ஜெ ஜெயலலிதா என்னும் நான்

ஜெ. ஜெயலலிதா 'என்னும் நீங்கள்'
உங்களை உற்று நோக்குகிறேன்
ஆனால் ஒரு போதும் வியந்ததில்லை
இந்த பாதை நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல
திணிக்கப்பட்டது
திணிக்கப்பட்ட ஒன்றின் மீது அசாத்திய பற்று தோன்றுமா?
இறுதிவரை பிடியை தளர்த்தவில்லை...
எது உங்களை உந்தியது?
காரணங்கள் பல உதித்தன...
ஆணி வேர் ஒன்று தான்
காதல்!!!!
ஆம் காதல் தான்
ஆனால் எதன் மீது காதல் என்று தான் கேள்வி??
அதிகாரம்? பணம்? தலைமை? பழிவாங்குதல்? கிட்டாத 'காதல் வாழ்வு'?
பணம் எனில், வெற்று உடம்பை தானே புதைத்தார்கள்
அதிகாரம் எனில்
உங்களை புதைக்கும் முன்
உங்கள் அதிகாரம் பறிக்கப்பட்டதே
பழிவாங்குதல் எனில்,
உங்களையே அல்லவா நீங்கள்
பழிவாங்கி கொண்டீர்கள்
கிட்டாத 'காதல்' எனில்
இதுவா காதல்?
உங்களை சிதைப்பதால்
எந்த காதலை நீங்கள் உணரப்போகிறீர்கள்
புரிந்து கொள்ளுங்கள்
தியாகங்கள் காதல் இல்லை
உண்மை தான்
நீங்கள் பெண் சிங்கம் தான்
நன்று...
குள்ள நரி கூட்டத்தில் பெண் சிங்கம்
ஆண்மையை உங்கள் காலில் நசுக்கினீர்கள்
உங்களை தற்காத்துக்கொள்ள….
அனைவரும் பெண் முன்னேற்றமாய் இதை கண்டனர்
இதுவா பெண் முன்னேற்றம்?
தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
இரு பாலினமும் இணைத்து செயல்படுவதே முன்னேற்றம்
பெண்களுக்கு நீங்கள் முன்னுதாரணம் என்கின்றனர்
என்னால் ஏற்க முடியவில்லை
'இன்றும் பெண்கள்
தனக்கு பிடித்தவற்றை
சுயம் தொலைக்காமல் செய்யமுடியாது'
என்பதை தானே உங்கள் வாழ்கை விளக்கியது...
இந்த பெண் முன்னேற்றம் எனக்கு வேண்டாம் ...
எல்லோரும் உங்களை வெற்றி மங்கை என்று போற்றுகின்றனர்
உண்மையில் இதுவா வெற்றி??
தைரியம் என்பது என்ன?
பிடிக்காத ஒன்றை உதறி
பிடித்ததை துணிந்து செய்வது
செய்யவில்லையே நீங்கள் !!!
திணிக்கப்பட்ட வாழ்வுக்காய்
முகமூடி அணிந்தீர்கள்
களைய மறுத்தீர்கள்
உங்கள் பயத்தை களையவில்லை
ஆனால் ‘திமிர்’ என்னும் ஒப்பனை புணைந்தீர்கள்
'பழிவாங்குதல்' காயங்களுக்கு மருந்தானது…
உங்களை சுற்றி எத்தனை பொய்கள் !
உண்மையுடன் சேர்த்து
உங்களையும் அல்லவா மறைத்து வைத்திருந்தார்கள்
'சாப்டியா' என்று கூட யாரும் உங்களை கேட்டிருப்பார்களா
என்று அறியேன்...
சிறகுகளே பாரமான வயதில்..
நீங்கள் ஏங்கிய அன்பு கிடைத்திருந்தால்
உங்களை யாரும் அணைத்து 'என் கண்ணம்மா என்று கூறியிருந்தால்'
யாரேனும் உங்கள் கரம் பற்றி 'எல்லாம் சரியாகும்' என்றிருந்தால்
காயம் அறிந்து
நீங்களே மருந்தாகிப்போயிருந்தால்
காயம் ஆறியிருக்கும்
அன்பு மலர்ந்திருக்கும்
அன்பை விதைத்திருப்பீர்கள்
இந்த அன்பு இடம் மாறி போனதால்
இத்தனை இழப்பு….
நீங்கள் இறந்த போது
விசும்பல்கள் நடுவே
நிம்மதி பெரு மூச்சே அதிகம் கேட்டது
நீங்கள் செய்த சில உதவிகளுக்கு பரிசே
இந்த ஏழைகளின் கண்ணீர்...
ஒருவேளை இந்த வாழ்வை நீங்கள் உதறியிருந்தால்
நாங்கள் ஒரு பெண் தலைவரை இழந்திருப்போம்
அது பெரிய இழப்பில்லை
நீங்கள் தேர்ந்த பாதை எனில்
உங்கள் சுயம் கண்டுருப்பீர்கள், நாட்டின் சுயத்தை உயர்த்தியிருப்பீர்கள்
நீங்கள் உங்கள் சுயத்தை இழந்துவிட்டேர்களே
உங்கள் முகமூடியை மட்டுமே இந்த உலகம் நம்பும்....
உங்களை இழந்தீர்கள்
உங்கள் கலை தாகத்தை சிதைத்தீர்கள்
எந்த வரம் வேண்டி இந்த தவ வாழ்வை ஏற்றீர்?
அறியேன்..
ஏன் பெண்னே?
ஏன்? ஏன்? ஏன்?
என்னால் இதை புரட்சியாக ஏற்க முடியவில்லை
ஒரு அபலை பெண்ணின்
சொல்லமுடியாத கதறலாகவே ஒலிக்கின்றது
இதயம் கணக்கின்றது
உன் மறைவிற்காகவும்
உன் 'சுயம்' சிதைக்கப்பட்டதிற்காகவும்
போய் வா பெண்னே
போய் வா
உன் சுயம் கண்டு வா
மீண்டும் 'அம்மு' வாக வா
அதுவரை
அபலை பெண்னே
நிம்மதியாய் உறங்கு….

எழுதியவர் : கீர்த்தனா (8-Dec-16, 12:20 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
பார்வை : 192

மேலே