கட்டிப்போட்டு வளர்த்தவர்!

விழுந்தவுடன் எழும் இவரின் வேகத்தில்
பீனிக்ஸ் பறவைகளும் பின்வாங்கின!

பீனிக்ஸிற்கும் இவருக்குமான
வேறுபாடு ஒன்றுதான்
அவை சூரியனைத் தொட முயன்று சூடுபட்டவை!
ஆனால் இவரைத் தொட நினைத்தபோதெல்லாம்
சூரியன் சூடுபட்டது!

எவரின் மரணம்
எதிரியையும் கலங்கச் செய்கிறதோ
அவரின் வாழ்வு
அர்த்தம் நிறைந்ததென்றே அர்த்தம்!

அண்ணாவிற்கு கொடியில்
இடம்தந்த இயக்கம்
அம்மாவிற்கு இதயத்தில்
அல்லவா இடம் தந்தது!

அதிமுகவை அம்மா திமுகவாக
ஆண்ட பெருமை
ஜெயலலிதா எனும்
சாதனைப் பெண்ணையே சாரும்!

பெண்மை, ஆளுமை மற்றும்
கம்பீரத்திற்கான கலவையில்
இந்திராவை இரண்டடி
பின்னுக்குத் தள்ளியவர்!

சிறப்பான திட்டங்கள் சிலவற்றால்
மாநிலத்தை பல அடி
முன்னுக்குத் தள்ளியவர்!

இவர் அமர்ந்த தருணங்களிலெல்லாம்
முதல்வர் நாற்காலி
முறுக்கி விட்டுக்கொண்டது
தன் மீசையை!

சட்டசபையில் இவர்
நடந்துவரும் கம்பீரம் கண்டு
உறுப்பினர்களோடு சேர்ந்து
அவர்களது நாற்காலிகளும்
எழுந்து நிற்க எத்தனித்தன!

ஜெயலலிதா எனும் செம்மண்
செழிப்பாய் தாங்கிய வரையில்
இயல்பாய் வளர்ந்து நின்றது
இரட்டை இலை!

இனி அதைத் தண்ணீர் ஊற்றி
தளராமல் காக்க
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கட்சியில் எவருமில்லை!

- நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (7-Dec-16, 4:46 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 175

மேலே